ஓய்வு பெறுவோரின் கணக்கு 3 மாதம் முன்பே அனுப்ப அறிவுரை
சென்னை:''அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதிய பலன் விரைந்து கிடைக்க, அவர்கள் ஓய்வு பெறுவற்கு, மூன்று மாதங்களுக்கு முன்பே, ஓய்வூதிய கருத்துருவை கணக்கு துறைக்கு அனுப்ப வேண்டும்,'' என, இந்திய தணிக்கை மற்றும் கணக்கு துறையின் மாநில கணக்காயர் வெள்ளியங்கிரி தெரிவித்தார்.இந்திய தணிக்கை மற்றும் கணக்கு துறை சார்பில், 'தணிக்கை வாரம் - 2024'ஐ முன்னிட்டு, தமிழக அரசின் அதிகாரிகளுக்கு தணிக்கை தொடர்பான பயிற்சி அளிக்கும் நிகழ்ச்சி, சென்னை தி.நகரில் நேற்று நடந்தது. இந்நிகழ்ச்சியில், தமிழகநிதித் துறை கூடுதல் செயலர் அருண் சுந்தர் தயாளன் பேசியதாவது:கோவில்களில் இருந்து தான், தணிக்கை செய்யும் நடைமுறை வந்தது. தணிக்கையின் நோக்கமே, வெளிப்படை தன்மை இருக்க வேண்டும்; சரியான முறையில் தணிக்கை செய்ய வேண்டும் என்பது தான். தமிழக அரசு, நிதி நிர்வாகத்தை சிறந்த முறையில் கையாள, நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்துகிறது. தணிக்கை துறையினர், அரசு ஊழியர்களின் ஓய்வூதிய கருத்துரு மீது, விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.வெள்ளியங்கிரி பேசியதாவது:அரசு ஊழியர்களின் ஓய்வூதிய விபரங்கள் சரிபார்க்கப்பட்டு, ஓய்வூதியம் வழங்க, அரசுக்கு பரிந்துரை செய்யப்படுகிறது. ஒரு ரூபாய் என்றாலும், அதை தணிக்கை மற்றும் கணக்கு துறை, பொறுப்பான முறையில் கையாள்கிறது. தமிழக அரசின் பல்வேறு துறைகளில் இருந்து ஆண்டுக்கு சராசரியாக, 20,000 பேரின் ஓய்வூதிய கருத்துரு வருகிறது. காவல், கல்வி, வருவாய் துறைகளில் இருந்து தான் அதிக பேர் ஓய்வு பெறுகின்றனர். உரிய ஆவணங்கள் இணைக்கப்படாமல் வரும் கருத்துரு மீது சந்தேகம் எழுப்பினால், பதில் அளிப்பதில் தாமதம் கூடாது.தாமதம் ஏற்பட்டால், ஓய்வூதிய கருத்துரு மீது நடவடிக்கை எடுப்பதிலும் காலதாமதம் ஏற்படும். ஒருவர் ஓய்வுபெற்ற உடனே, ஓய்வூதிய பலன் கிடைக்க, ஓய்வு பெறுவதற்கு மூன்று மாதங்களுக்கு முன்பே, அவரது ஓய்வூதிய கருத்துருவை கணக்கு துறைக்கு அனுப்ப வேண்டும். அதை விரைவாக பரிசீலித்து, ஆவணங்கள் விடுபட்டால், அதை கேட்டு பெற்று, உடனே ஓய்வூதியம் கிடைக்க வழிவகை செய்யப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.