வாசகர்கள் கருத்துகள் ( 1 )
தமிழக வரலாற்றிலேயே ஒரு சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவந்தது இந்த கேடுகெட்ட திருட்டு மாடல் ஆட்சியில் தான்.....
சென்னை : சபாநாயகருக்கு எதிராக அ.தி.மு.க., கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி அடைந்தது.சபாநாயகர் அப்பாவு ஒருதலைப்பட்சமாக செயல்படுவதாகக் கூறி, அவரை பதவியில் இருந்து நீக்கக் கோரும் தீர்மானத்தை, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் உதயகுமார், கே.பி.முனுசாமி, செல்லுார் ராஜு, தங்கமணி உள்ளிட்ட, 16 பேர் நேற்று சட்டசபையில் முன்மொழிந்தனர். தீர்மானம் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படுவதாகக் கூறி, தன் இருக்கையில் இருந்து எழுந்து அப்பாவு சென்று விட்டார். இதையடுத்து, துணை சபாநாயகர் பிச்சாண்டி சபையை நடத்தினார். ''சபாநாயகர் அப்பாவுவிற்கு எதிரான தீர்மானத்தை, எதிர்க்கட்சி துணைத் தலைவர் உதயகுமார் முன்மொழிவார்,'' என, பிச்சாண்டி கூறினர். உடனே உதயகுமார், ''தீர்மானத்தை முன்மொழிந்து, எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி பேசுவார்,'' என்று கூறி அமர்ந்தார்.இதைத் தொடர்ந்து, பழனிசாமி பேசினார். பின், காங்., - செல்வப்பெருந்தகை, வி.சி., - சிந்தனைச்செல்வன், மார்க்சிஸ்ட் கம்யூ., - நாகை மாலி, இந்திய கம்யூ., - ராமச்சந்திரன், ம.தி.மு.க., - சதன் திருமலைகுமார், ம.ம.க., - ஜவாஹிருல்லா, கொ.ம.தே.க., - ஈஸ்வரன், த.வா.க., - வேல்முருகன், புரட்சி தொடர்ச்சி 6ம் பக்கம்
சபாநாயகர் அப்பாவு பேசியதாவது:பேச நேரம் ஒதுக்கவில்லை என, எதிர்க்கட்சி தலைவர் சொன்னார். ஆனால், கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின்போது, அவருக்கு, 2 மணி நேரம், 51 நிமிடம் பேசுவதற்கு வாய்ப்பு கொடுத்தோம். எதிர்க்கட்சிகள் எதை சொன்னாலும், அவசரப்பட்டு, ஆத்திரத்துடனும், கோபத்துடனும், எரிச்சலுடனும் முதல்வர் பதில் சொல்வது கிடையாது. அமைதியாக அமர்ந்து கேள்வியை உள்வாங்கி பதில் சொல்வார். இதுதான், சட்டசபையில் ஜனநாயகத்தை தலைநிமிர செய்துள்ளது.கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்தில், ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.,க்கள், 6 மணி நேரம் 33 நிமிடங்கள் பேசினர். எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.,க்கள், 12 மணி நேரம் 26 நிமிடங்கள் பேசுவதற்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டு உள்ளது. என் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் தோற்கடிக்கப்பட்டதாக சொல்ல மாட்டேன். ஜனநாயக அடிப்படையில், அது நிராகரிக்கப்பட்டு உள்ளது. அதற்காக, அனைவருக்கும் நன்றி.இவ்வாறு சபாநாயகர் பேசினார்.
முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: மக்கள் நம்பிக்கையை இழந்தவர்களால், இப்படி ஒரு தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளதை பார்த்து, மக்களே நகைப்பர். கடந்த, 2017ல், என்னால் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை எண்ணி, நான் அன்றைக்கு வருந்தினேன். அப்போதிருந்த சபாநாயகர், ஜனநாயகத்தை மதிக்காமல் நடந்த முறைகள் பற்றி, இங்குள்ள எதிர்க்கட்சி தலைவருக்கு நன்றாக தெரியும். அதை நான் மீண்டும் சொல்ல விரும்பவில்லை. அப்போதிருந்த சபாநாயகர், இப்போதுள்ள சபாநாயகரின் செயல்பாடுகளை ஒப்பிட்டுப் பார்த்தால், அப்பாவு நடுநிலையோடு செயல்படுகிறார் என்பதை, மக்கள் புரிந்து கொள்வர். சபாநாயகர் அப்பாவு, ஜனநாயகக் கொள்கைகளில் மிகுந்த ஈடுபாடு உடையவர். மற்றவர்கள் மனம் வருந்தாத அளவில் தன் நடவடிக்கைகளை அமைத்துக் கொள்பவர். நேர்மையான கருத்துகளை ஆணித்தரமாக முன்வைக்கும் பண்பு உடையவர். நடுநிலையோடு நிற்கும் நேர்மைத்திறனும், அனைவரிடமும் சிரித்த முகத்தோடு பழகும் பாங்கும், என்னை கவர்ந்த காரணத்தால் தான், அவரை இப்பதவிக்கு நான் முன்மொழிந்தேன். ஆசிரியராக இருந்து அரசியலுக்கு வந்த அப்பாவு கனிவானவர்; அதே நேரத்தில் கண்டிப்பானவர். இவை இரண்டுமே சபைக்கு தேவை என்பதை அனைவரும் ஏற்றுக்கொள்வர். இவை இல்லா விட்டால் சபையை கண்ணியத்துடனும், கட்டுப்பாடுடனும் நடத்த இயலாது. சபையில் என்னுடைய தலையீடோ, அமைச்சர்களின் தலையீடோ இல்லாத வகையில், அப்பாவு நடந்து வருகிறார். எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.,க்களிடம் பாசம், பற்று கொண்டு செயல்படுபவர் அப்பாவு என்பதை மனசாட்சியுடன் சிந்திப்பவர்கள் ஒப்புக்கொள்வர். அரசு மீது குறை, குற்றம் கூற வாய்ப்பில்லாத காரணத்தால், இப்படி ஒரு தீர்மானத்தை, உட்கட்சிக்குள் ஏற்பட்டுள்ள குழப்பத்தை திசைதிருப்ப கொண்டு வந்துள்ளனர். இப்படி ஒரு தீர்மானத்தைக் கொண்டு வந்தோமே என, எதிர்காலத்தில் உங்கள் மனசாட்சி உறுத்தும். இதை சபாநாயகர் மீது ஏவப்பட்ட அம்பாகவே கருதுகிறோம். அந்த அம்பை சபை ஏற்காது.இவ்வாறு முதல்வர் பேசினார்.
தமிழக வரலாற்றிலேயே ஒரு சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவந்தது இந்த கேடுகெட்ட திருட்டு மாடல் ஆட்சியில் தான்.....