கேள்வியா கேட்கிறாய்? வரிசையில் போய் உட்கார் ! சேர்மன் - துணை சேர்மன் லடாய்
பள்ளிப்பாளையம்: நகராட்சி கூட்டத்தில், ஆளுங்கட்சி தலைவரை எதிர்த்து கேள்வி கேட்டதால், அதே கட்சியின் துணை தலைவருக்கு மேடையில் இருக்கை போடாமல், கவுன்சிலர்கள் வரிசையில் அமர சொன்ன தால், பள்ளிப்பாளையம் நகராட்சி கூட்டத்தில் காரசார விவாதம் நடந்தது. நாமக்கல் மாவட்டம், பள்ளிப்பாளையம் நகராட்சியில் தி.மு.க.,வை சேர்ந்த செல்வராஜ் தலைவராகவும், பாலமுருகன் துணை தலைவராகவும் உள்ளனர். வழக்கமாக நகராட்சி கூட்டத்தில், மேடையில் தலைவர், துணை தலைவர், நகராட்சி கமிஷனர் ஆகிய மூவருக்கும் சமமாக இருக்கைகள் இருக்கும். ஆனால், நேற்று நடந்த கூட்டத்தில், மேடையில், தலைவர், கமிஷனருக்கு மட்டுமே இருக்கை இருந்தது. கூட்டத்திற்கு வந்த துணை தலைவர் பாலமுருகன், தனக்கு மேடையில் இருக்கை இல்லாததை கண்டு, தலைவரிடம், 'ஏன் எனக்கு சேர் போடவில்லை' என, கேட்டார். தலைவர் செல்வராஜ், 'நீங்க தேவையில்லாத கேள்வியெல்லாம் கேட்குறீங்க... அதிகாரிகளை ஒருமையில் பேசுறீங்க... இதனால் கவுன்சிலர் வரிசையில் போய் உட்காருங்க. கீழ இருந்து கேள்வி கேளுங்கள்; நான் பதில் சொல்றேன்' என்றார். இதற்கு, துணை தலைவர் பாலமுருகன், 'கேள்வி கேட்டால் தலைவருக்கு கோபம் வருது... மக்கள் பிரச்னை பற்றி தான் பேசு றேன். ஒவ்வொரு முறையும் பிரச்னைகளை தலைவர் அறைக்கு போய் தான் பேசணும்னா நகராட்சி கூட்டம் எதுக்கு? தலைவர் அறையிலேயே நடத்த வேண்டியது தானே?' என, ஆவேசமாக பேசினார். ஒரு கட்டத்தில், தலைவர், துணை தலைவர் இடையே காரசார வாக்குவாதம் ஏற்பட்டது. கவுன்சிலர்கள் சமரசம் செய்தனர். அப்போது, பாலமுருகன் , 'கட்சி அறிவித்த வேட்பாளரை தலைவராக்கி இருக்கணும்... இது நம்ம தப்பு தான். இனி எந்த கூட்டத்திற்கும் வரமாட்டேன். மரியாதை இல்லாத இடத்தில் எனக்கு வேலையில்லை. ராஜினாமா செய்கிறேன்' எனக்கூறி, கூட்டத்தில் இருந்து வெளியேறினார். தி.மு.க., - அ.தி.மு.க., - ம.தி.மு.க., கவுன்சிலர்களும் வெளியேறினர். தொடர்ந்து, கூட்டத்தில், தி.மு.க., கவுன்சிலர்கள் மூன்று பேர் மட்டுமே இருந்ததால், கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டது. நகராட்சி தலைவர் செல்வராஜ் கூறுகையில், ''பாலமுருகன் கட்சியில் சீனியர் என்பதால், உதவியாக இருப்பார் என, மேடையில் அமர வைத்தேன். ஆனால், கூட்டத்தில் மேஜையை தட்டி பேசுகிறார். அதிகாரியை பேசவிடாமல் தடுக்கிறார். இதனால் தான் கவுன்சிலர் வரிசையில் அவருக்கு இருக்கை ஒதுக்கப்பட்டது. இதனால் என் பதவி போனாலும் இது தான் முடிவு,'' என்றார்.
அரசியலில் இது சாதாரணமப்பா!
பள்ளிப்பாளையம் நகராட்சி தலைவர் பதவிக்கு, கவுன்சிலர் அமுதாவை தி.மு.க., தலைமை வேட்பாளராக அறிவித்தது. ஆனால், அவரை தோல்வியடைய செய்து, அதிருப்தி வேட்பாளர் செல்வராஜை வெற்றி பெற செய்ததற்கு, முக்கிய பணியாற்றியவர் துணை தலைவர் பாலமுருகன். தற்போது அவருக்கே தலைவர், 'தண்ணி' காட்டுகிறார். இரண்டு ஆண்டாக தலைவர், துணை தலைவர் இடையே நல்ல நட்பு இருந்தது. ஓராண்டாக தலைவர், துணை தலைவர் இடையே கருத்து வேறுபாடு அதிகரித்தது. அது, நேற்றைய கூட்டத்தில் வெளிச்சத்திற்கு வந்தது.