மணிமேகலை பிரசுரத்தின் 48 நுால்கள் இன்று வெளியீடு
சென்னை:சென்னை நந்தனம், ஒய்.எம்.சி.ஏ., மைதானத்தில் நடக்கும், 48வது புத்தகக் காட்சி மேடையில், இன்று பகல் 12:00 மணிக்கு, மணிமேகலை பிரசுரம் சார்பில், 48 நுால்கள் வெளியிடப்படுகின்றன.இது குறித்து, மணிமேகலை பிரசுரத்தின் நிர்வாக இயக்குனர் ரவி தமிழ்வாணன் கூறியதாவது:மணிமேகலை பிரசுரத்தின் சார்பில், இன்று பகல் 12:00 மணிக்கு, சென்னை நந்தனம், ஒய்.எம்.சி.ஏ., மைதான புத்தகக் காட்சி மேடையில், 48 நுால்கள் வெளியிடப்பட உள்ளன. அதன் முதல் நிகழ்வாக, எழுத்தாளர் ராசி அழகப்பனுக்கு, தமிழ்வாணன் நினைவு விருதும், 1 லட்சம் ரூபாய் ரொக்கப் பரிசும் வழங்கப்படுகின்றன. அதைத் தொடர்ந்து, எழுச்சிமிகு எண்மர் எனும் விருது, ஜவஹர் பழனியப்பன், லியோ சாய் பிரகாஷ், டேஸ்டி சுப்பிரமணியன், கலக்கல் கந்தசாமி, மும்பை குமார், ரமேஷ்குமார், தயாளன், நவீன் ஆகியோருக்கு வழங்கப்பட உள்ளன.புத்தக வெளியீட்டில், 'தமிழ்வாணனின் மர்ம நாவல்கள் பாகம் -- 9; அந்துமணியின் பார்த்தது கேட்டது படித்தது பாகம் - 23; சஞ்சீவி ராஜா சுவாமிகளின் பக்கத்தை தேர்ந்தெடுங்கள் பயன் கிடைக்கும்; அமுதனின் காசி யாத்திரை செல்வோம்; மும்பை குமாரின் பொன்னியின் செல்வன்; முன்னாள் போலீஸ் அதிகாரி கருணாநிதியின் மக்களை நேசிக்க பயிற்சி பெறுங்கள்' உள்ளிட்ட, 48 நுால்கள் வெளியிடப்பட உள்ளன.நிகழ்ச்சியில், மதுரை உயர் நீதிமன்ற நீதிபதி ஸ்ரீமதி, ஐ.பி.எஸ்., அதிகாரி சிவகுமார், எஸ்.எம்.சில்க்ஸ் நிறுவனர் மனோகரன், நடிகர்கள் மவுலி, ஜெயபிரகாஷ், நடிகை சச்சு, பாடலாசிரியர் மதன் கார்க்கி உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.இவ்வாறு அவர் கூறினார்.