946 மின் ரயில் இன்ஜின் 7 மாதங்களில் தயாரிப்பு
சென்னை: கடந்த ஏழு மாதங்களில் மட்டும், 946 மின்சார ரயில் இன்ஜின்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து, ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது: அனைத்து ரயில் பாதைகளும் மின்மயமாக்கம் என்ற இலக்கை விரைவில் எட்ட உள்ளோம். டீசல் இன்ஜின்கள் பயன்பாட்டை முழுதும் நிறுத்த திட்டமிடப்பட்டு உள்ளது. ரயில்வேயில் உள்ள 69,800 கி.மீ., துார பாதையில், இன்னும், 646 கி.மீ., துாரம் மட்டுமே மின்மயமாக்கப்பட வேண்டியுள்ளது. இதனால், மின்சார ரயில் இன்ஜின்களின் தேவை அதிகரித்துள்ளது. மேற்கு வங்கம் மாநிலம் சித்தரஞ்சனி, உத்தர பிரதேசம் மாநிலம் வாரணாசியில் ரயில் இன்ஜின்கள் தயாரிப்பு தொழிற்சாலைகள் உள்ளன. இதேபோல, பீஹார் மாநிலம் மாதேபுராவில், 12,000 குதிரைத்திறன் உடைய பிரத்யேக சரக்கு ரயில் இன்ஜின்கள் தயாரிக்கப்படுகின்றன. கடந்த சில ஆண்டுகளாக, மின்சார ரயில் இன்ஜின்கள் தயாரிப்பு அதிகரித்து வருகிறது. அதன்படி, கடந்த ஏப்ரல் முதல் அக்., வரை மட்டும், 946 இன்ஜின்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. கடந்த நிதி ஆண்டில் இதே காலக்கட்டத்தில், 773 ரயில் இன்ஜின்கள் தயாரிக்கப்பட்டன. இது, 22 சதவீதம் அதிகம். வரும் ஆண்டுகளில், மின்சாரத்தில் இயங்கும் ரயில் இன்ஜின்களின் பயன்பாட்டை அதிகரிக்க ரயில்வே திட்டமிட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.