ஊத்துக்கோட்டை: திருவள்ளூர் அருகே, சவுடு மண் ஏற்றிக் கொண்டு அசுர வேகத்தில் சென்ற லாரி 'மீடியனை' உடைத்துக் கொண்டு, சாலையோர ஓட்டலுக்குள் புகுந்ததது. இதில், அங்கு சாப்பிட்டுக் கொண்டிருந்த பள்ளி மாணவர்கள் மூன்று பேர் உடல் நசுங்கி இறந்தனர். மேலும், 5 மாணவர்கள் படுகாயங்களுடன் சென்னை அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டம், தாமரைப்பாக்கம் அடுத்த, வெள்ளியூர் பகுதியில் இருந்து சவுடு மண் ஏற்றிக் கொண்டு தாமரைப்பாக்கம் கூட்டுச் சாலை நோக்கி லாரி சென்று கொண்டிருந்தது. அதிகளவு பாரங்களுடன் சென்ற லாரி, வெள்ளியூர் அரசு மேல்நிலைப் பள்ளி அருகே செல்லும்போது லாரி, கட்டுப்பாட்டை இழந்து 'மீடியனை' உடைத்துக் கொண்டு, நிற்காமல் எதிர்பாராதவிதமாக சாலையோரம் இருந்த டிபன் கடைக்குள் புகுந்தது. லாரியில் வந்த எமன்: இவ்விபத்தில் ஓட்டலில் டிபன் சாப்பிட்டுக் கொண்டிருந்த பிளஸ் 2 படிக்கும் மாணவர்கள் கொமக்கம்பேடு கிராமத்தைச் சேர்ந்த நாகராஜ் மகன் முனுசாமி,17, கன்னியப்பன் மகன் மோகன்தாஸ், 17 மற்றும் செம்பேடு கிராமத்தைச் சேர்ந்த ரமேஷ் மகன் ராஜ்குமார்,17 ஆகிய மூவரும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே இறந்தனர். மேலும் கொமக்கம்பேடு முனுசாமி மகன் சபாபதி,17, பாகல்மேடு காலனியைச் சேர்ந்த சேகர் மகன் செல்வகுமார்,17, புன்னப்பாக்கம் ராஜேந்திரன் மகன் தம்பிதுரை,17, தாமரைப்பாக்கம் தென்னரசு மகன் நாகராஜ், 17 மற்றும் 9ம் வகுப்பு படிக்கும் வெள்ளியூர் ராஜேந்திரன் மகன் ராஜ்பரத்,14 ஆகிய ஐந்து பேரும் சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு, பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர்.சாலை மறியல்: இந்த பரிதாப விபத்தால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் விபத்து ஏற்படுத்திய லாரியை தீயிட்டனர். பின்னர் தீ அணைக்கப்பட்டது. விபத்து ஏற்படுத்திய லாரி டிரைவர் தப்பியோடி விட்டார். விபத்தைக் கண்டு ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் மற்றும் மாணவர்கள் திருவள்ளூர் - செங்குன்றம் சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர். இதனால் போலீசார் மாற்றுப்பாதையில் வாகனங்களை இயக்கினர். பஸ்களில் வந்த பயணிகள் நடந்து தங்களது இருப்பிடம் சென்றனர்.சமாதான பேச்சு வார்த்தை: தகவலறிந்து சம்பவ இடத்துக்கு திருவள்ளூர் கலெக்டர் அசிஷ் சட்டர்ஜி, வடக்கு மண்டல போலீஸ் ஐ.ஜி., சைலேந்திரபாபு, மாவட்ட எஸ்.பி., வனிதா, காஞ்சிபுரம் எஸ்.பி.,மனோகரன், திருவள்ளூர் சப்-கலெக்டர் சித்ரசேனன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் செல்வகுமாரி ஆகியோர் விரைந்து சென்றனர். மேலும் மறியலில் ஈடுபட்ட மாணவ, மாணவியரிடம் ஐ.ஜி., சைலேந்திரபாபு, எஸ்.பி., வனிதா ஆகியோர் சமாதான பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.