துாத்துக்குடி: 'கடந்த 1998ல் பா.ஜ.,வுடன் கூட்டணி வைத்துக் கொண்ட பின், அந்த ஆட்சியை ஜெயலலிதா வீழ்த்தியது வரலாற்றுப் பிழை' என அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு பேசினார். துாத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் அ.தி.மு.க., மற்றும் பா.ஜ., நிர்வாகிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடந்தது. அதில் பங்கேற்று கடம்பூர் ராஜு பேசியதாவது: கடந்த லோக்சபா தேர்தலுக்கு, பா.ஜ.,வுடன் கூட்டணி அமைத்திருந்தால், '40 தொகுதிகளிலும் வெற்றி பெற்றிருக்கலாம்' என சொல்கின்றனர். அதில் எனக்கு உடன்பாடில்லை. பிரதமர் மோடி எடுத்த 'ஆப்பரேஷன் சிந்துார்' நடவடிக்கையை, உலக நாடுகள் பாராட்டுகின்றன. பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் நெற்றிக் கண்ணை திறந்து, தி.மு.க., ஆட்சியை பதம் பார்க்க வேண்டும். கடந்த 1998ல், பா.ஜ.,வுடன் அ.தி.மு.க., கூட்டணி அமைத்தது. 'கூடா நட்பு கேடாய் முடியும்' என்பது போல, சுப்பிரமணிய சாமியின் பேச்சை கேட்டு, ஒரு ஓட்டில் பா.ஜ., அரசை வீழ்த்தியது வரலாற்றுப் பிழையாகி விட்டது. கடந்த லோக்சபா தேர்தலில் கூட்டணி இல்லாமல், ஒரு சீட்டு கூட வெற்றி பெற முடியாது என தெரிந்து தான், தேர்தலை சந்தித்தோம். இவ்வாறு அவர் பேசினார். புல் அவுட்: திரித்து கூறப்பட்டுள்ளது! கடந்த 1998ல் பா.ஜ.,வுடன் கூட்டணி சேர, மற்ற கட்சிகள் யோசித்த நிலையில், ஜெயலலிதா துணிச்சலாக முடிவெடுத்து கூட்டணி வைத்தார். 30 எம்.பி.,க்கள் வெற்றி பெற்றனர். அதனாலேயே, பா.ஜ., மத்தியில் ஆட்சிக்கு வந்தது. சில சூழல்களால், பா.ஜ., ஆதரவு நிலையில் இருந்து வெளியே வந்து விட்டோம். பா.ஜ., ஆட்சி கவிழ்ந்தது. அந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்ட தி.மு.க., பா.ஜ.,வுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டு வெற்றி பெற்று, வாஜ்பாய் தலைமையிலான அமைச்சரவையில் பங்கேற்றது; தன்னை வளப்படுத்திக் கொண்டது. தி.மு.க.,வுடன் பா.ஜ., சேர்ந்தால், அது நல்ல கட்சி; நாங்கள் சேர்ந்தால் தீண்டத்தகாத கட்சியா என கேட்டு கருத்தை வெளிப்படுத்தினேன். ஆனால், என் கருத்து திரித்து கூறப்பட்டுள்ளது. கடம்பூர் ராஜு, முன்னாள் அமைச்சர், அ.தி.மு.க.,