தெலுங்கர் குறித்து பேசவே இல்லை நடிகை கஸ்துாரி மீண்டும் விளக்கம்
சென்னை:நடிகை கஸ்துாரி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ள நிலையில், 'நான் தெலுங்கர் என்றோ, தெலுங்கு மக்கள் குறித்தோ பேசவில்லை' என, அவர் விளக்கம் அளித்துள்ளார்.சென்னை, எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகே, கடந்த 3ம் தேதி நடந்த போராட்டத்தில் பேசிய கஸ்துாரி, தெலுங்கு மக்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை பதிவு செய்தார். இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.இதையடுத்து, 'தெலுங்கு மக்களை புண்படுத்துவதும், அவர்களை காயப்படுத்துவதும் என் நோக்கம் அல்ல. கவனக்குறைவுக்கு மன்னிக்க வேண்டும்' என, கஸ்துாரி கூறியிருந்தார்.இதற்கிடையே, கஸ்துாரி மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க கோரி, அகில இந்திய தெலுங்கு சம்மேளன நிர்வாகிகள், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தனர். அதன்படி, கலவரத்தை துாண்டுதல் உட்பட, நான்கு பிரிவுகளின் கீழ், கஸ்துாரி மீது வழக்குப்பதிவு செய்துஉள்ளனர். அதைத் தொடந்து, கஸ்துாரி மீது கோயம்பேடு காவல் நிலையத்தில், மேலும் ஒரு புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல, மதுரை திருநகர் காவல் நிலையத்தில், தமிழ்நாடு நாயுடு மகாஜன சங்கத்தினர் அளித்த புகாரில், கஸ்துாரி மீது ஆறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.இந்நிலையில், கஸ்துாரி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், 'மிரட்டலுக்கும், தாக்குதலுக்கும் நான் என்றுமே அடிபணிய மாட்டேன்; பின்வாங்கவே மாட்டேன் என்ற என் பிடிவாதம், சகோதர மனப்பான்மையுடன் அறிவுறுத்தியதால் தளர்ந்தது. 'மீண்டும் மீண்டும் சொல்கிறேன். தெலுங்கர் என்றோ, தெலுங்கு மக்கள் குறித்தோ பேசவேயில்லை. தெலுங்கு என்று பேசியதை வாபஸ் பெறுகிறேன்' என, கூறியுள்ளார்.
ஆதாரமற்ற குற்றச்சாட்டு
தமிழக அரசு துறைகளில், பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் பட்டியலின வகுப்பைச் சேர்ந்தோர் அதிமாக பணிபுரிகின்றனர். அவர்கள் லஞ்சம் பெற்று, அளவுக்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளதாக, பொத்தாம் பொதுவாக, ஆதாரமற்ற பொய்யான குற்றச்சாட்டை கஸ்துாரி சுமத்தி உள்ளார். எங்கள் மீது பொதுமக்கள் மத்தியில் தவறான பிம்பத்தை ஏற்படுத்தும் வகையில் பேசியுள்ள கஸ்துாரி மீது, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.- தமிழ்நாடு வருவாய் துறை அலுவலர் சங்க நிர்வாகிகள்.