பஸ்களில் கஞ்சா கடத்திய 26 பெண்கள் கைது
சென்னை: தமிழகத்தில் இந்த ஆண்டு, பஸ்களில் கஞ்சா கடத்திய, 26 பெண்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர். தமிழகத்திற்கு ஆந்திரா, ஒடிஷா, மணிப்பூர், கர்நாடகா, கோவா மற்றும் புதுச்சேரியில் இருந்து, அதிக அளவில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் கடத்தி வரப்படுகின்றன. போதை பொருள் கடத்தல் தொழிலில், ஆண்களுக்கு நிகராக பெண்களும் களமிறங்கி உள்ளனர். அவர்களிடம் சோதனை செய்வது குறைவு என்பதால், எளிதாக ஆடைக்குள் மறைத்து, போதைப் பொருட்களை கடத்தி வருகின்றனர். பெண்கள் பெரும்பாலும் கஞ்சா கடத்தலில் தான் ஈடுபடுகின்றனர். இதுகுறித்து போலீசார் கூறியதாவது: தமிழகம் மற்றும் வெளிமாநிலங்களைச் சேர்ந்த பெண்கள், ஆந்திரா, ஒடிஷா, மணிப்பூர் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து, பஸ்களில் கஞ்சா கடத்தி வருகின்றனர். போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக, ஒவ்வொரு மாதமும், 30 ஆண்கள் கைது செய்யப்படுவதுடன், குறைந்தபட்சம் மூன்று பெண்களும் சிக்கி விடுகின்றனர். இந்த ஆண்டு ஜனவரி முதல் செப்டம்பர் வரை, போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக, 375 வழக்குகள் பதிவாகி உள்ளன. அதன்மூலம், 289 ஆண்கள், 26 பெண்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர். அவர்களிடம் இருந்து, 4,407 கிலோ கஞ்சா மற்றும் இதர போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன. இவ்வாறு அவர்கள் கூறினர்.