உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சொத்து குவிப்பு வழக்கு: ஓ.பன்னீர் செல்வம் மீது மீண்டும் விசாரணை

சொத்து குவிப்பு வழக்கு: ஓ.பன்னீர் செல்வம் மீது மீண்டும் விசாரணை

சென்னை : முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மீதான சொத்து குவிப்பு வழக்கில், மீண்டும் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. வழக்கை இழுத்தடிக்கும் தந்திரத்தை எவராவது கையாண்டால், ஜாமினை ரத்து செய்யவும் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.கடந்த 2001 - 06ம் ஆண்டில், வருவாய் துறை அமைச்சராக பதவி வகித்தவர் பன்னீர்செல்வம்; 2006ல் ஆட்சி மாறியதும், பன்னீர்செல்வம், அவரது மனைவி, மகன், சகோதரர்கள் உள்ளிட்டோருக்கு எதிராக, வருமானத்துக்கு அதிகமாக 1.77 கோடி ரூபாய் அளவுக்கு சொத்துக்கள் சேர்த்ததாக, லஞ்ச ஒழிப்பு துறை வழக்கு பதிவு செய்தது.

அறிக்கை

மதுரை நீதிமன்றத்தில் இருந்த இந்த வழக்கை, சிவகங்கை நீதிமன்றத்துக்கு மாற்றி, 2012ல் உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. அப்போது, அ.தி.மு.க., மீண்டும் ஆட்சியை பிடித்திருந்தது. பன்னீர்செல்வம் உள்ளிட்டோருக்கு எதிராக வழக்கு தொடர அளித்திருந்த அனுமதியை வாபஸ் பெற்று, அரசு உத்தரவிட்டது. லஞ்ச ஒழிப்பு துறை தரப்பிலும், குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரங்கள் இல்லை எனக்கூறி, வழக்கை வாபஸ் பெற அனுமதிக்கும்படி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து, வழக்கில் இருந்து அனைவரையும் விடுவித்து, சிவகங்கை நீதிமன்றம், 2012 டிசம்பரில் உத்தரவிட்டது.இந்த உத்தரவை மறுஆய்வு செய்வது தொடர்பாக, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தார். இவ்வழக்கில், நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் பிறப்பித்த உத்தரவு:புலனாய்வு அதிகாரிகள், சிறப்பு நீதிமன்ற நீதிபதிகளை, அதிகாரத்துக்கு வந்த பின் அரசியல்வாதிகள் தங்கள் கையில் வைத்துக் கொண்டால், அவர்களுக்கு எதிரான ஊழல் வழக்கு நடக்காது. பன்னீர்செல்வம் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எதிரான வழக்கை வாபஸ் பெற, சிறப்பு நீதிமன்றம் அனுமதித்தது முறையற்றது; அதிகார துஷ்பிரயோகம் நடந்துள்ளது. சிறப்பு நீதிமன்றத்தின் உத்தரவு சட்டவிரோதமானது என்பதால், அது ரத்து செய்யப்பட வேண்டியதே. சட்டவிரோதமாக ஒரு உத்தரவை குற்றவியல் நீதிமன்றம் பிறப்பித்து, அது நீதி பிறழ்வதற்கு வழி வகுத்தால், அதை உயர் நீதிமன்றம் வேடிக்கை பார்க்க முடியாது. அரசியலமைப்பு சட்டத்தில், உயர் நீதிமன்றங்களுக்கு கண்காணிப்பு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. விசாரணை நீதிமன்றங்கள் சட்டப்படி செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும்.

சம்மன்

எனவே, தாமாக முன்வந்து விசாரிக்கும் அதிகாரத்தையும் சட்டம் வழங்கி உள்ளது. வழக்கு தொடுத்த அரசு தரப்பும், வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களும் கைகோர்த்து கொண்டால், நீதி நிர்வாகம் கேலிக்கூத்தாகி விடாமல் இருப்பது உறுதி செய்யப்பட வேண்டும். 'கடந்த 2012ல், அரசு தரப்பு வழக்கு முடிவுக்கு வந்து விட்டதால், மீண்டும் விசாரணையை தொடர உத்தரவிடுவது நியாயமற்றது' என, குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பில் வாதிடப்பட்டது; இதில், எந்த பொருளும் இல்லை.தொடர்ந்து அமைச்சராக பன்னீர்செல்வம் இருந்தார். 2021 மே வரை துணை முதல்வராகவும் பதவி வகித்தார். அப்போது, வழக்கில் இருந்து பன்னீர்செல்வம் மற்றும் அவரது குடும்பத்தினரை விடுவித்த உத்தரவை எதிர்த்து, அரசு மேல்முறையீடு செய்திருக்க வேண்டும் என்று கருதுவது முட்டாள்தனமானது. சிறப்பு நீதிமன்றத்தை போல், உயர் நீதிமன்றம் கற்பனை உலகில் இருக்க முடியாது.நீதிமன்றங்களின் மீது நம்பிக்கை வைத்திருப்பது தான், நம் நீதி நிர்வாகத்தின் கம்பீரமான முறை. எனவே, வழக்கை வாபஸ் பெற அனுமதித்து, குற்றம் சாட்டப்பட்டவர்களை விடுவித்து, சிவகங்கை சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. பன்னீர்செல்வத்தின் மனைவி உள்ளிட்ட இருவர் இறந்து விட்டதால், அவர்களுக்கு எதிரான வழக்கு கைவிடப்படுகிறது.இந்த வழக்கின் ஆவணங்களை நான்கு வாரங்களுக்குள், அதாவது நவம்பர் 27க்கு முன், மதுரையில் உள்ள எம்.பி., - எம்.எல்.ஏ.,க்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்துக்கு அனுப்ப வேண்டும். ஆவணங்களை பெற்ற பின், வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு, மதுரை சிறப்பு நீதிமன்றம், 'சம்மன்' அனுப்பி, சட்டப்படி நடவடிக்கையை தொடர வேண்டும்.

முன்னுரிமை

குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஆஜரான பின், அவர்களிடம் உத்தரவாதம் பெற வேண்டும். குற்றம் சாட்டப்பட்டவர்களில் எவராவது வழக்கை இழுத்தடிக்கும் தந்திரத்தை கையாண்டால், அவர்களின் ஜாமினை ரத்து செய்து, காவலில் வைக்க சிறப்பு நீதிமன்றம் உத்தரவிடலாம். லஞ்ச ஒழிப்பு துறை தாக்கல் செய்த மேல் விசாரணை அறிக்கையை, துணை அறிக்கையாக கருத வேண்டும். இந்த வழக்கு, 2006ல் தொடரப்பட்டது என்பதால், இதற்கு முன்னுரிமை அளித்து, அன்றாட விசாரணை நடத்துவதை, சிறப்பு நீதிமன்றம் உறுதி செய்ய வேண்டும். வரும் 2025 ஜூன் மாதத்திற்குள் வழக்கு விசாரணையை முடிக்க வேண்டும். இந்த வழக்கின் தகுதியை, உயர் நீதிமன்றம் ஆராயவில்லை. அதை, சிறப்பு நீதிமன்றம் தான் முடிவு செய்ய வேண்டும்.இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

ஜெய்ஹிந்த்புரம்
அக் 31, 2024 00:44

இதெல்லாம் ரெம்ப டூ மச்சி. ரூ 1.77 கோடி எல்லாம் இவருக்கு ஒரு மணிநேர வருமானம்.


K.n. Dhasarathan
அக் 30, 2024 16:55

லஞ்ச ஒழிப்பு துறையா அல்லது லஞ்ச ஊக்கத் துறையா ? ஆட்சி மாறினால் வழக்குகளுக்கு ஆதாரம் இல்லாமல் போகுமா ?அது எப்படி ? கேலிக்கு இடமாக இல்லையா இவர்கள் பனி ? அதைவிட சிறப்பு நீதி மன்றம், எப்படி வழக்கையே தள்ளுபடி செய்கிறார்கள் ? இந்த இரு துறைகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும், உயர் நீதி மன்றம் ஒருமுறையாவது இந்த மாதிரி வழக்குகளை கடுமையாக நடத்த வேண்டும்.


Venkata Subramanian
அக் 30, 2024 10:45

What is the punishment for the special court Judge who gave such judgement.


Thiagarajan Subramanian
அக் 30, 2024 10:07

1.77 கோடி என்பது கண்துடைப்பு நாடகம். உள்ளே துருவினால் ஏகப்பட்ட கோடிகள் தேறும்.


Oviya Vijay
அக் 30, 2024 08:33

கட்சித் தலைவி எவ்வழியோ தொண்டராகிய இவரும் அவ்வழியே... நடப்பு காலத்தில் அரசியலில் யாரும் உத்தமர்கள் இல்லை. காமராஜர் காலத்தோடு அதெல்லாம் முடிந்து விட்டது. அரசியல் என்ற போர்வையில் இருப்பவர்கள் அனைவருமே அயோக்கியர்களே... தேர்தல் என்று வந்தால் அதிலே ஓரளவுக்கு நல்ல அயோக்கியனையே தேர்ந்தெடுக்க நாம் முற்படுகிறோம். அவ்வளவே...


S.L.Narasimman
அக் 30, 2024 07:56

பிரதமர் மோடியும் டீகடை வைத்து இருந்தார். 25 ஆண்டுகளுக்கு மேல் மிக உயர்ந்த பதவியில் இருந்தாலும் தவறான முறையில் சொத்து சேர்க்கவில்லை. இந்த மனிசன் டீகடையின் மூலம் இத்தனைகொடி சம்பாதிக்க முடியுமா..அண்ணாமலை இந்த ஆளை கட்டீயாக பிடித்து தொங்குவது வியப்பு.


J.V. Iyer
அக் 30, 2024 04:32

இவர் மாட்டிக்கொள்வார். இவர்தான் மாடல் ஆட்சி செய்யவில்லையே?


Rao
அக் 30, 2024 02:15

As usual Supreme court, give a stay for this too and case will never come to an end.


தாமரை மலர்கிறது
அக் 30, 2024 01:14

ஓபிஎஸ் இனியும் ஆட்டம் போடாமல், முதல் விக்கெட்டாக பிஜேபியில் இணைவது, அவருக்கு நல்லது. இல்லையெனில் செந்தில் பாலாஜி கதை தான்.


சமீபத்திய செய்தி