சென்னை: போலீசாரின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிப்பதுபோல, 'எக்ஸ்' தளத்தில், கலவரத்தை துாண்டும் விதமாக பதிவு வெளியிட்டு, அதை உடனடியாக நீக்கிய த.வெ.க., தேர்தல் பிரிவு மேலாண்மை பொதுச்செயலர் ஆதவ் அர்ஜுனா மீது, சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க, போலீசார் முடிவு செய்துள்ளனர். கரூரில் நடந்த விஜய் பிரசாரத்தின் போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி, 41 பேர் பலியான சம்பவம் தொடர்பாக, ஆதவ் அர்ஜுனா, 'எக்ஸ்' தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில் கூறப்பட்டு இருந்ததாவது: சாலையில் நடந்து சென்றாலே தடியடி; சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்தாலே கைது என, இப்படி ஆளும் வர்க்கத்தின் அடிவருடிகளாக காவல் துறை மாறிப்போனால், மீட்சிக்கு இளைஞர்களின் புரட்சி தான் வழி. இலங்கையிலும், நேபாளத்திலும் இளைஞர்களும், இளம் தலைமுறையினரும் ஒன்றாய் கூடி, அதிகாரத்திற்கு எதிரான புரட்சியை உருவாக்கிக் காட்டினரே. அதேபோல, இங்கும் இளைஞர்களின் எழுச்சி நிகழும். அந்த எழுச்சி தான் ஆட்சி மாற்றத்திற்கான அடித்தளமாகவும், அரச பயங்கரவாதத்திற்கான முடிவுரையாகவும் இருக்க போகிறது. பேய் அரசாண்டால் பிணந்தின்னும் சாஸ்திரங்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இந்தப் பதிவை, 30 நிமிடங்களில் நீக்கி விட்டார். ஆனால், அதற்குள் சமூக வலைதள கண்காணிப்பு பிரிவு போலீசார், ஆதவ் அர்ஜுனா பதிவை சேகரித்து விட்டனர். அவரது கருத்து, சட்டம் - ஒழுங்கை சீர்குலைத்து, கலவரத்தை துாண்டும் வகையில் இருப்பதாக கருதும் போலீசார், ஆதவ் அர்ஜுனா மீது நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளனர். வழக்குப்பதிவு
வன்முறையை துாண்டி கிளர்ச்சியை உண்டாக்கும் எண்ணத்தோடு சமூக வலைதளத்தில் பதிவிட்டதாக, ஆதவ் அர்ஜுனா மீது, சென்னை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.