பைக் டாக்சிகளுக்கு தடையா?
சென்னை:''பயணியரின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், பைக் டாக்சிகள் ஆய்வு செய்யப்படும், '' என, போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் கூறினார்.தமிழ்நாடு மோட்டார் வாகனங்கள் பராமரிப்புத் துறையின் இயக்குனரகம் மற்றும் 20 அரசு தானியங்கி பணிமனைகளின் செயல்பாட்டை கணினிமயமாக்குதல் திட்டத்தை, போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர், நேற்று துவக்கி வைத்தார்.
பின், அவர் அளித்த பேட்டி:
தமிழகத்தில், 'பைக் டாக்சி'களுக்கு தடை விதிக்க கோரி, ஓட்டுனர்கள் சங்கங்கள், சென்னையில் போராட்டம் நடத்தி உள்ளன.மத்திய அரசு ஏற்கனவே, இருசக்கர வாகனத்தை வாடகை அடிப்படையில் இயக்க அனுமதி வழங்கி உள்ளது. இதுகுறித்து ஆய்வு செய்ய, தமிழக போக்குவரத்துத் துறை சார்பில், குழு அமைக்கப்பட்டு உள்ளது. ஆட்டோ ஓட்டுனர்கள் தரப்பில் எதிர்ப்பும் இருக்கிறது. விபத்து நேரிட்டால், காப்பீடு பெறுவதில் சிக்கல் எழுகிறது. எனவே, பயணியரின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், பைக் டாக்சிகளை ஆய்வு செய்ய, ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார். விதிமீறும் பைக் டாக்சிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.டீசல் விலை உயர்ந்த போதும், அரசு பஸ்களில் கட்டணம் உயர்த்தப்படவில்லை. அண்டை மாநிலங்களில் கி.மீ.,-க்கு 1.08 ரூபாய் என்ற அளவில் கட்டணம் வசூலிக்கின்றனர். தமிழகத்தில், 52 காசு மட்டுமே வசூலிக்கப்படுகிறது. எனவே, நஷ்டம் வருவது இயற்கை; அதை தமிழக அரசு ஈடு செய்கிறது.எனவே, போக்குவரத்து கழகங்களின் நஷ்டத்தை பார்க்க கூடாது; வளர்ச்சியை பார்க்க வேண்டும். போக்குவரத்துத் துறை இயக்கத்தால் தான் தமிழகத்தில் சமச்சீர் வளர்ச்சி இருக்கிறது.இவ்வாறு அவர் கூறினார்.