உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மருத்துவ படிப்பில் சேர போலி சான்றிதழ் சமர்ப்பித்தால் பெற்றோர் மீதும் நடவடிக்கை

மருத்துவ படிப்பில் சேர போலி சான்றிதழ் சமர்ப்பித்தால் பெற்றோர் மீதும் நடவடிக்கை

சென்னை:'மருத்துவ படிப்பிற்கான விண்ணப்ப பதிவில் போலி சான்றிதழ் கொடுத்தால், பெற்றோர் மீதும் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும்' என, மருத்துவ கல்வி இயக்குநரகம் எச்சரித்துள்ளது.எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., உள்ளிட்ட மருத்துவ படிப்புகளுக்கான இணையவழி விண்ணப்ப பதிவு நேற்று முன்தினம் துவங்கியது. இந்தாண்டு, 'நீட்' நுழைவு தேர்வு முடிவுகள் வெளியாவதற்கு முன், விண்ணப்ப பதிவு துவங்கியுள்ளது. அதனால், விண்ணப்பங்களில் நீட் தேர்வு மதிப்பெண் விபரங்களை குறிப்பிட தேவையில்லை. அவற்றை தேசிய தேர்வு முகமையிடம் இருந்து, மருத்துவ கல்வி இயக்ககமே பெற்றுக் கொள்ளும். அதேநேரம், மதிப்பெண் சான்றிதழ், மாற்று சான்றிதழ், வெளிநாடு வாழ் இந்தியர் ஆதாரச்சான்று உட்பட அனைத்து ஆவணங்களையும் பதிவேற்றுதல் அவசியம்.கடந்தாண்டு போலியாக வெளிநாடு வாழ் இந்தியர் சான்றிதழ் சமர்ப்பித்தது கண்டறியப்பட்டு, சம்பந்தப்பட்ட மாணவர் சேர்க்கை ரத்து செய்யப்பட்டது. இந்தாண்டுக்கான மாணவர் சேர்க்கை தகவல் கையேட்டில், சில எச்சரிக்கை வழங்கப்பட்டுள்ளது.அதன்படி, போலி சான்றிதழ் அளித்திருப்பது கண்டறியப்பட்டால், அவரது மாணவர் சேர்க்கை உடனடியாக ரத்து செய்யப்படும். மேலும், மூன்று ஆண்டுகளுக்கு வேறு எந்த படிப்பிலும் சேர முடியாது. நிரந்தரமாக மருத்துவ படிப்புகளில் சேர முடியாது. விண்ணப்பதாரர் மற்றும் அவரது பெற்றோர் மீதும் சட்ட நடவடிக்கை எடுப்பதுடன், போலீசிலும் அவர்கள் ஒப்படைக்கப்படுவர் என, மருத்துவக் கல்வி இயக்ககம் எச்சரித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ