எம்.ஜி.ஆர்., சிலை சேதம் அ.தி.மு.க., எச்சரிக்கை
அவனியாபுரம் : மதுரை, அவனியாபுரத்தில் எம்.ஜி.ஆர்., சிலையை சேதப்படுத்தியவர்களை கைது செய்யக்கோரி ஆர்ப்பாட்டம், மறியலில் ஈடுபட்ட ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ., உட்பட 300க்கும் மேற்பட்டோர் கைது செய்யப் பட்டனர். அவனியாபுரம்- - திருப்பரங்குன்றம் ரோட்டில் தற்காலிக ஜல்லிக்கட்டு வாடிவாசல் அமைக்கும் இடத்தில் எம்.ஜி.ஆர்., சிலை உள்ளது. நேற்று முன்தினம், இதை மர்ம நபர் சேதப்படுத்தினார். இதை கண்டித்தும், அவரை கண்டறிந்து கைது செய்யக்கோரியும், அ.தி.மு.க., கிழக்கு மாவட்ட செயலர் ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ., தலைமையில் 200க்கும் மேற்பட்ட அ.தி.மு.க.,வினர் நேற்று அவனியாபுரத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். பின்பு மறியலில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கைது செய்து, மாலை விடுவித்தனர். அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் செல்லுார் ராஜூ கூறுகையில், ''சிலை உடைக்கப்பட்டு 50 மணி நேரத்தை கடந்த பின்பும் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை. போலீஸ் கமிஷனர் தனி கவனம் செலுத்தி குற்றவாளிகளை கண்டுபிடிக்கா விட்டால், அடுத்த கட்ட போராட்டத்துக்குச் செல்வோம்,'' என்றார்.