UPDATED : நவ 06, 2025 06:41 AM | ADDED : நவ 06, 2025 06:38 AM
மதுரை: மத்திய அரசு விடுவித்தும் 'ஈகோ' போக்கால் ஆர்.டி.இ., (கட்டாயக் கல்வி உரிமை சட்டம்) தொகையை தமிழக அரசு வழங்காமல் இழுத்தடிக்கிறது. இதனால் 8 ஆயிரம் தனியார் பள்ளிகள் முடங்கும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளன. மத்திய, மாநில அரசுகளுக்கு இடையே கொள்கை முரண்பாடுகளால் தனியார் பள்ளிகளில் ஆர்.டி.இ.,யில் சேர்க்கையான மாணவர்களுக்கான கல்வி கட்டணத்தை தராமல் மத்திய அரசு இழுத்தடித்தது.இதனால் தனியார் பள்ளிகள் பொருளாதார ரீதியாக மிகுந்த நெருக்கடிக்கு தள்ளப்பட்டன. இதன் காரணமாக இக்கல்வியாண்டு ஆர்.டி.இ., சேர்க்கையை அரசு நிறுத்தி வைத்திருந்தது.இந்நிலையில் நீதிமன்ற உத்தரவையடுத்து ஒரு மாத்திற்கு முன் 2021 - 2022, 2022 - 2023 ஆகிய இரண்டு ஆண்டுகளுக்கான ரூ.586 கோடியை விடுவித்தது.இதையடுத்து இந்தாண்டுக்கான சேர்க்கையை தனியார் பள்ளிகள் தாமதமாக துவங்கிய நிலையில், மத்திய அரசு விடுவித்த தொகையை சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு வழங்காமல் தமிழக அரசு இழுத்தடிக்கிறது.இதனால் இரண்டு ஆண்டுகளாக பாதிக்கப்பட்ட தனியார் பள்ளிகள் மேலும் பாதிப்பை சந்தித்து முடங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.இதுகுறித்து தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு (பெப்சா) மாநில தலைவர் ஆறுமுகம் கூறியதாவது:தமிழகத்தில் 8 ஆயிரம் பள்ளிகளிலும் படிக்கும் 25 சதவீதம் சேர்க்கை மாணவர்களிடம் 3 ஆண்டுகளாக பள்ளிகள் கட்டணம் வசூலிக்கவில்லை. நுாற்றுக்கும் மேற்பட்ட பள்ளிகள் கடன் சுமையால் மூடப்பட்டுள்ளன.ஆர்.டி.இ., சட்டத்தை மீறக்கூடாது என 2013 -2014 முதல் இந்த இம்மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது.இதற்கான கட்டணத்தை ஒவ்வொரு கல்வி ஆண்டும் முடிந்து அடுத்த ஆண்டில் பள்ளிகளுக்கு வழங்கப்பட்டது. ஆனால் மூன்று ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து மத்திய,மாநில அரசுகளுக்கு இடையே அரசியல், கொள்கை ரீதியாக முட்டல் மோதல்கள் ஏற்படுகின்றன.ஆர்.டி.இ., சட்டத்தின்படி தமிழக அரசு நடந்துகொள்வதில்லை. மத்திய அரசின் சட்டத்தை மீறுகிறது. கட்டணம் வழங்கக் கோரி பள்ளிகள் வழக்குகள் தொடர்ந்தாலும் நீதிமன்ற உத்தரவுகளையும் தமிழக அரசு பின்பற்றுவதில்லை.அரசியல் கட்சிகள், சங்கங்கள் குரல் கொடுத்தாலும் கல்வித்துறை கவனத்தில்கொள்வதில்லை. பள்ளிகள் முடங்குகின்றன.தனியார் பள்ளி சங்கங்கள் போராடியவுடன் கட்டணத்தை விடுவித்தால் அரசு பணிந்தது என்ற பெயர் வந்துவிடுமோ என்ற 'ஈகோ'வுடன் அரசு செயல்படுகிறது.அந்த 'ஈகோ'வை கைவிட்டு மத்திய அரசு விடுவித்த, 2024, 2025க்கான ஆர்.டி.இ., கட்டணத்தை தமிழக அரசு உடன் பள்ளிகளுக்கு வழங்க வேண்டும் என்றார்.