சென்னை: வங்கக்கடலில் அந்தமான் அருகே நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி படிப்படியாக வலுவடைந்தால், புயலாக மாற வாய்ப்புள்ளது, தமிழகத்தில் இன்று, நான்கு மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக, வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டல தலைவர் அமுதா கூறியதாவது:
தென் மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. நேற்று காலை வரையிலான 24 மணி நேரத்தில், நான்கு இடங்களில் அதிக கனமழையும், 15 இடங்களில் மிக கனமழையும், 76 இடங்களில் கனமழையும் பெய்துள்ளது. திருநெல்வேலி மாவட்டம் ஊத்து, நாலுமுக்கு, காக்காச்சி, கடலுார் மாவட்டம் சேத்தியாதோப்பு ஆகிய இடங்களில், 21 செ.மீ.,க்கு மேல் மழை பெய்துள்ளது. திருநெல்வேலி மாவட்டம் மாஞ்சோலையில் 19; கடலுார் மாவட்டம் பரங்கிப்பேட்டை, சிதம்பரம், புவனகிரி, நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளை, தஞ்சாவூர் மாவட்டம் மதுக்கூர் ஆகிய இடங்களில் தலா, 14 செ.மீ., மழை பதிவாகியுள்ளது. இன்று வலுப்பெறும் மலாக்கா ஜலசந்தி மற்றும் அதையொட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, நேற்று காலை நிலவரப்படி மலேஷியா மற்றும் அதை ஒட்டிய மலாக்கா ஜலசந்தி பகுதிகளில் நிலவுகிறது. இது, மேற்கு- வடமேற்கு திசையில் நகர்ந்து, தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில், காற்றழுத்த தாழ்வு மண்டலமாக இன்று வலு பெறக்கூடும். இது, மேலும் அதே திசையில் நகர்ந்து, நாளை தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் புயலாக உருவெடுக்கும். குமரிக்கடல் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் வளி மண்டல கீழடுக்கு சழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, குமரிக்கடல் மற்றும் அதை ஒட்டிய இலங்கை, தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் இன்று காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இதுவும் படிப்படியாக வலுப்பெற வாய்ப்புள்ளது. தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதில், அந்தமான் அருகில் காணப்படும் சுழற்சி புயலாக உருவாக வாய்ப்புள்ள நிலையில், குமரிக்கடல் பகுதியில் உருவாக உள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியுடன் இணைந்து, வலுவான புயலாக மாறுமா என்பது குறித்து ஆராய்ந்து வருகிறோம். ஒரு வாரம் கனமழை இன்று அல்லது நாளை இதில் முன்னேற்றம் என்ன என்பது தெரிந்து விடும். இருப்பினும், தென் மாவட்டங்களில் ஒரு வாரத்துக்கு கனமழை தொடர வாய்ப்புள்ளது. தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்கள், உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இன்று இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழகத்தில் அடுத்த மூன்று நாட்களுக்கு மிதமான மழை தொடரும். அதேநேரத்தில், கன்னியாகுமரி, திருநெல்வேலி, துாத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. துாத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் நாளை கனமழை பெய்யும். 'ஆரஞ்ச் அலெர்ட்' மயிலாடுதுறை, கடலுார், விழுப்புரம், செங்கல்பட்டு, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் வரும் 29ல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இதற்கான 'ஆரஞ்ச் அலெர்ட்' எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுஉள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டமாக காணப்படும்; ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. ஆழ்கடலுக்கு சென்ற மீனவர்கள் உடனடியாக கரை திரும்ப வேண்டும். தமிழக கடலோர பகுதிகள், குமரிக்கடல், மன்னார் வளைகுடா பகுதிகளில் சூறாவளி காற்று வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம். இவ்வாறு அவர் கூறினார்.
5 சதவீதம் கூடுதல் மழை
தமிழகம், புதுச்சேரியில், அக்டோபர் 1 முதல் நேற்று வரையிலான காலகட்டத்தில், இயல்பான நிலையில் 33 செ.மீ., மழை பெய்ய வேண்டும்; 34 செ.மீ., மழை பெய்துள்ளது. இயல்பை விட 5 சதவீதம் கூடுதல் மழை பெய்துள்ளது. இதில் தென்காசி, திருநெல்வேலி மாவட்டங்களில் மிக அதிகபட்ச மழை பெய்துள்ளது. சென்னை, செங்கல்பட்டு, திண்டுக்கல், கரூர், பெரம்பலுார், சேலம், திருப்பூர் ஆகிய மாவட்டங்களில், இயல்பை விட 20 முதல் 43 சதவீதம் மழை குறைவு என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.