சிறுமி பாலியல் வழக்கில் கைதானவர் பெண்ணை கடத்த முயன்றதும் அம்பலம்; போலீசார் தகவல்
சென்னை: சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான அசாம் வாலிபர், இளம் பெண்ணை கட த்த இருந்ததும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த, 10 வயது சிறுமியை, பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், அசாமை சேர்ந்த ராஜு பிஸ்வாகர்மா, 35, என்பவரை போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்துள்ளனர். அவரது வாக்குமூலம் குறித்து போலீசார் கூறியது: திருமணமாகி மனைவியை பிரிந்து வாழும் ராஜு பிஸ்வாகர்மா, ஆந்திர மாநிலம், சூலுார்பேட்டை சாலையோர தாபா உணவகத்தில், இரவு நேரத்தில் வேலை செய்து வந்துள்ளார். இவருக்கு கஞ்சா வியாபாரிகளின் தொடர்பு கிடைத்துள்ளது. கஞ்சா போதைக்காக, திருவள்ளூர் மாவட்டத்தில், கவரைப்பேட்டை, ஆரப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளுக்கு வந்து சென்றுள்ளார். சிறுமியை பாலியல் வன்முறை செய்வதற்கு முன், அதே பகுதியில், இளம் பெண் ஒருவரை பல நாட்கள் நோட்டமிட்டு, கடத்திச் சென்று, பாலியல் வன்முறை செய்ய திட்டமிட்டு இருந்துள்ளார். சம்பவத்தன்று, அந்த இளம் பெண், 'எதற்காக என்னை பின்தொடர்ந்து வருகிறாய்' எனக் கேட்டு, கடுமையாக திட்டி உள்ளார். அந்த சமயத்தில், இளம் பெண்ணின் தோழியும் அந்த இடத்திற்கு வந்துள்ளார். இதனால், ராஜு பிஸ்வாகர்மாவின் திட்டம் தோல்வியில் முடிந்துள்ளது. அதன் பின்னர் தான், சிறுமியை மாந்தோப்புக்குள் துாக்கிச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இவரால் வேறு யாராவது பாதிக்கப்பட்டு இருந்தால், போலீசாரிடம் புகார் அளிக்கலாம். ராஜு பிஸ்வாகர்மாவை காவலில் எடுத்தும் விசாரிக்க உள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.