| ADDED : மார் 12, 2024 04:14 PM
மதுரை: லஞ்சம் வாங்கிய வழக்கில் கைதான அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரியின் ஜாமின் மனு மீதான விசாரணையில் இருந்து விலகிக் கொள்வதாக உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதி அறிவித்துள்ளார். புதிய நீதிபதியை தலைமை நீதிபதி முடிவு செய்வார் என அறிவித்துள்ளார்.திண்டுக்கல் அரசு மருத்துவமனை துணை கண்காணிப்பாளர் சுரேஷ்பாபுவிடம், சொத்து குவிப்பு வழக்கில் இருந்து விடுவிப்பதாக கூறி கடந்த டிச.,1ல் ரூ.40 லட்சம் லஞ்சமாக வாங்கி கைதானவர் அங்கித் திவாரி. தற்போது மதுரை மத்திய சிறையில் உள்ளார். அமலாக்கத்துறை சார்பிலும் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. அவர் தாக்கல் செய்த ஜாமின் மனு கீழமை நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்தது. உயர்நீதிமன்ற மதுரை கிளையும் தள்ளுபடி செய்தது.இதனையடுத்து அங்கித் திவாரி மீண்டும் ஜாமின் கேட்டு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு, நீதிபதி விவேக்குமார் சிங் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த விசாரணையில் இருந்து விலகிக் கொள்வதாக அறிவித்த நீதிபதி, விசாரணையை வேறு நீதிபதிக்கு மாற்றுமாறு உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கோரிக்கை விடுத்தார்.