உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 80 கி.மீ. துாரம் இயங்கும் ரயிலில் 14 பெட்டிகள் 450 கி.மீ. துாரம் இயங்கும் ரயிலில் 10 பெட்டிகள் களமிறங்காத எம்.பி.க்கள், அலட்சிய அதிகாரிகள்

80 கி.மீ. துாரம் இயங்கும் ரயிலில் 14 பெட்டிகள் 450 கி.மீ. துாரம் இயங்கும் ரயிலில் 10 பெட்டிகள் களமிறங்காத எம்.பி.க்கள், அலட்சிய அதிகாரிகள்

ஸ்ரீவில்லிபுத்துார்: திருநெல்வேலியில் இருந்து 80 கிலோமீட்டர் தூரமுள்ள செங்கோட்டைக்கு 10 பெட்டிகளுடன் இயங்கும் ரயிலில் கூடுதலாக 4 பெட்டிகளை சேர்த்து 14 பெட்டிகளுடன் இயக்க தெற்கு ரயில்வே நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. ஆனால், செங்கோட்டையிலிருந்து 450 கிலோமீட்டர் தூரம் பயணிக்கும் மயிலாடுதுறை ரயிலில், 10 பெட்டிகள் மட்டும் உள்ள நிலையில் மக்கள் சிரமப்பட்டு பயணிக்கின்றனர். மதுரை- - செங்கோட்டை வழித்தடத்தில் தினமும் 3 நேரம், 14 பெட்டிகளுடன் பயணிகள் ரயில் இயங்கி வந்தது. இதனால் தென்காசி, விருதுநகர், மதுரை மாவட்ட மக்கள் பயணித்து வந்தனர். மதுரையில் இருந்து மயிலாடுதுறை/ஈரோடுக்கு தினமும் ஒரு ரயில் இயங்கியது. திண்டுக்கல்லில் இந்த ரயில் இரண்டாக பிரிக்கப்பட்டு ஒரு பாதி ஈரோடுக்கும், மற்றொரு பாதி மயிலாடுதுறைக்கும் செல்லும். இந்நிலையில் மயிலாடுதுறை-- திண்டுக்கல், மதுரை- - செங்கோட்டை இரு ரயில்களையும் இணைத்து செங்கோட்டை-- மயிலாடுதுறை ரயிலாக தற்போது இயங்கி வருகிறது. 14 பெட்டிகளுடன் இயங்கிய மதுரை - செங்கோட்டை ரயில் மயிலாடுதுறை வரை நீட்டிக்கப்பட்ட பிறகு 10 பெட்டிகளாக குறைக்கப்பட்டது. இந்த ரயிலில் எப்போதும் கூட்டம் நிரம்பி வழிகிறது. மக்கள் உயிரை பணயம் வைத்து படியில் தொங்கிக்கொண்டு பயணித்து வருகின்றனர். கூடுதலாக 6 பெட்டிகளை இணைத்து 16 பெட்டிகளுடன் இயக்க வேண்டுமென மக்கள் பல மாதங்களாக கோரிவருகின்றனர். இந்நிலையில் திருநெல்வேலியில் இருந்து 80 கிலோமீட்டர் தூரமுள்ள செங்கோட்டைக்கு 10 பெட்டிகளுடன் இயங்கிய பயணிகள் ரயிலில் மக்கள் கூட்டம் அதிகளவில் இருந்ததால் ஏப். 24ல் மதுரையில் நடந்த எம்.பிக்கள் ஆலோசனை கூட்டத்தில் திருநெல்வேலி காங்கிரஸ் எம்.பி. ராபர்ட் ப்ரூஸ் விடுத்த கோரிக்கையை ஏற்று மறுநாளே கூடுதலாக 4 பெட்டிகளை சேர்த்து இயக்க தெற்கு ரயில்வே உத்தரவிட்டுள்ளது.ஆனால், செங்கோட்டையில் இருந்து 450 கிலோமீட்டர் தூரம் உள்ள மயிலாடுதுறைக்கு இயங்கும் ரயிலில் கூடுதல் பெட்டிகள் இணைப்பதற்கு பதிலாக, இருந்ததையும் குறைத்து இந்த ரயில் இயங்குவதால் மதுரை, விருதுநகர், தென்காசி மாவட்ட மக்கள் சாதாரண நாட்களில் கூட உட்கார இடம் கிடைக்காமல் தவிக்கின்றனர். இது குறித்து ரயில் பயணிகள் சங்கங்கள், மக்கள் பலமுறை கோரிக்கை விடுத்தும் அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை. எனவே, திருநெல்வேலி எம்.பி.யைபோல் தென்காசி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, மயிலாடுதுறை தொகுதி எம்.பி.க்களும் ரயில்வே உயர் அதிகாரிகளை அழைத்து வந்து மக்களுடன் ரயிலில் பயணித்து அவர்களின் சிரமங்களை உணரச் செய்து, கூடுதலாக 6 பெட்டிகளை இணைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

R Hariharan
ஏப் 27, 2025 11:26

ஏன் பெரும்பாலான லோக் சபா மெம்பெர்ஸ் தென்னக ரயில்வே மீட்டிங் கலந்துகொள்ளவில்லை. கலந்து கொண்டவர்கள் எடுயும் கேட்க வில்லை. குறிப்பாக மைசூர் செங்கோட்டை வழி பெங்களூரு ஓசூர் சேலம் திண்டுக்கல் மதுரை ரயில் சேவை வேண்டும். திருநெல்வேலி கல்லிடை அம்பை தென்காசி விருதுநகர் காரைக்குடி சென்னை டெய்லி ரயில் வேண்டும். திருச்சி செங்கோட்டை வழி புதுக்கோட்டை காரைக்குடி விருதுநகர் தென்காசி இன்டெர் சிட்டி எக்ஸ்பிரஸ் வேண்டும். மேலும் செங்கோட்டை திருப்பதி, ஹைதெராபாத், மும்பை, கொல்கத்தா, நியூ வாரம் வரம் இரு முறை சேவை வேண்டும். சிலம்பு டெய்லி விட வேண்டும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை