இபிஎஸ் - நயினார் நாகேந்திரன் சந்திப்பு
சேலம்: சேலத்தில் அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ்சை அவரது வீட்டுக்கே சென்று தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் சந்தித்துள்ளார்.பிரதமர் மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு, கோவையில் மோடி யுவா ரன் என்ற பிரம்மாண்ட மாரத்தான் போட்டி நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் கலந்து கொண்டார். அதன் பின்னர், சேலத்தில் உள்ள அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் வீட்டுக்கு அவர் சென்றார். அங்கு இபிஎஸ்சை சந்தித்து பேசினார். நயினார் நாகேந்திரனுடன், தமிழக பாஜ மேலிட பார்வையாளர் அர்விந்த் மேனன், துணை தலைவர் கே.பி. ராமலிங்கம் ஆகியோரும் சென்றனர்.2026ம் ஆண்டு தமிழக சட்டசபை தேர்தல், பிரசார வியூகங்கள், தொகுதிகள் எண்ணிக்கை மற்றும் இரு கட்சிகள் இடையே நிலவும் உட்கட்சி பிரச்னைகள் குறித்து இருதரப்பினரும் முக்கிய ஆலோசனை நடத்தியதாக தெரிகிறது. பிரசாரத்தின் போது இருகட்சிகளின் முக்கிய தலைவர்கள் ஒன்றாக சுற்றுப்பயணம் மேற்கொள்வது பற்றியும் விவாதிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.அண்மையில், புதுடில்லியில் பாஜ மூத்த தலைவரும், உள்துறை அமைச்சருமான அமித் ஷாவை, இபிஎஸ் சந்தித்து பேசினார். அதன் தொடர்ச்சியாக இபிஎஸ்-நயினார் நாகேந்திரன் சந்திப்பு நடைபெற்றுள்ளதால், தமிழக அரசியலில் இந்த சந்திப்பு முக்கிய கவனம் பெற்றுள்ளது.