மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் இன்று முதல் பவித்ர உற்ஸவம் காலத்தில் கரைந்து போன பக்தியும் கலாசாரமும் இணைந்த திருவிழா
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் பவித்ர உற்ஸவம் இன்று (நவ.,1) முதல் 5 நாட்களுக்கு நடக்கிறது. பட்டர்கள் கூறியதாவது: பவித்ர உற்ஸவம் என்றால் உற்ஸவங்களிலேயே புனிதமானது என்பது பொருள். இந்த உற்ஸவம் சிவாலயங்களில் ஐப்பசி மாதத்தில் நடக்கும். இதில் பக்தர்கள், கோயில் பணியாளர்களை பங்கேற்க வைத்து அவர்களை உற்சாகப்படுத்தும் நோக்கில் நடத்தப்படுகிறது. கோயில்களில் ஏற்படும் சிறு தவறுகளுக்கு இந்த உற்ஸவம் பிராயச்சித்தமாக இருக்கும். உற்ஸவ நாட்களில் கோயில் நன்றாக பராமரிக்கப்பட்டு அலங்கரிக்கப்படும். மூலஸ்தான சுவாமிகளுக்கும், உற்ஸவர்களுக்கும் திருமஞ்சனம், சிறப்பு பூஜைகள், நைவேத்தியங்கள், அலங்காரம், வேத பாராயணம், மேள வாத்தியங்களுடன் நீண்ட நேரம் வழிபாடு நடக்கும். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படும். அக்காலத்தில் வெளியூரில் வசிப்பவர்கள் பவித்ர உற்ஸவத்தை முன்னிட்டு குடும்பத்துடன் வந்து வழிபட்டு கோயிலில் தங்கி நண்பர்கள், உறவினர்களை சந்திக்கும் குடும்ப விழாவாக இருந்தது. பவித்ர உற்ஸவ காலத்தில் கோயிலுக்குள்ளும் புறப்பாடு காணும் வீதிகளிலும் பந்தல் அமைத்து வீதியை அலங்கரிப்பார்கள். வீட்டுவாசல்களில் கோலமிட்டு விளக்கேற்றி சுவாமியை வரவேற்பார்கள். இது பக்தியும் கலாசாரமும் பின்னிப் பிணைந்த திருவிழாவாக இருந்தது. நாளடைவில் வேலை, தொழில் நெருக்கடியால் பங்கேற்போரின் எண்ணிக்கையும் நேரமும் படிப்படியாகக் குறைந்துவிட்டது என்றனர்.