மலிவான அரசியலை இனியாவது கைவிடுங்கள்!
சென்னை:'மலிவான அரசியலில் ஈடுபடுவதை, பழனிசாமி இனிமேலாவது கைவிட வேண்டும்' என, கைத்தறித் துறை அமைச்சர் காந்தி தெரிவித்துள்ளார்.அவரது அறிக்கை:'வேலுார் சரக கைத்தறி நெசவாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி, அ.தி.மு.க., சார்பில், நாளை குடியாத்தத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடக்கும்' என, எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி அறிவித்துள்ளார்.குடியாத்தத்தில் 34 கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் லுங்கி ரகங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இச்சங்கங்களில், நெசவாளர்கள் கோரிக்கையை ஏற்று, கடந்த 16ம் தேதி முதல் எட்டு லுங்கிகளுக்கு கூடுதல் ஊக்கத்தொகை 360 ரூபாயுடன், மொத்த நெசவுக்கூலி 2,102 ரூபாய் வழங்கப்படுகிறது. இந்நிலையில் ஆர்ப்பாட்டம் தேவையில்லாததும், அர்த்தமற்றதும் ஆகும். முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்றது முதல், கைத்தறி நெசவுத் தொழிலையும், நெசவாளர்களையும் பாதுகாக்க, தேவையான நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. இந்நிலையில், எவ்வித கொள்கையும் கோட்பாடும் இல்லாத வகையில், சுய லாபம் மற்றும் வெற்று விளம்பரத்திற்காக, இவ்வாறான மலிவான அரசியலில் ஈடுபடுவதை, பழனிசாமி இனிமேலாவது கைவிட வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.