உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஓரடி பின்னால்; ஈரடி முன்னால் சமாளித்து உயரும் பங்கு சந்தை சென்செக்ஸ் 85,000 நிப்டி 26,000

ஓரடி பின்னால்; ஈரடி முன்னால் சமாளித்து உயரும் பங்கு சந்தை சென்செக்ஸ் 85,000 நிப்டி 26,000

மும்பை,:இந்திய பங்குச் சந்தை குறியீடுகள், சமீபகாலமாக தினம் ஒரு புதிய உச்சத்தை கண்டு வருகின்றன.சென்செக்ஸ் 85,000; நிப்டி 26,000 புள்ளிகள் என, புதிய மைல்கற்களை நேற்று தொட்டன. இந்த ஆண்டில் இதுவரை, சென்செக்ஸ், 12,606 புள்ளிகள் அதிகரித்துள்ளது; இது, 17.45 சதவீத உயர்வு.நிப்டி தன் பங்குக்கு கிட்டத்தட்ட 4,860 புள்ளிகள், அதாவது, 19 சதவீத உயர்வு கண்டு, ஒட்டுமொத்த கடந்த ஆண்டின் உயர்வை, 0.64 சதவீதம் மட்டுமே பாக்கியுடன், கிட்டத்தட்ட சமன் செய்திருக்கிறது. நிப்டி, கடந்த ஆண்டில் 20 சதவீதம் அதிகரித்த நிலையில், அந்த சாதனை வரக்கூடிய அடுத்த சில நாட்களிலேயே முறியடிக்கப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது. நடப்பு நிதியாண்டில், இந்திய பொருளாதார வளர்ச்சி, 6.80 சதவீதமாக இருக்கும் என, 'எஸ் அண்டு பி., குளோபல்' என்ற சர்வதேச தரஆய்வு நிறுவனத்தின் கணிப்பு வெளியானது. அத்துடன், கடன் வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி விரைவில் குறைக்கக்கூடும் என்ற தகவலும், பங்கு வர்த்தகத்துக்கு நேற்று உற்சாகம் அளித்தது. திங்களன்று மூன்றாவது நாளாக சென்செக்ஸ் 384 புள்ளிகள் உயர்ந்த நிலையில், நேற்றும் புதிய உச்சம் கண்டு, கிட்டத்தட்ட சமஅளவில், 14 புள்ளிகள் சரிவுடன் முடிந்தது.பன்னாட்டு நிதியம் உட்பட உலக அமைப்புகள் பலவும், இந்தியாவின் வளர்ச்சி குறித்து சாதகமான கணிப்புகளை வெளியிடுவதுடன், உலகிலேயே மிக வேகமான மற்றும் அதிகமான வளர்ச்சியை இந்தியா பெற்று வருவதும், பங்குச் சந்தைகளில் பிரதிபலிப்பதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

உள்நாட்டு முதலீடு

அன்னிய முதலீட்டாளர்களும், அன்னிய நிறுவனங்களும், இந்திய பங்குச் சந்தையில் தொடர்ந்து அதிக முதலீடு செய்வதும், உள்நாட்டு சிறுமுதலீட்டாளர்களின் பங்களிப்பு வேகமாக அதிகரிப்பதுமே சென்செக்ஸ், நிப்டியின் தொடர் உச்சத்திற்கு காரணமாக கூறுகின்றனர்.உள்நாட்டு கட்டமைப்பு முதலீடுகள் அதிகரிப்பு உட்பட, பல வலுவான பொருளாதார நிலவரத்தால் உயர்ந்து வரும் பங்குச் சந்தைகளுக்கு, அமெரிக்க மத்திய வங்கியான பெடரல் ரிசர்வ், 0.50 சதவீதம் கடன் வட்டியை குறைத்தது. இது, மேலும் சாதகமான சூழலை ஏற்படுத்தியுள்ளதாக கூறும் நிபுணர்கள், பெடரல் ரிசர்வ் நடவடிக்கைக்கு பின், 2 சதவீதம் உயர்வு கண்டுள்ள சந்தைகள், ரிசர்வ் வங்கி அடுத்த மாதத்தில் 0.25 சதவீதம் கடன் வட்டியைக் குறைக்க வாய்ப்புள்ளதால், மேலும் புதிய உச்சங்களை தொடக்கூடும் என்கின்றனர்.

சென்செக்ஸ் 1 லட்சம்

மியூச்சுவல் பண்டுகளில் மாதாந்திர முதலீடுகளான எஸ்.ஐ.பி., தொடர்ந்து அதிகரிப்பது, சென்செக்ஸ் உயர்வில் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்திய சந்தைகள், 'ஓரடி பின்னால்; ஈரடி முன்னால்' என, செயல்படுகின்றன. இந்நிலை நீடித்தால், அடுத்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களுக்குள், சென்செக்ஸ் 1 லட்சம் புள்ளிகளை தொடும் என்கின்றனர் நிபுணர்கள்.

என்ன காரணம்?

அமெரிக்க பெடரல் வங்கி கடன் வட்டியை குறைத்ததாலும், மேலும் குறைக்க உள்ளதாக வரும் தகவலாலும், அந்நாட்டில் டிபாசிட் மீதான வட்டி குறைந்து வருகிறது. எனவே, அன்னிய முதலீட்டாளர்களின் பார்வை, இந்திய பங்குச் சந்தைகள் மீது அதிகரித்துள்ளது.சமீபகாலமாக, அதிகரித்து வரும் செயலிகள், சில நிமிடங்களில் எளிதாக பரிவர்த்தனை செய்யும் டிஜிட்டல் வசதி போன்றவற்றால், ஐ.பி.ஓ.,விலும், பங்கு வணிகத்திலும் பங்குகளை வாங்குவோர் உள்நாட்டில் அதிகரித்துள்ளனர். கூடுதல் லாபம் பெறும் நோக்கில், பங்குகளை அதிகமானோர் விற்காமல் இருக்கும் போது, குறைந்த அளவே பங்குகள் வர்த்தகத்திற்கு வரும். மாறாக, பங்குகளை வாங்குவோர் சந்தையில் அதிகரித்தால், பங்குகள் விலை அதிகரித்து, சந்தைகள் தொடர்ந்து உயர்வதாகவும் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை