| ADDED : நவ 14, 2025 06:59 AM
விருத்தாசலம்: 'கூட்டணி என்ற பெயரில் எல்லாவற்றையும் காங்கிரஸ் இழந்து விட முடியாது' என, என தமிழக காங்., முன்னாள் தலைவர் அழகிரி தெரிவித்தார். கடலுார் மாவட்டம், விருத்தாசலத்தில் நடந்த, காங்., கூட்டத்தில், அவர் பேசியதாவது: ராட்சத பலத்துடன், பா.ஜ., உள்ளது; நம்மிடம் கொள்கை பலம் உள்ளது. காங்., அல்லாத முதல்வர்களில் ஸ்டாலின் மட்டுமே கொள்கையுடன் செயல்படுகிறார். ஸ்டாலின் நினைத்திருந்தால் பா.ஜ.,வை அரவணைத்து சென்றிருக்கலாம். ஆனால், ராகுலுக்கு துணையாக நிற்கிறார். தேர்தலில், அதிக இடங்களில் காங்கிரஸ் போட்டியிட வேண்டும்; ஆட்சியில் பங்கு பெற வேண்டும். இது தான் தமிழக காங்கிரசார் அனைவரது எண்ணம். இது கூட்டணிக்கு எதிரான கருத்து அல்ல. அதற்காக, கூட்டணி என்ற பெயரில் எல்லாவற்றையும் இழந்து விட முடியாது. இந்த கூட்டணியை விரும்புகிறேன். அடுத்த முதல்வராக ஸ்டாலின் வர வேண்டும். அதே நேரத்தில், தமிழக காங்கிரசும் வளர வேண்டும். பா.ஜ., - ஆர்.எஸ்.எஸ்., பொய் பிரசாரம் செய்து, தவறான கருத்துகளை மக்கள் மனதில் விதைக்கின்றனர். எனவே, எதிர்மறை கருத்துகளுக்கு அந்த இடத்திலேயே பதிலடி தர வேண்டும். ராகுல் போல அரசியல் வரலாறு கொண்டவர், இந்தியாவிலேயே யாரும் இல்லை. கொள்கை தான் அவரது கோட்பாடு. இந்தியாவை ராகுல் வழி நடத்தும் வரை காங்., கட்சியினருக்கு துாக்கம் வரக்கூடாது. இவ்வாறு அவர் பேசினார்.