சென்னை:தமிழகத்தில், 894 நீர் நிலைகளில், ஜனவரி, 27, 28ல் நடத்தப்பட்ட கணக்கெடுப்பில், 6.80 லட்சம் பறவைகள் இருப்பது தெரியவந்து உள்ளது. தமிழகத்தில் ஆண்டுதோறும், ஜனவரி முதல் மூன்று மாதங்களுக்கு, ஒருங்கிணைந்த பறவை கள் கணக்கெடுப்பு நடத்தப்படும். நடப்பு ஆண்டுக்கான கணக்கெடுப்பை இரண்டு கட்டங்களாக நடத்த வனத்துறை முடிவு செய்தது. முதற்கட்டமாக நீர்நிலைகளில், ஜனவரி, 27, 28ல் பறவைகள் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இது தொடர்பாக, வனத்துறை வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழக வனப்பகுதிகளில், 179; நகர்ப்புறங்களில், 170; கிராமப்புறங்களில், 555 என, மொத்தம், 894 இடங்களில், நீர்நிலைகள், சதுப்பு நிலங்கள் போன்றவற்றில் பறவைகள் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில், 6,450 தன்னார்வலர்கள், 3,350 வனத்துறை பணியாளர்கள் என, 9,800 பேர் பங்கேற்றனர். கணக்கெடுப்பில், 389 இனங்களை சேர்ந்த, 6.80 லட்சம் பறவைகள் நீர்நிலைகளில் இருப்பது தெரியவந்துள்ளது. இவற்றில், 120 இனங்களை சேர்ந்த, 5.36 லட்சம் நீர்ப்பறவைகள், 269 இனங்களை சேர்ந்த, 1.43 லட்சம் நிலப்பறவைகள் இருப்பது உறுதியாகி உள்ளது. முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில், நடப்பாண்டில் பறவைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.