இரட்டை இலை வழக்கு உத்தரவு மறு ஆய்வு கோரி அ.தி.மு.க., மனு
சென்னை:இரட்டை இலை சின்னம் ஒதுக்க எதிர்ப்பு தெரிவித்த வழக்கின் உத்தரவை மறு ஆய்வு செய்யக்கோரி, அ.தி.மு.க., தரப்பில், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.'அ.தி.மு.க., உட்கட்சி விவகாரம் தொடர்பாக, நிலுவையில் உள்ள உரிமையியல் வழக்குகள் முடிவுக்கு வரும் வரை, அக்கட்சிக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கக் கூடாது' என, தேர்தல் கமிஷனுக்கு உத்தரவிடக்கோரி, திண்டுக்கல்லை சேர்ந்த சூரியமூர்த்தி என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.இந்த வழக்கு விசாரணையின் போது, சூரியமூர்த்தி அளித்த விண்ணப்பத்தை நான்கு வாரங்களில் பரிசீலிப்பதாக, தேர்தல் கமிஷன் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதைப் பதிவு செய்த உயர் நீதிமன்றம், வழக்கை முடித்து வைத்தது.இந்நிலையில், இரட்டை இலை சின்னம், உட்கட்சி விவகாரம் தொடர்பாக, தேர்தல் கமிஷன் அனுப்பிய நோட்டீஸை எதிர்த்து, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி சார்பில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இவ்வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், 'தேர்தல் சின்னங்கள் ஒதுக்கீட்டு உத்தரவின் அடிப்படையில், கட்சியில் இரு குழுக்கள் உள்ளனவா என உறுதி செய்த பின்பே, விசாரணையை தொடர வேண்டும்' என, தேர்தல் கமிஷனுக்கு உத்தரவிட்டிருந்தது.இந்நிலையில், தேர்தல் சின்னங்கள் ஒதுக்கீட்டு உத்தரவின்படி மட்டுமே, விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற உத்தரவை, சூரியமூர்த்தி தாக்கல் செய்த வழக்கில் பிறப்பித்த உத்தரவில் சேர்க்கக்கோரி, அ.தி.மு.க., தரப்பில் மறு ஆய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு தாக்கல் செய்ய ஏற்பட்ட தாமதத்தை பொறுத்து, மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என, முறையிடப்பட்டது.அதை ஏற்ற நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், சி.குமரப்பன் அடங்கிய அமர்வு, மனுவை விசாரணைக்கு பட்டியலிடும்படி, உயர் நீதிமன்ற பதிவுத் துறைக்கு உத்தரவிட்டது.