யு டியூபர் சவுக்கு சங்கர் வீடு சூறை துாய்மை பணியாளர்கள் 5 பேர் கைது
சென்னை, மார்ச் 27-'யு டியூபர்' சவுக்கு சங்கர் வீட்டில், கழிவு நீர் கொட்டி, அறைகளில் மலத்தை வீசிய, ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர்.'துாய்மைப் பணியாளர்களை, தொழில் முனைவோராக மாற்றும், அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடி திட்டத்தில் முறைகேடு நடக்கிறது. இதன் பின்னணியில், தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை உள்ளார். துாய்மைப் பணியாளர்களின் உழைப்பு சுரண்டப்படுகிறது' என, 'யு டியூபர்' சவுக்கு சங்கர் பேசி 'வீடியோ' வெளியிட்டு இருந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சென்னை கீழ்ப்பாக்கம், தாமோதர மூர்த்தி தெருவில், சங்கர் வசித்து வரும் வாடகை வீட்டை, மர்ம நபர்கள், இரு தினங்களுக்கு முன் சூறையாடினர். அவரது தாயார் கமலா கண் முன், வீடு முழுதும் கழிவுநீர் கொட்டி, அறைகளில் மலத்தை கரைத்து வீசி அசிங்கப்படுத்தினர். இது குறித்து கமலா, கீழ்ப்பாக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார், சி.எஸ்.ஆர்., ரசீது மட்டும் வழங்கினர். இச்சம்பவத்திற்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் கடும் கண்டனம் தெரிவித்தனர். அதைத் தொடர்ந்து கமலா அளித்த புகார் மனு மீதான விசாரணையை, சி.பி.சி.ஐ.டி.,க்கு மாற்றம் செய்து, டி.ஜி.பி., சங்கர் ஜிவால் உத்தரவிட்டார். அந்த மனு மீது, டி.எஸ்.பி., சசிதரன் தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.இச்சம்பவம் தொடர்பாக, நேற்று சென்னை மாநகராட்சி, ராயபுரம் மண்டலத்தில் பணிபுரியும் துாய்மைப் பணியாளர்கள் தேவி, பாரதி, விஜய், கல்யாணகுமார், செல்வா ஆகியோரை கைது செய்தனர்.