வெடிகுண்டுகள் பதுக்கலா? பாம் சரவணனை ஆந்திரா அழைத்து செல்ல திட்டம்
சென்னை:பன்னீர்செல்வம் கொலை தொடர்பான தடயங்களை ஆராய, பாம் சரவணனை ஆந்திரா அழைத்துச் செல்ல தனிப்படை போலீசார் திட்டமிட்டுள்ளனர்.சென்னை, புளியந்தோப்பை சேர்ந்தவர் ரவுடி, 'பாம்' சரவணன், 41. ஆந்திர மாநிலம் வரதபாளையத்தில் பதுங்கி இருந்த அவரை, 14ம் தேதி தனிப்படை போலீசார் கைது செய்து, சென்னைக்கு அழைத்து வந்தனர். அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், தன் அண்ணன் தென்னரசுவின் கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட கோயம்பேடைச் சேர்ந்த ரவுடி பன்னீர்செல்வத்தை, ஆந்திரா கடத்தி சென்று கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார்.இதையடுத்து, பன்னீர்செல்வம் காணாமல் போன வழக்கை, கொலை வழக்காக போலீசார் பதிவு செய்துள்ளனர். தற்போது நீதிமன்ற காவலில் இருக்கும் பாம் சரவணனை காவலில் எடுத்து விசாரிக்க திட்டமிட்டுள்ளனர். மேலும், ஆந்திரா மாநிலம் அழைத்துச் சென்று, பன்னீர்செல்வம் உடல் எரிக்கப்பட்ட பகுதியில் தடயங்கள் ஏதேனும் இருக்கிறதா என, ஆய்வு செய்ய உள்ளனர். அங்கு சரவணன் தங்கியிருந்த பகுதியில், வெடிகுண்டுகள் மற்றும் ஆயுதங்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருக்கலாம் என்பதால், அவற்றை பறிமுதல் செய்யவும் திட்டமிட்டு உள்ளனர்.