நடிகை விஜயலட்சுமி தான் சீமானின் முதல் மனைவியா? உயர் நீதிமன்றம் கேள்வி
சென்னை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான். இவருக்கு எதிராக, சென்னை வளசரவாக்கம் போலீசில் நடிகை விஜயலட்சுமி பாலியல் புகார் அளித்தார். தன்னை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி, சீமான் ஏமாற்றி விட்டதாகக் கூறியிருந்தார். 2011ல் பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ், சீமான் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. விசாரணை
இந்நிலையில், 2012ல், அவசர கதியில் புகார் அளித்ததாகவும், அதை வாபஸ் பெறுவதாகவும் கூறி, வளசரவாக்கம் போலீசிடம் விஜயலட்சுமி கடிதம் அளித்தார். பின், இருவருக்கும் மீண்டும் பிரச்னை ஏற்பட்டதால், போலீசில் விஜயலட்சுமி புகார் அளித்தார். இதையடுத்து, 2011ல் தன் மீது பதிவான வழக்கை ரத்து செய்யக்கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில், சீமான் வழக்கு தொடர்ந்தார். ஒன்றரை ஆண்டுக்குப்பின், சீமான் தொடர்ந்த வழக்கு, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன், நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, சீமான் தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஜான் சத்யன் ஆஜராகி வாதாடியதாவது:கடந்த, 2011ல் வளசரவாக்கம் போலீசில் கொடுத்த புகாரை, 2012ல் விஜயலட்சுமி வாபஸ் பெற்றார். அதேபோல குற்றச்சாட்டு கொண்ட மற்றொரு புகாரை, 2023 ஆக., 28ல் கொடுத்தார்; பின், அதையும் வாபஸ் பெற்றார். இருவரது சம்மதத்துடன் நடந்த உடலுறவு குற்றமாகாது என, உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கடந்த 2008ல், மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் மாலை மாற்றி திருமணம் செய்ததாகவும், ஈ.வெ.ரா., கொள்கையை, சீமான் பின்பற்றுவதால் தாலி கட்ட முடியாது என்று கூறி விட்டதாகவும், விஜயலட்சுமி புகாரில் கூறியுள்ளார்.இவ்வாறு அவர் வாதிட்டார். மாலை மாற்றி திருமணம்
அதற்கு நீதிபதி, 'இருவரும் திருமணம் செய்து கொண்டனரா; சீமானின் முதல் மனைவி விஜயலட்சுமியா?' என கேள்வி எழுப்பினார். அதற்கு, 'இல்லை. மாலை மாற்றி திருமணம் நடந்ததாக, விஜயலட்சுமிதான் கூறியுள்ளார்' என, சீமான் தரப்பில் பதில் அளிக்கப்பட்டது.இதையடுத்து நீதிபதி, 'பாலியல் பலாத்கார புகாரை, விஜயலட்சுமி இரண்டு முறை வாபஸ் பெறுகிறார் என்றால், அவருக்கு சீமான் ஏதாவது உத்தரவாதம் கொடுத்தாரா?' என, கேள்வி எழுப்பினார்.அதற்கு பதிலளித்து, காவல் துறை தரப்பில் அரசு வழக்கறிஞர் முகிலன் வாதாடியதாவது:கடந்த 2008ல் தான் சீமானுக்கு விஜயலட்சுமி அறிமுகமானார். திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி தான், விஜயலட்சுமியுடன் சீமான் உறவு கொண்டுள்ளார். குற்றப்பத்திரிகை
பாலியல் புகார் என்பது சமூக குற்றம் என்பதால், அந்த புகாரை வாபஸ் பெற்றாலும், அதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தத்தான் செய்வர். புகாரை வாபஸ் பெறுவதாக எழுதிக் கொடுத்த விஜயலட்சுமி, தன்னை சீமான் திருமணம் செய்து கொள்வதாகக் கூறியுள்ளார். புகாரை வாபஸ் பெற கட்டாயப்படுத்துகிறார் என்றும் கூறியுள்ளார். திருமணம் செய்வதாகக் கூறி ஏமாற்றியுள்ளதால், உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி இந்த வழக்கை ரத்து செய்ய முடியாது.இவ்வாறு அவர் வாதிட்டார்.இரு தரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதி, 'இந்த வழக்கை சாதாரண வழக்காகக் கருத முடியாது. 'விஜயலட்சுமி புகாரை திரும்ப பெற்றாலும், பாலியல் வன்கொடுமை சட்டப்பிரிவின் கீழ் சீமானுக்கு எதிரான புகாரை, 12 வாரத்துக்குள் விசாரித்து, காவல் துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும். 'இதுகுறித்து விரிவான தீர்ப்பை பின்னர் பிறப்பிக்கிறேன்' என உத்தரவிட்டு, சீமானின் மனுவை தள்ளுபடி செய்தார்.