ஆதவ் பேச்சு: காசிமுத்து மாணிக்கம் பதிலடி
சென்னை: 'சிறை என்றவுடன் ஓடிப் போனவர் அல்ல; சிறை என்றவுடன் ஓடோடி வந்தவர் முதல்வர் ஸ்டாலின்' என, தி.மு.க., வர்த்தகப் பிரிவு செயலரும், கவிஞருமான காசிமுத்துமாணிக்கம் கூறியுள்ளார். அவரது அறிக்கை: ஒரு படத்தில், நடிகர் வடிவேலுவை, 'அடிச்சுப் பாருங்கடா' என, அவரது நண்பரே அழைப்பது போல, 'விஜயை கைது செய், கைது செய்' என ஆதவ் அர்ஜுனா கத்துகிறார். முதல்வர் ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டு விட்டு, அறிவாலயத்தில் ஒளிந்து கொள்வார் என ஆதவ் பேசுகிறார். மேம்பால வழக்கில் பெங்களூரில் இருந்து நேராக நீதிபதி அசோக்குமார் வீட்டுக்கு சென்று, 'சரண்டர்' ஆனவர் ஸ்டாலின். பின், அவர் சிறைக்குச் சென்று, விடுதலையும் ஆனார். அந்த வழக்கு என்ன ஆனது? சிறை என்றவுடன் ஓடிப்போனவர் இல்லை; சிறை என்றவுடன் ஓடோடி வந்தவர் முதல்வர் ஸ்டாலின். தி.மு.க.,வில் பத்தாண்டு இருந்தேன் என்கிறார் ஆதவ். அண்ணாதுரை வரியில் சொன்னால், எங்கள் இயக்கத் தலையில் பரிவட்டமாக இருந்தவர் அல்ல; கிழிந்த கோவணத் துணியாக இருந்தவர். சுரண்டல் லாட்டரி மார்ட்டினின் மருமகன் ஆகித்தான் ஆதவை வெளியில் தெரியும். கரூரில் உங்கள் உறவு 41 பேர் இறந்தனர் என்கிறீர்கள்; அதை 91 ஆகாமல் பார்த்துக் கொண்டவர் முதல்வர் ஸ்டாலின். ஓடிப்போன நீங்கள், எங்களை ஓடியவர்கள் என கூறுவது வடிகட்டிய பொய். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.