உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கப்பலில் சிக்கிய போதை பொருள் சிறையில் இருந்தபடி சாதிக் கைவரிசையா?

கப்பலில் சிக்கிய போதை பொருள் சிறையில் இருந்தபடி சாதிக் கைவரிசையா?

சென்னை:தி.மு.க.,வைச் சேர்ந்த ஜாபர் சாதிக் பாணியில், சென்னையில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு போதை பொருள் கடத்த முயற்சி நடந்துள்ளதால், மத்திய போதை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகளும், விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். தி.மு.க.,வில் நிர்வாகியாக இருந்த ஜாபர் சாதிக், போதைப் பொருள் கடத்தல் மன்னனாக செயல்பட்டு வந்தார். அவரது 'நெட் ஒர்க்' மலேஷியா, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளுக்கும் விரிவடைந்துள்ளது.போதைப்பொருள் கடத்துவதற்காகவே, நிறுவனம் ஒன்றை துவங்கி, அதன் வாயிலாக வெளிநாடுகளுக்கு பால் பவுடர் மற்றும் உணவுப் பொருட்கள் ஏற்றுமதி செய்வது போல, 'சூடோ எபிட்ரீன்' என்ற போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டார்.அவர், சரக்கு கப்பலில் தான் போதைப் பொருள் கடத்துவார். அதுவும், உணவுப் பொருட்கள் பாக்கெட்டின் அடிப்பகுதியில், எளிதில் கண்டு பிடிக்க முடியாதபடி சூடோ எபிட்ரீன் மறைத்து வைக்கப்பட்டு இருக்கும். இப்படி பார்சல் செய்வதில் ஜாபர் சாதிக் கைதேர்ந்தவர். டில்லியில் ஜாபர் சாதிக் மற்றும் அவரின் கூட்டாளிகளை, மத்திய போதை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்து விசாரித்தபோது, இந்த விபரங்கள் தெரிய வந்தன.அதே பாணியில், சென்னை துறைமுகத்தில் இருந்து சரக்கு கப்பலில், ஆஸ்திரேலியாவுக்கு, 110 கோடி ரூபாய் மதிப்புள்ள சூடோ எபிட்ரீன் கடத்த முயற்சி நடந்துள்ளது. இது தொடர்பாக, சென்னை அண்ணா நகரைச் சேர்ந்த அபுதாஹிர், 30; அகமது பாஷா, 35, ஆகியோரை, மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.அவர்களிடம் பறிமுதல் செய்த பார்சல்கள், கடத்தல் முயற்சி நடந்த விதம், ஜாபர் சாதிக் பாணியில் இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து, மத்திய போதைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு தெரிவித்துள்ளனர். அவர்கள், அபுதாஹிர், அகமது பாஷா ஆகியோருக்கும், ஜாபர் சாதிக்கிற்கும் தொடர்பு உள்ளதா என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர்.போதை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கூறியதாவது:ஆஸ்திரேலியா செல்ல இருந்த சரக்கு கப்பலின் கன்டெய்னரில், உணவுப் பொருட்கள் போல 450 மூட்டைகள் இருந்தன. அவற்றின் உள்ளே, ஒவ்வொரு மூட்டையிலும், டியூப் லைட் தயாரிக்கும் போது, அதன் உட்பகுதியில் பூசப்படும் குவார்ட்ஸ் பவுடர் பார்சல்கள், தலா, 50 கிலோ அளவில் இருந்தன. அவற்றில், 37 பார்சல்களின் அடிப்பகுதியில், 112 கிலோ சூடோ எபிட்ரீன் இருந்தது. இதன் மதிப்பு, 110 கோடி ரூபாய். இந்த போதைப் பொருள் கடத்தல் முயற்சியும், ஜாபர் சாதிக் மற்றும் அவரின் கூட்டாளிகள் போதைப்பொருள் கடத்தல் பாணியும் ஒன்றாக தெரிகிறது. அதனால், சிறையில் இருந்தபடி, ஜாபர் சாதிக் தன் கூட்டாளிகள் வாயிலாக போதை பொருள் கடத்தலில் ஈடுபட்டாரா என விசாரித்து வருகிறோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ