உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பாழடைந்த விவசாய கிணறுகள் புனரமைப்புக்கு ரூ.2.50 லட்சம் வேளாண் துறை வழங்குகிறது

பாழடைந்த விவசாய கிணறுகள் புனரமைப்புக்கு ரூ.2.50 லட்சம் வேளாண் துறை வழங்குகிறது

சென்னை:பாழடைந்த கிணறுகளை புனரமைக்கும் திட்டத்திற்கு பின்னேற்பு மானியமாக, 2.50 லட்சம் ரூபாயை வேளாண் துறை வழங்கவுள்ளது.மாநிலம் முழுதும் கற்கள், சுற்றுச்சுவர் பெயர்ந்துள்ள கிணறுகளை சீரமைக்க, வேளாண் துறை திட்டமிட்டு உள்ளது. இதற்காக பின்னேற்பு மானியமாக, ஒரு கிணறுக்கு 2.50 லட்சம் ரூபாய் வழங்கப்பட உள்ளது. வேளாண் துறை கீழ் இயங்கும் வேளாண் பொறியியல் துறையினர், இத்திட்டத்தை செயல்படுத்தவுள்ளனர். இதற்காக, கிணறுகளை அடையாளம் காணும் பணி துவங்கியுள்ளது.இதுகுறித்து, வேளாண் பொறியியல் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:திறந்தவெளி பாசன கிணறுகளை புனரமைக்கும் திட்டத்தை, மத்திய, மாநில அரசுகள் இணைந்து, பிரதமரின் தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் செயல்படுத்தவுள்ளன.ஒரு விவசாயிக்கு, 50 சதவீதம் மானியம் வழங்கப்படும். அதிகபட்சமாக, 2.50 லட்சம் ரூபாய் கிடைக்கும்.மானிய தொகையில் 60 சதவீதத்தை மத்திய அரசும், 40 சதவீதத்தை மாநில அரசும் வழங்கும். சென்னை, நீலகிரி நீங்கலாக மற்ற மாவட்டங்களில், இத்திட்டம் செயல்படுத்தப்படும். துார்வாரும் பணியை சொந்த செலவில் விவசாயிகள் மேற்கொள்ள வேண்டும்.தேவையுள்ள விவசாயிகள், பட்டா, அடங்கல், ஆதார் அட்டை, ரேஷன் அட்டை, வங்கி கணக்கு புத்தகம் ஆகியவற்றுடன் வேளாண் பொறியியல் துறை அதிகாரிகளை தொடர்பு கொள்ள வேண்டும். பட்டா, அடங்கலில் கிணறு இருப்பதை, கிராம நிர்வாக அதிகாரி குறித்து கொடுக்க வேண்டும். பணி முடிந்த பின், விவசாயிகளின் வங்கி கணக்கில் மானிய தொகை வரவு வைக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி