| ADDED : டிச 06, 2025 09:05 AM
சென்னை: தேர்தல் கமிஷனை கண்டித்து, டில்லியில் நேற்று முன்தினம் நடந்த போராட்டத்தில் பங்கேற்பதை, பா.ம.க., நிறுவனர் ராமதாசின் மகள் ஸ்ரீ காந்தி கடைசி நேரத்தில் தவிர்த்து விட்டார். பா.ம.க., தலைவராக அன்புமணியை தேர்தல் கமிஷன் அங்கீகரித்துள்ளதை கண்டித்து, டில்லி ஜந்தர்மந்தரில் ராமதாஸ் ஆதரவாளர்கள் நேற்று முன்தினம் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில், எம்.எல்.ஏ.,க்கள் ஜி.கே.மணி, அருள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ராமதாசின் மகளும், கட்சியின் செயல் தலைவருமான ஸ்ரீ காந்தி பங்கேற்பார் என ராமதாஸ் அறிவித்திருந்தார். அதேபோல, ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றோர் பட்டியலை வெளியிட்டபோது, அவருடைய பெயரையும் சேர்த்திருந்தனர். ஆனால், ஆர்ப்பாட்டத்தில் ஸ்ரீ காந்தி பங்கேற்கவில்லை. இது தொடர்பாக, ராமதாஸ் ஆதரவாளர்களிடம் விசாரித்தபோது, 'ஸ்ரீ காந்திக்கு உடல்நிலை சரியில்லை; சளி தொந்தரவு அதிகமாக இருக்கிறது. டில்லியிலும் கடும் குளிர் நிலவுகிறது. அதனால், அவர் டில்லிக்கு செல்லவில்லை' என்றனர். டில்லியில் நடத்தும் ஆர்ப்பாட்டம் பிசுபிசுத்துப் போகும் என்பதை முன்கூட்டியே கணித்தே, ஸ்ரீ காந்தி பங்கேற்காமல் தவிர்த்து விட்டதாக கூறிய அன்புமணி ஆதரவாளர்கள், 'ஆர்ப்பாட்டத்தில் சொற்ப எண்ணிக்கையிலான ஆட்களே திரண்டிருந்தனர்' எனவும் கூறினர்.