உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மின் பயன்பாடு கணக்கெடுப்பு குளறுபடி வீடுகளில் திடீர் ஆய்வு செய்ய ஏற்பாடு

மின் பயன்பாடு கணக்கெடுப்பு குளறுபடி வீடுகளில் திடீர் ஆய்வு செய்ய ஏற்பாடு

சென்னை: மின் பயன்பாட்டை தவறாக கணக்கெடுப்பதால், நுகர்வோர் பாதிக்கப்படுவதுடன் மட்டுமின்றி, மின் வாரியத்திற்கும் வருவாய் இழப்பு ஏற்படுகிறது. எனவே, மிக அதிகமாக அல்லது குறைவாக மின் பயன்பாடு காட்டப்படும் இணைப்புகளில் ஆய்வு செய்ய, மின் வாரியம் உத்தரவிட்டுள்ளது. மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது: வீடுகளில் சில கணக்கீட்டாளர்கள் குறித்த காலத்தில், மின் பயன்பாட்டை கணக்கு எடுக்காமல், தாங்களாகவே பதிவு செய்வதால், அதிக மின் கட்டணம் வருவதாக புகார்கள் வருகின்றன. இதனால், நுகர்வோர் பாதிக்கப்படுகின்றனர். சில இடங்களில் மின் பயன்பாட்டை குறைத்து கணக்கெடுப்பதும் தெரிகிறது. இதனால், மின் வாரியத்திற்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது. தற்போது, மின் பயன்பாட்டை துல்லியமாக கணக்கெடுக்க, கணக்கெடுப்பு மென்பொருளில் புதிய வசதிகள் உருவாக்கப்பட்டுள்ளன. இதனால், ஒரு மின் இணைப்பில் சராசரி மின் பயன்பாட்டை விட, மிக அதிகமாக பதிவு செய்தால் பதிவாகாது. இந்த விபரத்தை, உதவி பொறியாளர் அறிய முடியும். அந்த மின் இணைப்புக்கான வீட்டில், உதவி பொறியாளர் நேரடியாக சென்று, கள ஆய்வு செய்து, மின் பயன்பாட்டின் உண்மை தன்மையை உறுதி செய்ய வேண்டும். அதிக மின் பயன்பாடு உள்ள இணைப்புகளில், திடீரென குறைவாக கணக்கெடுத்தால், மென்பொருளில் பதிவாகும். இருப்பினும் அந்த விபரம், உதவி பொறியாளருக்கு தெரியவரும். அவர் நேரடியாகவோ அல்லது அலுவலர்களை அனுப்பியோ மீட்டரை சோதிக்க வேண்டும். மீட்டரில் குறைபாடு இருந்தால், உடனே மாற்ற வேண்டும். தவறாக கணக்கெடுத்த பணியாளர் மீது செயற்பொறியாளர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி