சென்னை:தமிழகத்தில் உள்ள எட்டு அரசு போக்குவரத்து கழகங்களில், ஓட்டுனர்கள், நடத்துனர்கள், மெக்கானிக்கல் பிரிவு என 1.21 லட்சம் பேர் பணியாற்றி வருகின்றனர். ஓட்டுனர்கள், நடத்துனர்கள் பிரிவில், 30 சதவீதம் ஆட்கள் பற்றாக்குறை உள்ளது. அதனால், சில பணிமனைகளில், பஸ்கள் முழு அளவில் ஓடாமல் நிறுத்தப்பட்டு உள்ளன. அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியதாவது:
பிரச்னைக்கு உடனடி தீர்வு காணும் வகையில், 300க்கும் மேற்பட்ட பணிமனைகளில், தற்காலிகமாக ஓட்டுனர், நடத்துனர்களை தேர்வு செய்து வருகிறோம். 2,000 பேர் வரை தேர்வு செய்யப்பட உள்ளனர். இவர்களுக்கு, தினக்கூலி அடிப்படையில் ஊதியம் வழங்கப்பட உள்ளது. பயணியருக்கு பாதிப்பு இன்றி அரசு பஸ்கள் முழு அளவில் இயக்கப்படும். நிரந்தர பணியாளர்கள் வந்த உடனே, தற்காலிக பணியாளர்கள் நீக்கப்படுவர். இவ்வாறு கூறினர்.போக்குவரத்து தொழிற்சங்க நிர்வாகிகள் சிலர் கூறுகையில், 'பயணியர் பாதுகாப்பு விவகாரத்தில் அலட்சியம் காட்டாமல், ஆட்கள் பற்றாக்குறை ஏற்படும் போதே, நிர்வாகம் காலம் தாழ்த்தாமல் நிரந்தர பணியாளர்கள் நியமனம் செய்திருந்தால், இந்த பிரச்னை ஏற்பட்டு இருக்காது. 'இனியும் தாமதிக்காமல், ஓட்டுனர்கள், நடத்துனர்களை உடனடியாக நியமனம் செய்ய வேண்டும். காலாவதியான பஸ்களை நீக்கிவிட்டு, புதிய பஸ்களை உடனடியாக இணைப்பதிலும் நிர்வாகம் கவனம் செலுத்த வேண்டும்' என்றனர்.