விருதுநகரில் துவங்கியது 3வது புத்தக திருவிழா
விருதுநகர்:விருதுநகரில் மாவட்ட நிர்வாகம், பொதுநுாலக இயக்ககம் மற்றும் தென்னிந்திய புத்தக விற்பனையாளர், பதிப்பாளர் சங்கமான 'பபாசி' சார்பில் மரமும், மரபும் என்ற கருத்தை மையமாகக் கொண்டு மூன்றாவது புத்தகத் திருவிழா துவக்க நிகழ்ச்சி நேற்று நடந்தது. நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, வருவாய்த்துறை அமைச்சர் சாத்துார் ராமச்சந்திரன் திறந்து வைத்தனர். கலெக்டர் ஜெயசீலன், எம்.எல்.ஏ., சீனிவாசன் முன்னிலை வகித்தனர். தென்னிந்திய புத்தக விற்பனையாளர், பதிப்பாளர் சங்க செயலர் முருகன், சிவகாசி மேயர் சங்கீதா, டி.ஆர்.ஓ., ராஜேந்திரன், புலிகள் காப்பக துணை இயக்குனர் தேவராஜ் பங்கேற்றனர்.தங்கம் தென்னரசு பேசுகையில், ''மேற்கு தொடர்ச்சி மலை இந்தியாவிலேயே மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த மலைத்தொடர். இமயமலைக்கு முன்பாகவே வந்தது. ''இதன் பல்லுயிர் பெருக்கம் அதைச் சுற்றியுள்ள நம்மையும் வளர்க்கிறது. இங்குள்ள உயிரினங்களை காட்சிப்படுத்தியிருப்பது புத்தகத் திருவிழாவுக்கே சிறப்பு,'' என்றார்.சாத்துார் ராமச்சந்திரன் பேசுகையில், ''புத்தகங்களில் இருந்து தான் உங்கள் வாழ்க்கை ஆரம்பிக்கிறது. ஆனால், இளைஞர்கள் இன்று மொபைல் போனில் மூழ்கிக் கிடக்கிறீர்கள். இது எதிர்காலத்திற்கு சரியாக இருக்காது. ''அறிவு வளர வேண்டும் என்றால் புத்தகங்கள் வாசிக்க வேண்டும். அவ்வாறு வாசித்தால் தான் நமக்கு புதிய சிந்தனைகள் கிடைக்கும். உங்களுக்கு வேண்டியவர்களை அழைத்து வந்து புத்தகங்களை வாங்கிச் செல்லுங்கள்,'' என்றார்.புத்தகத் திருவிழாவில் நுாற்றுக்கும் மேற்பட்ட அரங்குகள் உள்ளன. தினசரி பள்ளி, கல்லுாரி மாணவர்களின் போட்டிகள், கலை நிகழ்ச்சிகள் நடக்கின்றன. மாலை, 4:00 மணி முதல், 5:00 மணி வரை நாட்டுப்புறக் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. மாலை, 6:00 மணி முதல் இரவு, 9:00 மணி வரை சிறப்புரைகள், பட்டிமன்றம் நடக்கின்றன.
புத்தகங்கள் இலவசம்
புத்தகத் திருவிழாவில், ஸ்டால் எண் 88ல் உள்ள, 'தினமலர்' நாளிதழின் தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட் ஸ்டாலில்,புகழ்பெற்ற எழுத்தாளர்களின் புத்தகங்கள் கிடைக்கின்றன. அந்துமணியின் பார்த்தது கேட்டது படித்தது 15 பாகங்கள், தொகுப்பாசிரியர் சமஸ் எழுதிய சோழர்கள் இன்று, பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை எழுதிய உங்களில் ஒருவன் மற்றும் மகா பெரியவா, பொன்னியின் செல்வன், பச்சை புடவைக்காரி, புத்தகத் தொகுதிகள், ஆன்மிக, அறிவியல், நவீன கதை, தன்னம்பிக்கை, மொழிபெயர்ப்பு புத்தகங்கள் இங்குள்ளன. 'தினமலர்' ஆண்டு சந்தா 1,999 ரூபாய் செலுத்தினால், 1,000 ரூபாய் மதிப்புள்ள புத்தகங்களை இலவசமாகப் பெறலாம்.