உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தனியாருடன் போட்டி போட முடியாமல் திணறும் ஆவின் : பால் உற்பத்தியாளர்கள் குற்றச்சாட்டு

தனியாருடன் போட்டி போட முடியாமல் திணறும் ஆவின் : பால் உற்பத்தியாளர்கள் குற்றச்சாட்டு

'பால் கொள்முதல் மற்றும் விற்பனை செய்வதில் தனியாருடன் போட்டி போட முடியாமல், 'ஆவின்' நிர்வாகம் திணறி வருகிறது' என, பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் குற்றச்சாட்டியுள்ளனர். தமிழ்நாடு பால் உற்பத்தி மற்றும் பால் பண்ணை மேம்பாட்டுத்துறை கட்டுப்பாட்டில், மொத்தம் 10 ஆயிரத்து, 814 தொடக்க பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்கள் உள்ளன. இதில், 1,856 மகளிர் சங்கங்கள் உள்பட, மொத்தம் 9,189 சங்கங்கள் செயல்பாட்டில் உள்ளன.தமிழகத்தில் தினசரி, 2.06 கோடி லிட்டர் பால் உற்பத்தி செய்யப்படுகிறது. இதில், ஆவின் நிறுவனம், 3.87 லட்சம் உற்பத்தியாளர்களிடம் இருந்து, 30 லட்சம் லிட்டர் வரை, கொள்முதல் செய்து வருகிறது. கடந்த, 2022, நவ., 5 முதல், பசும்பால் லிட்டருக்கு, 35 ரூபாய்; எருமைப்பால் லிட்டர், 44 ரூபாய் என, ஆவின் நிறுவனம், பால் கொள்முதல் செய்து வருகிறது.கடந்த, 2023, டிச.,18 முதல், ஊக்கத் தொகை, லிட்டருக்கு, 3 ரூபாய் வழங்கப்படுவதால், பசும்பால் லிட்டர், 35 ரூபாயில் இருந்து, 38 ரூபாய்; எருமைப்பால், லிட்டர், 44 ரூபாயில் இருந்து, 47 ரூபாய் என, விலை கிடைக்கிறது. கடந்த, மார்ச், ஏப்., மாதங்களில், தினமும், 25 முதல், 26 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் இருந்தது.

ஐந்து லட்சம் லிட்டர்

மே, ஜூன் மாதத்தில் பெய்த கோடை மழையில், பசுந்தீவனம், தண்ணீர் பற்றாக்குறை இல்லாததால், பால் உற்பத்தியும் அதிகரித்தது. இதில், ஆவினுக்கு, பால் கொள்முதல், நான்கு முதல், ஐந்து லட்சம் லிட்டர் அதிகரித்துள்ளதாக ஆவின் நிர்வாகம் தெரிவித்து வருகிறது.இதுகுறித்து, தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நலச்சங்க தலைவர் வக்கீல் ராஜேந்திரன் கூறியதாவது: ஆவின் பால் லிட்டருக்கு, 3 ரூபாய் ஊக்கத் தொகை மற்றும் கோடை மழையால், பசுந்தீவனம் உற்பத்தி காரணமாக, ஆவினுக்கு, தினமும், 35 லட்சம் லிட்டர் என, பால் கொள்முதல் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.தற்போது, சென்னை, சேலம், மதுரை, திருச்சி, கோவை, ஈரோடு, திருவண்ணாமலை உள்ளிட்ட ஒன்றியங்களில், மொத்தம், 250 கோடி ரூபாய் அளவில், வெண்ணெய், பால் பவுடர் இருப்பு உள்ளது. வெண்ணெய், பவுடர் இருப்பு இருந்தால் தான், வங்கியில் அடகு வைத்து கடன் பெற முடியும். தவிர, பால் கொள்முதல் குறையும்போது, இவை பயன்படுத்த முடியும்.

தயிர்

பால் விற்பனை தொடர்பான திட்டங்கள் எதுவும் இல்லை. அதற்கான கட்டமைப்பும் ஏற்படுத்தவில்லை. சென்னை உள்ளிட்ட பகுதிகளில், பால், தயிர் தேவை அதிகளவில் உள்ளது. இதில், சென்னைக்கு மட்டும் தினமும், 2 லட்சம் லிட்டர் தயிர் தேவைப்படுகிறது. ஆவின் தயிர் பாக்கெட் பிரித்த இரண்டு மணி நேரத்திற்கு மேல் பயன்படுத்த முடியவில்லை.தனியார் தயிர் கூடுதல் நேரம் பயன்படுத்த முடிகிறது. பால் மற்றும் தயிரை தனியார் நிறுவனம் அதிகளவில் விற்பனை செய்கிறது. குஜராத்தின் 'அமுல்', கர்நாடகாவின், 'நந்தினி' கூட்டுறவு நிறுவனம் கூட, தமிழகத்தில் பால் கொள்முதல் செய்வதுடன், பால் மற்றும் தயிர், பால் பொருட்கள் விற்பனை வர்த்தகத்தை விரிவு செய்து வருகிறது. தனியார் மற்றும் வெளிமாநில கூட்டுறவு பால் நிறுவனம், முயல் வேகத்தில் செல்லும் நிலையில், 'ஆவின்' ஆமை வேகத்தில் செல்வதால், தனியாருடன் போட்டி போட முடியாத நிலையில் உள்ளது. சென்னையை தவிர, மற்ற மாவட்டங்களில், ஆவின் பால், தயிர் விற்பனையில் இரண்டாம் இடத்தில் தான் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

தவறான தகவல்

தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நலச்சங்க பொதுச்செயலர் எம்.ஜி.ராஜேந்திரன் கூறியதாவது: அமைச்சர், ஆவின் நிர்வாகம் எடுத்த முயற்சியால் பால் கொள்முதல் அதிகரித்துள்ளதாக தவறான தகவல் கூறுகின்றனர். மழை பெய்து, பசுந்தீவனம் கிடைப்பதால் பால் கொள்முதல் அதிகரித்துள்ளது. பால் விற்பனை அதிகரித்தால் தான், கொள்முதல் அதிகரிப்பு என்று கூற முடியும்.அடர் தீவனம், கலப்பு தீவனம் உள்ளிட்டவை 40 சதவீதம் விலை உயர்ந்துள்ளபோதும், தமிழக அரசு கண்டுகொள்ளாமல் உள்ளது. 90 சதவீதம் கலப்பின பசு மூலம் பால் கொள்முதல் செய்யப்படுகிறது. லோக்சபா தேர்தலுக்கு பின் கொள்முதல் விலை உயர்த்துவதாக கூறினர். 40 இடங்களில் வெற்றி பெற்றும், விலை உயர்வு குறித்து அறிவிக்காதது ஏமாற்றத்தை அளிக்கிறது. தி.மு.க., ஆட்சியின் மீது, தற்போது நம்பிக்கை இல்லாத நிலையில் தான், பால் உற்பத்தியாளர்கள் உள்ளனர்.தற்போதைய நிலையில், பசும் பால் லிட்டருக்கு உற்பத்தி செலவு, 63.25 ரூபாயாக உள்ளது. ஆனால், ஆவின் லிட்டருக்கு, 38 ரூபாய் வழங்குவதாக கூறுகிறது. 4.3 கொழுப்பு சத்து, 8.2 இதர சத்துகள் கொண்ட பாலுக்கு தான், 38 ரூபாய் கிடைக்கிறது. சராசரியாக, லிட்டருக்கு, 31 முதல், 32 ரூபாய் தான் உற்பத்தியாளர்களுக்கு வழங்கப்படுகிறது. பால் உற்பத்தி செலவு குறித்து ஆய்வு செய்து, எருமை பால் லிட்டருக்கு, 90 ரூபாயும், பசும்பால் லிட்டருக்கு, 83 ரூபாய் வழங்கிட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் கே.முகமதுஅலி கூறியதாவது: தமிழகத்தில், தினமும் 2.06 கோடி லிட்டர் பால் உற்பத்தியாகிறது. ஆவின் நிறுவனம், 10 முதல், 12 சதவீதம் மட்டுமே பால் கொள்முதல் செய்கிறது. மீதம் 80 சதவீதம் அளவில், தனியார் கொள்முதல் செய்கிறது. 50 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்வதற்கான கட்டமைப்பை, ஆவின் உருவாக்க வேண்டும்.

மானியம் நிறுத்தம்

தற்போது, பால் கொள்முதலில் ஆவினுக்கு பெரிய அளவில் அதிகரிக்கவில்லை. உள்ளூர் பால் விற்பனையும் சேர்த்து, கொள்முதல் மற்றும் விற்பனைக்கு கணக்கு காட்டி வருகின்றனர்.கடந்த, அ.தி.மு.க., ஆட்சியில், தீவனத்துக்கு, 10 முதல், 15 சதவீதம் மானியம் வழங்கப்பட்டது. தி.மு.க., ஆட்சியில், இந்த மானியம் நிறுத்தப்பட்டுவிட்டது. தீவன விலை உயர்வை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. ஆவின் உற்பத்தியாளர்களுக்கு, ஊக்கத் தொகையுடன், லிட்டருக்கு 33 முதல், 35 ரூபாய் கிடைக்கிறது. தனியாரில், லிட்டருக்கு, 40 முதல், 45 ரூபாய் கிடைக்கிறது. 2 கோடி லிட்டர் பால் உற்பத்தியில், ஆவின், 35 லட்சம் லிட்டர் கொள்முதல் செய்வதாக கூறுவது சாதனை கிடையாது.கர்நாடகாவில், ஒரு கோடி பால் உற்பத்தியில், 'நந்தினி' கூட்டுறவு நிறுவனம், 50 லட்சம் லிட்டரும்; குஜராத்தில், ஒரு கோடி லிட்டர் பால் உற்பத்தியில், 'அமுல்' கூட்டுறவு நிறுவனம் 65 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்கிறது.

தனியாருடன் போட்டி

பால் கொள்முதல் மற்றும் விற்பனைகளில், நுகர்வோர் அதிகரிப்பு, பால் பொருட்கள் உற்பத்தி அதிகரித்து, தனியார் நிறுவனங்கள் வலுவாக உள்ளது. தனியாருடன், ஆவின் போட்டி போட முடியாத நிலையில் உள்ளது. பால் கொள்முதல் அதிகரித்துள்ளதாக ஆவின் கூறும் அளவுக்கு, பால் விற்பனையை ஏன் விரிவுப்படுத்தவில்லை. சென்னையில், தினசரி, 13 லட்சம் லிட்டர் உள்பட, தமிழகம் முழுவதும், மொத்தம், 26 லட்சம் லிட்டர் பால் தான், பாக்கெட்டுகளில் விற்பனை செய்யப்படுகிறது.நுகர்வோர் விரும்பி வாங்கிய பாக்கெட் பால் சிலவற்றை, ஆவின் நிறுத்திவிட்டது. ஒரு கோடி லிட்டர் அளவுக்கு பால் கொள்முதல் செய்வதற்கு, ஆவின் நிறுவனத்தை விரிவுப்படுத்திட தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும். கடந்த, அ.தி.மு.க., ஆட்சியில், தினமும், 38 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் இருந்தது. அந்த இலக்கை கூட எட்ட முடியாத நிலையில் தான் தற்போது உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

ஆவின் பால் கொள்முதல் எவ்வளவு?

ஆவின் அலுவலர்கள் கூறுகையில், 'ஆவினில் உள்ள, 27 ஒன்றியங்களில், கடந்த, ஜூன் மாதம், தினமும் 33.65 லட்சம் லிட்டராக இருந்த நிலையில், ஜூலையில், 35.38 லட்சம் லிட்டராக இருந்தது. ஜூலை, 21ல், 36.09 லட்சம் லிட்டராக உயர்ந்துள்ளது. கடந்த, 2023, ஜூலை, 30.38 லட்சமாக இருந்தது. தற்போது, 5 லட்சம் லிட்டர் உயர்ந்துள்ளது.இதில், சேலம், 5.92 லட்சம்; திருச்சி, 5.18 லட்சம்; திருவண்ணாமலை, 3 லட்சம்; தர்மபுரி, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், கிருஷ்ணகிரி, கோவை, கள்ளக்குறிச்சி, மதுரை, வேலுார் உள்ளிட்ட ஒன்றியங்களில், தலா, 1.20 முதல், 1.80 லட்சம் லிட்டர் வரை, பால் கொள்முதல் உள்ளது. தினமும், 35.67 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுகிறது. அதில், 4 லட்சம் லிட்டர் பால், உள்ளூர் தேவைக்காக சங்கங்கள் வழியாக விற்கப்படுகிறது. பால் உற்பத்தியாளர்களுக்கு தாமதம் இல்லாமல், பணம் பட்டுவாடா நேரடியாக, அவர்களின் வங்கி கணக்கில் செலுத்தப்படுகிறது' என்றனர்.--நமது சிறப்பு நிருபர்-


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

தாமரை மலர்கிறது
ஜூலை 23, 2024 01:45

ஆவினை அடானியிடம் கொடுத்தால், மிக சிறப்பாக நடத்தி லாபகரமாக்குவார்.


Ethiraj
ஜூலை 23, 2024 13:02

Senthil Balaji can run it better


Bala
ஜூலை 22, 2024 21:08

Private sector giving only 27 to 32 rupees


Bala
ஜூலை 22, 2024 21:02

தனியார் நிறுவனம் 27முதல் 32 ருபாய் மட்டுமே தருகிறது


அப்புசாமி
ஜூலை 22, 2024 20:10

ஆவின்.மூலமா பாக்கெட் சாராயம் விக்கலாமே.. ஒரு நாலாயிரம்.பசுக்கள் வாங்கி நாமே பால் கறந்து விக்கலாமே.


Sree
ஜூலை 22, 2024 20:09

கலப்படம் தரம் குறைப்பு வியாக்கியானம் பேசும் அதிகாரி முதல் அமைச்சர் வரை கமிசன் இத்தனையும் மீறி எப்படி லாபம் காட்ட முடியும்


konanki
ஜூலை 22, 2024 19:54

கள்ள சாராயம் விற்பனையில் யாருமே போட்டி போட முடியாது.அது முக்கிய மா பால் விற்பனை முக்கியமா?


Ramesh Sargam
ஜூலை 22, 2024 18:52

பேசாம ஆவின் பெயரை டாவின் டாஸ்மாக் என்று மாற்றினால் வியாபாரம் பிச்சிண்டு போகும்.


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை