உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / எஸ்.சி., எஸ்.டி., ஆணையத்தில் தீர்வுகாணப்படாத 2118 மனுக்கள்

எஸ்.சி., எஸ்.டி., ஆணையத்தில் தீர்வுகாணப்படாத 2118 மனுக்கள்

மதுரை : தமிழகத்தில் மாநில எஸ்.சி., எஸ்.டி., ஆணையம் அமைக்கப்பட்டு 4 ஆண்டுகளான நிலையில் வரப்பெற்ற 6291 மனுக்களில் 2118 மனுக்கள் தீர்வுக்காணப்படாமல் நிலுவையில் உள்ளன. ஆணையத்தின் செயல்பாடுகள் குறித்து வெளிப்படைத்தன்மை இல்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தமிழகத்தில் 2021 அக்.,13ல் மாநில எஸ்.சி., எஸ்.டி., ஆணையம் உருவாக்கப்பட்டது. ஓய்வு நீதிபதியை தலைவராக கொண்டு, துணைத்தலைவர், 4 உறுப்பினர்கள் உள்ளனர். இவர்களின் பதவிக்காலம் 3 ஆண்டுகள். இதன்படி 2024 அக்.,ல் இவர்களின் பதவிக்காலம் முடிந்து, 2025 பிப்.,ல் புதியவர்கள் நியமிக்கப்பட்டனர். தலைவருக்கு ரூ.2.50 லட்சம், துணைத்தலைவருக்கு ரூ.2 லட்சம், உறுப்பினர்களுக்கு தலா ரூ.1.50 லட்சம் சம்பளம் வழங்கப்படுகிறது. சென்னை அண்ணாசாலையில் உள்ள இந்த ஆணையத்திற்கு 2021 அக்.,13 முதல் 2025 ஜூன் 30 வரை வரப்பெற்ற மனுக்கள் 6291. இதில் தீர்வு காணப்பட்டவை 4173. மீதி 2118 மனுக்கள் தீர்வு கணப்படாமல் நிலுவையில் உள்ளது தகவல் அறியும் உரிமை சட்டத்தில் மதுரை சமூக ஆர்வலர் கார்த்திக் கேட்ட கேள்விகள் மூலம் தெரியவந்துள்ளது. அவர் கூறியதாவது: தேசிய குற்ற ஆவண காப்பக புள்ளி விபரத்தின்படி 2018 முதல் 2022 வரை தமிழகத்தில் ஆதிதிராவிடர் மக்கள் மீது 6966 வன்கொடுமை சம்பவங்கள் நடந்துள்ளன. குறிப்பாக 2018ல் ஆதிதிராவிடர் மக்கள் மீது 1413, 2022ல் 1716 வன்கொடுமை சம்பவங்கள் நடந்துள்ளன. தமிழகத்தில் மாநில ஆணையம் உருவாக்கப்பட்டு 4 ஆண்டுகள் நெருங்கும் நிலையில் இணையதளம் வசதி இல்லாததால் மனுக்களின் நிலை, வழக்குகளின் அப்டேட், விசாரணை முடிவு, பரிந்துரை போன்றவற்றை அறியும் வகையில் வெளிப்படைத்தன்மை இல்லை. தற்போதைய சூழலில் ஆணையத்தின் செயல்பாடுகள், வழக்குகளின் தீர்ப்புகள் குறித்து கருத்துக்கேட்க குழு அமைக்க வேண்டும். ஆணையத்தின் பலம், பலகீனம் குறித்து விவாதித்து புதிய மாற்றங்களை கொண்டு வந்தால்தான் ஆணையம் அமைத்ததற்கான நோக்கம் நிறைவேறும். இவ்வாறு கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Ram
ஆக 20, 2025 07:26

இந்த ஆணையத்தால் நாடு முனேற்றபாதையில் செல்வது தடைபடுகிறது, மற்றும் இவர்கள் செய்யும் ஓவர் buildupall மற்ற சமூக ஊழியர்கள் நேர்மையாக வேலைசெய்யமுடியாமல் தவிக்கிறார்கள்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை