சுற்றுலா பயணிகளிடம் பணம் பறிப்பு கலால் துறையினர் 4 பேர் சஸ்பெண்ட்
மூணாறு: கேரளா, கொல்லம் பரவூரைச் சேர்ந்த நான்கு பேர் ஆக.,4ல் மூணாறு அருகே மறையூருக்கு சுற்றுலா சென்றனர். அவர்களை மறையூர் கலால் துறையினர் சோதனையிட்டபோது கஞ்சா பீடிகள் சிக்கின. அது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப் போவதாக கலால்துறையினர் மிரட்டி வழக்கில் இருந்து விடுவிக்க ரூ. ஒரு லட்சம் லஞ்சம் கேட்டனர். சுற்றுலா பயணிகளில் ஒருவர் வெளிநாட்டில் இருந்து வந்தவர் என்பதால் வழக்கு பதிவு செய்தால் வெளிநாடு திரும்புவதில் சிக்கல் ஏற்படும் என கருதி பணம் கொடுக்க முன்வந்தனர். மறையூர் கலால்துறை அலுவலகத்திற்கு பயணிகள் நேரில் சென்று ரூ.90 ஆயிரம் கொடுத்தனர். அதனை சுற்றுலா பயணிகளில் ஒருவர் ரகசியமாக அலைபேசியில் வீடியோ பதிவு செய்தார். அந்த விலை உயர்ந்த அலைபேசியை பறித்து கொண்ட அதிகாரிகள் பயணிகளை விடுவித்தனர். இச்சம்பவம் குறித்து லஞ்ச ஒழிப்பு போலீசில் பயணிகள் புகார் அளித்தனர். மறையூர் கலால் துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் சோதனையிட்டு விசாரித்தனர். அதில் பயணிகளிடம் இருந்து பணம், அலைபேசி பறித்தது தெரியவந்ததால், மறையூர் கலால்துறை உதவி ஆய்வாளர் கிஷோர்குமார், அதிகாரி அருண் டி.நாயரை 'சஸ்பெண்ட்' செய்து கலால்துறை ஆணையர் ஆகஸ்ட் இறுதியில் உத்தரவிட்டார். இச்சம்பவத்தில் மறையூர் கலால்துறை அலுவலக அதிகாரிகள் விபின்கிருஷ்ணன், சரத்குமார், திவ்யா உன்னி, டிரைவர் ஷானு 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டனர்.