உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கரும்பு சாகுபடியை அதிகரிக்க நடவடிக்கை கூட்டுறவு சர்க்கரை ஆலைகளுக்கு இலக்கு

கரும்பு சாகுபடியை அதிகரிக்க நடவடிக்கை கூட்டுறவு சர்க்கரை ஆலைகளுக்கு இலக்கு

சென்னை:கரும்பு சாகுபடி பரப்பை அதிகரிக்க, கூட்டு றவு சர்க்கரை ஆலைகளுக்கு இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.கள்ளக்குறிச்சி, ஈரோடு, திருவண்ணாமலை, கடலுார், விழுப்புரம், நாமக்கல், சேலம், திருவள்ளூர், தர்மபுரி, பெரம்பலுார் மாவட்டங்களில், கரும்பு சாகுபடி அதிகளவில் நடந்து வருகிறது.

படிப்படியாக குறைவு

மாநிலம் முழுதும் முன்னர், 8 லட்சம் ஏக்கருக்கு மேல் கரும்பு சாகுபடி செய்யப்பட்டது. சாகுபடி பரப்பு, 2016ம் ஆண்டுக்கு பின் படிப்படியாக குறைந்தது. கடந்தாண்டு, 3.75 லட்சம் ஏக்கரில் மட்டுமே சாகுபடி செய்யப்பட்டது. சாகுபடி பரப்பு குறைவால், சர்க்கரை ஆலைகளுக்கு போதிய கரும்பு கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. பல்வேறு மாவட்டங்களில் இயங்கி வந்த 16 கூட்டுறவு சர்க்கரை ஆலைகளில், 11 ஆலைகள் மட்டுமே தற்போது உள்ளன. இதேநிலை தொடர்ந்தால், கூட்டுறவு மட்டுமின்றி, பொதுத்துறை, தனியார் சர்க்கரை ஆலைகளையும் மூட வேண்டிய நிலை ஏற்படும்.இதனால், கரும்பு சாகுபடியை அதிகரிப்பதற்கான முயற்சிகளை, வேளாண் துறை, சர்க்கரை துறை இணைந்து மேற்கொண்டு வருகின்றன. இது தொடர்பாக, சர்க்கரை துறை அமைச்சர் ராஜேந்திரன், வேளாண் துறை செயலர் தட்சிணாமூர்த்தி, சர்க்கரை துறை இயக்குநர் அன்பழகன் உள்ளிட்ட அதிகாரிகள் சமீபத்தில் ஆலோசனை நடத்தினர். இதில், கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலைகளின் அலுவலர்கள் பங்கேற்றனர். சாகுபடியை அதிகரிப்பதற்கான செயல் திட்டம் குறித்து, இதில் விரிவாக விவாதிக்கப்பட்டது.இதுகுறித்து, சர்க்கரை துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:கரும்பு சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு டன்னுக்கு, 349 ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, ஒரு டன் கரும்பு, 3,500 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்படுகிறது.

மானிய விலை

தேசிய வேளாண் வளர்ச்சி திட்டம், கலைஞர் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் உள்ளிட்டவற்றின் வாயிலாக, கரும்பு நாற்றுகள் மற்றும் விதை கரணைகள் மானிய விலையில் வழங்கப்படுகின்றன. கரும்பு விளைச்சல் மற்றும் சர்க்கரை கட்டுமானத்தை அதிகரிக்கும் ரகங்களை, வேளாண் பல்கலை அறிமுகம் செய்துள்ளது. இதை பயன்படுத்தினால் நல்ல வளர்ச்சி கிடைக்கும். இந்த தகவல்களை, கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலைகளின் கரும்பு உதவியாளர், கரும்பு மேம்பாட்டு அலுவலர்கள் ஆகியோர், விவசாயிகளிடம் விளக்கி சொல்ல வேண்டும். விவசாயிகள் கரும்பு சாகுபடி செய்வதை உறுதி செய்து, அதை இம்மாத இறுதிக்குள் பதிவு செய்ய வேண்டும் என, இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதற்காக, ஒவ்வொரு சர்க்கரை ஆலைகளுக்கும் தனித்தனியாக இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.இவ்வாறு கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை