சென்னை: மின்நுகர்வு அடுத்த நாள் எவ்வளவு இருக்கும் என்பதை, முந்தைய நாளே கணக்கெடுத்து, அதை பூர்த்தி செய்ய, ஏ.ஐ., எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மின் வாரியத்திற்கு கை கொடுக்கிறது. இதனால், மின் கொள் முதல் செலவு குறைகிறது.தமிழக மின் நுகர்வு, தினமும் காலை மாலையில் சராசரியாக, 16,000 மெகா வாட்டாகவும், மற்ற நேரங்களில், 15,000 மெகா வாட்டாகவும் உள்ளது. இதை பூர்த்தி செய்யும் அளவுக்கு, மின் நிலையங்களில் உற்பத்தியாகும் மின்சாரம் போதவில்லை. இதனால், மத்திய தொகுப்பு மற்றும் தனியார் நிறுவனங்களிடம் இருந்து கொள்முதல் செய்யப்படுகிறது.அடுத்த நாள் அதாவது, 24 மணி நேரத்தில் மின் நுகர்வு எவ்வளவு இருக்கும் என்பது, முந்தைய நாளே மதிப்பீடு செய்யப்படும். அதற்கு ஏற்ப மின் உற்பத்தி, மின் கொள்முதல் செய்வதற்கான பணிகள் மேற்கொள்ளப்படும்.முந்தைய நாளில் மதிப்பீடு செய்த அளவுடன் ஒப்பிடும்போது மின் நுகர்வு, 250 மெகா வாட் குறைவாக அல்லது கூடுதலாக இருக்கலாம். அதற்கு மேல் சென்றால், மத்திய மின் துறைக்கு அபராதம் செலுத்த வேண்டும்.எனவே, மின் நுகர்வை கணக்கீடு செய்வதற்கு, ஏ.ஐ., எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம், 2023ல் அறிமுகமானது. இதன் வாயிலாக, அடுத்த நாள் மின் நுகர்வு விபரம், முந்தைய ஆண்டுகளின் அனுபவத்தின் அடிப்படையில், மிக விரைவாக மதிப்பீடு செய்யப்படுகிறது.வித்தியாச அளவும், 100 மெகாவாட் கீழ் உள்ளது. இதனால், மின் கொள்முதல் செய்வது குறைவதால், செலவும் குறைகிறது. மின் வழித்தட பாதுகாப்பு உறுதி செய்யப்படுவதுடன், அபராத செலவும் குறைவதாக வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.