உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அரசு அலுவலகங்களில் 40 மெகா வாட் மேற்கூரை சூரியசக்தி மின் நிலையங்கள் 

அரசு அலுவலகங்களில் 40 மெகா வாட் மேற்கூரை சூரியசக்தி மின் நிலையங்கள் 

சென்னை:சென்னை உட்பட நான்கு மாவட்டங்களில், அரசு அலுவலகங்களில், 40 மெகா வாட் அளவுக்கு, மேற்கூரை சூரியசக்தி மின் நிலையங்களை, தமிழக மின் வாரியத்தின் துணை நிறுவனமான, பசுமை எரிசக்தி கழகம் அமைக்க உள்ளது. தமிழகம் உட்பட நாடு முழுதும், சுற்றுச்சூழலை பாதிக்காத சூரியசக்தி, காற்றாலை மின் பயன்பாட்டை, மத்திய அரசு ஊக்குவித்து வருகிறது. தமிழகத்தில், தனியார் நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் போன்றவை, கட்டடங்கள் மேல், மேற்கூரை சூரியசக்தி மின் நிலையங்களை அதிகம் அமைத்து வருகின்றன. எனவே, அரசு அலுவலகங்களிலும், இந்த மின் நிலையத்தை அமைக்கும் பணியில், பசுமை எரிசக்தி கழகம் ஈடுபட்டுள்ளது. முதல் கட்டமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள அரசு அலுவலகங்களில், இட வசதியை பொறுத்து, 100 கிலோ வாட், 500 கிலோ வாட் என, ஒட்டுமொத்தமாக, 40 மெகா வாட் அளவுக்கு மேற்கூரை சூரியசக்தி மின் நிலையம் அமைக்கப்பட உள்ளது. இதற்கு ஒப்பந்த நிறுவனத்தை தேர்வு செய்ய, 'டெண்டர்' கோரப்பட்டு உள்ளது. டெண்டரில் பங்கேற்கும் நிறுவனங்களில், ஒரு யூனிட் மின்சாரத்திற்கு, குறைந்த விலை கோரும் நிறுவனத்திற்கு ஆணை வழங்கப்படும். அந்த நிறுவனம், தன் செலவில் மின் நிலையம் அமைத்து, 25 ஆண்டுகள் பராமரிக்க வேண்டும். மாதம், எவ்வளவு யூனிட் மின்சாரம் உற்பத்தியாகிறதோ, அதற்கான விலையை கணக்கிட்டு, நிறுவனத்திற்கு பசுமை எரிசக்தி கழகம் வழங்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !