உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / காட்டுப்பகுதியில் தயாராகுது பிரமாண்ட மேம்பாலம்: நாங்க கட்டல என கைவிரிக்கும் அரசு துறைகள்

காட்டுப்பகுதியில் தயாராகுது பிரமாண்ட மேம்பாலம்: நாங்க கட்டல என கைவிரிக்கும் அரசு துறைகள்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

நமது நிருபர்

செங்கல்பட்டு மாவட்டம் ஊனமாஞ்சேரி அருகே ஆள் நடமாட்டமே இல்லாத வனப்பகுதியில், 5 கோடி ரூபாய்க்கு மேல் செலவு செய்து, பிரமாண்ட மேம்பால சாலை அமைக்கப்பட்டு வருகிறது. பணியை மேற்கொள்வது யார் என்று விசாரித்தால், 'இந்த பணிக்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமில்லை; நாங்கள் பணியை மேற்கொள்ளவில்லை' என, அரசு துறைகள் அனைத்தும் கைவிரிக்கின்றன. இந்த பணியில் எல்லாமே மர்மமாக இருப்பது, பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தி உள்ளது. செங்கல்பட்டு மாவட்டம், ஊரப்பாக்கத்தை அடுத்த ஊனமாஞ்சேரி ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில், பொதுப்பணித் துறை கட்டுப்பாட்டில் சித்தேரி, பெரிய ஏரி என, இரண்டு ஏரிகள் உள்ளன. இதில், சித்தேரி 100 ஏக்கர் பரப்பிலும், பெரிய ஏரி, 116.5 ஏக்கர் பரப்பிலும் பரந்து விரிந்துள்ளன. சித்தேரி ஊரின் அருகிலும், பெரிய ஏரி ஊரிலிருந்து, 1,000 மீட்டர் தொலைவில் வனப்பகுதியிலும் உள்ளன. பெரிய ஏரியை சுற்றிலும், 400 ஏக்கர் விவசாய நிலங்கள், மேய்க்கால் புறம்போக்கு நிலங்கள், வனத்துறைக்கு சொந்தமான காப்பு காடுகள் உள்ளன. மழை காலங்களில் காப்புக் காடுகளில் வழிந்தோடும் மழைநீர், பெரிய ஏரியில் கலக்கிறது. பெரிய ஏரி நிரம்பி, அதன் உபரி நீர் சித்தேரியை வந்தடைகிறது.

துரித வேகம்

பெரிய ஏரி கரையோரம் மற்றும் அதை ஒட்டி அமைந்துள்ள போக்கு கால்வாய், வனப்பகுதி ஆகியவற்றை மர்ம நபர்கள் ஆக்கிரமித்தனர். சித்தேரி கரையோரத்தில் இருந்து பெரிய ஏரி வரை, 600 மீ., துாரத்திற்கு 15 அடி அகலத்தில் திடீரென தார்ச்சாலை உருவானது.அடுத்தடுத்த நாட்களில் மின் கம்பங்களும் நடப்பட்டு, மின் இணைப்பு வழங்கப்பட்டதோடு, கட்டுமான பணிகள் வேகமெடுத்தன. தற்போது, அங்கு பிரமாண்ட மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது. அரசு பணிகளை காட்டிலும், துரித வேகத்தில் பணிகள் நடக்கின்றன. இதுவரை ௮௦ சதவீத பணிகள் முடிந்துள்ளன.

மழுப்பும் மின் வாரியம்

ஊராட்சியின் அனுமதியின்றி, அரசின் எந்த கட்டுமான பணிகளையும் மேற்கொள்ள முடியாது. ஆனால், ஊராட்சியிடமும் எந்த அனுமதியும் பெறப்படவில்லை. இது குறித்து, மாவட்ட வருவாய் துறை அதிகாரிகளிடம் கேட்டால், 'வனத்துறை பகுதியில் பணிகள் நடப்பது குறித்து, ஊர் மக்கள் கேள்வி எழுப்பினர். 'வருவாய் துறையில் எந்த அனுமதியும் பெறவில்லை; எங்களுக்கு ஏதும் தெரியாது' என கூறி விட்டோம்.'வனத்துறை, பொதுப்பணித்துறை, நீர்வளத்துறை என, அரசின் பல்வேறு துறைகளிலும் விசாரித்தோம். அப்படி ஒரு பணியை நாங்கள் மேற்கொள்ளவில்லை என, கைவிரித்து விட்டன. 'எந்த துறையும் கட்டுமான பணிக்கு அனுமதி தரவில்லை. யாரும் சுய லாபத்திற்கான பணியை மேற்கொள்கின்றனரா என, விசாரித்து வருகிறோம்' என்றனர்.வனப்பகுதியில் கட்டுமானத்திற்கு மின் இணைப்பு வழங்கப்பட்டது குறித்து, மறைமலை நகர் மின்கோட்ட செயற்பொறியாளர் மாணிக்கவேலனிடம் கேட்டபோது, 'அப்படியா, என்னவென விசாரிக்கிறேன்' எனக்கூறி, அதற்கு மேல் பேச மறுத்துவிட்டார்.இது குறித்து, மற்றொரு அதிகாரி ஒருவர் கூறியதாவது:

வனப்பகுதி ஆக்கிரமிப்பு

மனிதர்கள் நடமாட்டம் இல்லாத அடர்ந்த காட்டிற்குள், ஏரி மற்றும் வனப்பகுதியை ஆக்கிரமித்து, 120 மீ., நீளம், 30 அடி அகலத்தில் மேம்பாலம் கட்டப்படுகிறது. கட்டுமான திட்டம் குறித்த எந்த அறிவிப்பு பலகையும் இல்லை. இந்த மேம்பாலத்தில் இருந்து சற்று தொலைவில், பிரபல தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனம், சினிமா தயாரிப்பாளர் ஒருவருடன் சேர்ந்து, 300 ஏக்கர் பரப்பளவில், அடுக்குமாடி குடியிருப்பு திட்டத்தை செயல்படுத்த உள்ளது.

முறைகேடாக நடக்கிறது

ஆள் நடமாட்டம் இல்லாத பகுதி என்பதால், அங்கு போக்குவரத்து வசதி ஏதும் இல்லை. அதற்காக மேம்பாலம், சாலை உள்ளிட்ட வசதிகள் செய்யப்படுகின்றன. விரைவில், அந்த நிறுவனம் கட்டுமான திட்ட அறிவிப்பை வெளியிடலாம். அப்போது, இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வரும். கட்டுமான பணி நடக்கும் இடத்திற்கு, ஆளுங்கட்சி கொடியுடன் கார்கள் அவ்வப்போது வந்து செல்கின்றன. கட்டுமான நிறுவனம், மேலிடத்தின் நேரடி தொடர்பில் இருப்பதால், அதிகாரிகள் எல்லாம் கண்டும், காணாமல் உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.ஏற்கனவே பள்ளிக்கரணை சதுப்பு நிலைய எல்லைக்குள், 1,250 வீடுகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்புகளைக் கட்ட தனியார் நிறுவனத்திற்கு, அரசு அனுமதி அளித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்தநிலையில், செங்கல்பட்டு காட்டு பகுதியில், அரசு துறைகளுக்கு தெரியாமலேயே, மேம்பாலம் கட்டுமானப் பணி நடப்பது, பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தி உள்ளது. முறைகேடாக நடக்கிறது என்றால், பணிகளை தடுத்து நிறுத்த வேண்டும் என, ஊனமாஞ்சேரி மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

கூப்பாடு போட்டாலும் சீண்டக்கூட யாருமில்லை

பா.ம.க.,வைச் சேர்ந்த, ஊனமாஞ்சேரி ஊராட்சி தலைவர் மகேந்திரன் கூறியதாவது: வனப்பகுதியில் மேம்பால பணி நடக்கிறது. எல்லா துறைகளிலும் விசாரித்து விட்டோம்; நாங்கள் செய்யவில்லை என்கின்றனர். பணியை மேற்கொள்வது எந்த துறை என்று கூட தெரியவில்லை. ஊராட்சியிடம் எந்த அனுமதியும் பெறவில்லை. ஊர் மக்களும் என்ன வேலை நடக்கிறது என்று என்னிடம் கேட்கின்றனர்; பதில் கூற முடியவில்லை.வேலை செய்வோர், 'நமக்கு நாமே திட்டம்' என்று கூறுகின்றனர். அப்படியென்றால், ஊராட்சிக்கு தெரியாமல் எப்படி நடக்கும். ஊர் மக்களை கூட்டி போராட்ட எச்சரிக்கை விடுத்து பார்த்தோம்; கூப்பாடு போட்டோம்; சீண்டக்கூட யாரும் வரவில்லை. எல்லாம் மர்மமாகவே நடக்கிறது. கடைசியில் எப்படியும் அனுமதி என்று வரும்போது பார்த்துக் கொள்ளலாம் என, அமைதியாக இருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 47 )

Avudaiappan S
நவ 11, 2025 19:36

எல்லாம் நிழல் முதல்வரின் பினாமிகள் தான்.


Vasan
நவ 11, 2025 09:50

All the corrupt officers should be hanged to death.


Durai Kuppusami
நவ 11, 2025 08:46

மர்மம் எப்போது விலகும்....


Raju_ Sivam Garments
நவ 11, 2025 07:44

எனக்குக் கிடைச்ச நல்ல விஷயங்கள் ஒரு துளியக் கூட என்னோட குழந்தைகளுக்குக் கிடைக்க விட மாட்டேன் என்று சத்தியம் செஞ்ச மனித இனம் இப்படித்தான் எல்லாத்தையும் அழிச்சுக்கிட்டே இருக்கும்


Jaya Ram
நவ 11, 2025 07:16

ஒருவேளை அது பாகிஸ்தான், பங்களாதேஷ் தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டில் இருக்குமோ? அதுதான் தமிழ்நாடு அரசுத்துறைகள் பயப்படுகின்றனர் இங்கு அரசு செயல் படுகிறதா ?இல்லையா ? என்று தெரியவில்லை


மணிமுருகன்
நவ 10, 2025 23:35

மின்சார ்ணைப்பு கொடுத்்தால் மின்சார துறை அமைச்சர் ஏரிகளை பாதிக்கும் செயல் காடுகளை அழிப்பு என்பதால் இயற்கை வளத்துறை கனிம வளத்துறை அமைச்சரி மேம்பாலம் என்பதால் பொதுப்பணித்துறை அமைச்சர் ஊராட்சி என்பதால் நகர்பிற ஊராட்சி துறை அமைச்சரை் இவை அனைத்தையும் கண்டும் காணாமல் இருக்கும் அயர்லாந்து வாரிசு திராவிட மாடல் ஓட்டை விளம்பர மோக ஊழல் கட்சி திமுக கூட்டணி ஸ்டாலின் மீது வழக்கு போடுங்கள்


Uthamarseeli Kattanthadi
நவ 10, 2025 16:56

Article 356, ஏன் பயன்படுத்தக்கூடாது?. அரசை உடனே கலைக்கவேண்டும். ஆள்பவர்களின் சட்டமும் சரியில்லை ஆளும் சரியில்லை.


visu
நவ 10, 2025 15:25

அங்க மக்கள் திரண்டு ஒரு போராட்டம் நடத்தினால் போலீஸ் என்ன வென்று நடவடிக்கை எடுப்பார்கள்


Jaya Ram
நவ 11, 2025 07:20

மக்களைத்தான் ஒன்று சேர மாட்டார்கள் என்று தானே தைரியமாக இது நடக்கிறது, அரசு அலுவலர்கள் அதிகாரவர்கத்தின் மிரட்டலில் அடங்கி விடுவார்கள்.


அப்பாவி
நவ 10, 2025 15:25

சிலருக்கு அவுங்க ஊட்டிலேயே என்ன நடக்குதுன்னு தெரியாது கோவாலு... ஆட்டையே கடமை கோவாலு.


Krishnamurthy Venkatesan
நவ 10, 2025 15:03

இங்கு s.kolathur, கோவிலம்பாக்கத்தில் sV manor மேனர் அபார்ட்மெண்ட் அரசு அங்கீகாரம் பெற்று கட்டப்பட்டுள்ளது. துணை முதல்வர் உத்தரவின் பேரில் வெள்ள தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக பொது பணி துறையின் மூலம் ஆக்கிரமிப்புகள் பற்றி satellite மூலம் அளவீடு செய்ததில் ஆக்கிரமிப்பு இருப்பதாக கூறி இடிப்பதற்கு நோட்டீஸ் கொடுத்துள்ளனர். ஆனால் முறைப்படி அரசு அங்கீகாரம் பெற்றே வரையறைக்குள் கட்டப்பட்டுள்ளது. வங்கியில் லோன் வாங்கியவர்கள் பெரும் துயரத்திற்கு ஆளாகியுள்ளனர். ஆனால் அங்கீகாரம் இல்லாமல், முறையற்ற வழியில் யாரோ ஒருவரின் சுய லாபத்திற்காக மேம்பாலம் கட்டப்பட்டு வருகின்றது. நீதி, நேர்மை செத்துவிட்டது.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை