மேலும் செய்திகள்
மணமக்களுக்கு பட்டு சேலை,வேட்டி சட்டை: பழனிசாமி
37 minutes ago
தமிழகத்தில் ஓட்டு திருட்டு நடக்காது
38 minutes ago
பாழடைந்த துறையாக மாறிய பள்ளிக்கல்வி துறை
43 minutes ago
மகனுக்கு பொறுப்பு ஏன்?
44 minutes ago
லஞ்ச ஒழிப்பு நடவடிக்கைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக, இந்த சிறப்பிதழை, 'தினமலர்' வழங்குகிறது. அரசு அலுவலர்கள் லஞ்சம் கேட்டால், பொதுமக்கள் என்ன செய்ய வேண்டும், எங்கு புகார் அளிக்க வேண்டும், புகாரின் மீது எந்த மாதிரியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்பது உள்ளிட்ட பல கேள்விகளுக்கு, இந்த இதழ் பதிலாக அமையும். இது, பத்திரப்படுத்த வேண்டிய ஆவணம். லஞ்சப் பேர்வழிகளை நீங்கள் எதிர்கொள்ள நேரிடும்போது, இந்த ஆவணமும், ஓர் ஆயுதமாக மாறி உதவும்.லஞ்சம்... லஞ்சம்... லஞ்சம்: பி றப்பு முதல் இறப்பு வரை மனிதனை ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. முன்பெல்லாம், லஞ்சம் வாங்குவோர், அரசுத்துறைகளில் அங்கொன்றும், இங்கொன்றுமாக குறைந்த எண்ணிக்கையில்தான் இருந்தனர். இவர்கள், நேர்மையான ஊழியர்களை கண்டு பயந்தனர். மக்களிடம் லஞ்சம் கேட்கவே கூச்சப்பட்டனர்; கைநீட்டி காசு வாங்க அச்சப்பட்டனர். இன்றோ, நிலைமை தலைகீழாக மாறிவிட்டது.அரசுத்துறைகளில் லஞ்சம் வாங்குவோர் எண்ணிக்கை பெருகிவிட்டது. நேர்மையாக பணியாற்றும் ஊழியர்களின் எண்ணிக்கை மிகவும் குறைந்துவிட்டது. லஞ்சம் வாங்குவோரை பார்த்து, லஞ்சம் வாங்காத ஊழியர்கள் அச்சப்படும் நிலையும் வந்துவிட்டது. இதற்குகாரணம், லஞ்சம் வாங்குவோரே, 'மெஜாரிட்டி'யாக உள்ளனர். 'லஞ்சம் வாங்குவது ஒன்றும் தப்பில்லை; அரசாங்க வேலை பெறவும், விரும்பிய இடத்துக்கு, 'டிரான்ஸ்பர்' பெறவும் பல லட்சங்களை செலவழிக்கிறோம். முதலீடு செய்த பணத்தை திரும்பப் பெற வேண்டாமா' என, லஞ்சம் வாங்குவதை, நியாயப்படுத்தவும் துணிந்துவிட்டனர்.அரசுத்துறையில் பணியாற்றும் ஒரு அதிகாரி அல்லது ஊழியர் லஞ்சம் வாங்காமல் பணியாற்றினால், தற்போது அது, அதிசயத்துக்குரிய செய்தியாக வெளியாகிறது. இந்த அவலத்தை என்னவென்று சொல்வது? ஒருவர் லஞ்சம் வாங்காமல், நேர்மையாக பணியாற்றுவது என்பது, வாழ்வில் அவர் கடைபிடிக்க வேண்டிய அடிப்படை ஒழுக்க நெறி கோட்பாடுகளில் ஒன்று. ஆனால், அவ்வாறான ஒழுக்க நெறி கோட்பாட்டை ஒருவர் பின்பற்றுவதே ஆச்சரியத்துக்கும், பாராட்டுக்கும் உரியதாக மாறிவிட்டது. இது, நாம் சார்ந்திருக்கும் சமூகம் எப்படிப்பட்ட சீரழிவுப்பாதையில், பேரபாயத்தை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது என்பதற்கு ஓர் எடுத்துக்காட்டு.முன்பெல்லாம், சட்டத்தை மீறி காரியங்களை செய்ய மட்டுமே, அதிகாரிகள், ஊழியர்கள் லஞ்சம் கேட்டார்கள். இப்போது, சட்டப்படியான ஒரு காரியத்தை செய்யக்கூட லஞ்சம் கேட்கிறார்கள்; அதுவும் மிரட்டிக் கேட்கிறார்கள். 'இந்த நடவடிக்கைக்கு, 'இன்ன ரேட்' என்று விலையையும் நிர்ணயம் செய்துவிட்டார்கள். 'கரன்சி'யை காட்டாதவர்களின் மனுக்கள், கசங்கிய காகிதமாக குப்பைக்கூடைக்கு போகின்றன. நம் நாட்டில் லஞ்சமும்- ஊழலும் கக்கூஸ் முதல் சட்டமியற்றும் பார்லிமென்ட் வரை நாறடித்துக்கொண்டிருக்கிறது. எல்லா துறைகளிலும், கல்லாப்பெட்டிகள் நிரம்பி வழிகின்றன. லஞ்சம் கொடுப்போர் இருக்கும்வரை, வாங்குவோரும் இருக்கத்தான் செய்வர். வாங்குவது குற்றமெனில்; கொடுப்பதும் குற்றமே. அந்த குற்றத்தை இனி, செய்ய வேண்டாம். அரசு அதிகாரிகள், ஊழியர்கள் லஞ்சம் கேட்டால், சட்டப்படியாக அவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்வது எப்படி? என்பதற்கு, இந்த இதழ் உங்களுக்கு வழிகாட்டும். ண
கேட்டால் ஆத்திரப்படாதீர்கள்! அரசின் நலத்திட்ட உதவி பெற, உங்களுக்கு வருமானச் சான்று தேவைப்படுகிறது என, வைத்துக்கொள்வோம். வருவாய்த்துறை அலுவலகத்தில் முறைப்படி விண்ணப்பம் அளிக்கிறீர்கள். அங்குள்ள அதிகாரியோ, '2000 ரூபாய் லஞ்சம் கொடுத்தால்தான் சான்று வழங்குவேன்' என்கிறார். அவரிடம் கோபத்தை வெளிப்படுத்தாதீர்கள். 'பணத்துடன் வருகிறேன்' என, பவ்யமாக கூறிவிட்டு வெளியேறிவிடுங்கள். லஞ்ச ஒழிப்பு அலுவலகத்தில் எழுத்து பூர்வமான புகார் அளியுங்கள். புகாரை பெற்றதும், லஞ்ச ஒழிப்புத்துறையின், ஆரம்பகட்ட விசாரணை இரு விதமாக நடக்கும்.புகார்தாரரின் கூற்றில் உண்மை உள்ளதாலஞ்சம் கேட்ட அதிகாரி எப்படிப்பட்டவர்அதிகாரி மீது லஞ்ச புகார் அளிப்பவர், நேர்மையானவராக இருக்க வேண்டும். மனுதாரரின் கோரிக்கை (வருமானச் சான்று கோரி, வருவாய்த்துறை அலுவலகத்தில் சமர்ப்பித்த விவரங்கள்) சட்டப்படி நியாயமானதாக இருக்க வேண்டும். இது குறித்துதான், லஞ்ச ஒழிப்புத்துறையினர் ஆரம்ப கட்ட விசாரணை மேற்கொள்வர். புகாரில் கூறிய விவரங்கள் உண்மை என்பதை உறுதிப்படுத்தியபின், லஞ்சம் கேட்ட அதிகாரி குறித்த விசாரணை ரகசியமாக நடக்கும். அவர் எப்படிப்பட்டவர், ஏற்கனவே புகார் உள்ளதா என, தகவல் திரட்டுவர். ஏனெனில், குற்றஞ்சாட்டப்படும் அதிகாரி, நேர்மையானவராகவும், கண்டிப்பானவராகவும் கூட இருக்கக்கூடும். அவரது பெயரைக்கூறி, புரோக்கர்கள் முறைகேட்டில் ஈடுபடவும் வாய்ப்புண்டு. எதிரிகள், பொய் புகார் அளித்து பழிவாங்கவும்கூடும். எனவே, ரகசிய விசாரணை நடத்தி, புகார் உண்மை என்பதை உறுதி செய்த பிறகே, அடுத்தகட்ட கைது நடவடிக்கையை லஞ்ச ஒழிப்புத் துறை மேற்கொள்ளும்.மன உறுதி பரிசோதிப்பு' புகார்தாரர் மனுவில் கூறப்பட்டுள்ள விவரங்கள் உண்மை' என, உறுதி செய்யப்பட்டதும், அவரது மன உறுதி பரிசோதிக்கப்படும். புகார்தாரர் தாமாக புகார் அளிக்க வந்துள்ளாரா? வேறு யாரேனும் தூண்டிவிட்டதன் காரணமாக புகார் அளிக்க வந்துள்ளாரா? லஞ்சம் கேட்ட அதிகாரியை கைது செய்ய வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளாரா? என, பரிசோதிப்பர். ஏனெனில், லஞ்சம் கேட்ட அதிகாரியை, 'பொறி' வைத்து கைது செய்வதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள மனுதாரரின் மன உறுதி மிக முக்கியமானது.காரணம், வழக்குப்பதிவு செய்து, லஞ்ச அதிகாரியை கைது செய்வதற்கான நடவடிக்கையை துவக்கியபின், பாதிக்கட்டத்தில், புகார்தாரர் ஒத்துழைக்காமல் அச்சமடைந்து ஓடிவிடுவதும் உண்டு. இவ்வாறு பின்வாங்கிவிட்டால், லஞ்சம் கேட்ட அதிகாரியை கைது செய்வதற்கான நடவடிக்கை தோற்றுவிடும். கைது நடவடிக்கையை துவக்கிய போலீஸ் அதிகாரி, துறைசார்ந்த நெருக்கடிக்கு உள்ளாக நேரிடும். எனவே, புகார்தாரர் மனஉறுதியுடன் சட்ட ரீதியான நடவடிக்கைக்கு ஒத்துழைக்க ஆலோசனைகள் வழங்கப்படும். அதன்பிறகே, லஞ்ச பேர்வழியை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் துவங்கும்.
ஒத்திகை... கைது!அரசு தரப்பு சாட்சிகள் அழைப்பு: லஞ்சம் கேட்ட அரசு ஊழியரை கைது செய்யும் நடவடிக்கையை மேற்கொள்ளும்போது, அரசு தரப்பு சாட்சிகள் இருவர் கட்டாயம் இருக்க வேண்டும், என்கிறது சட்டம். அதனால், அரசு தரப்பு சாட்சிகள் இருவர் தயார் செய்யப்படுவர். லஞ்ச வழக்கில் கைது செய்யப்படவுள்ள அதிகாரி எந்த பதவியில், என்ன பணி நிலையில் உள்ளாரோ, அதற்கு நிகரான பதவியில் இருக்கும் அதிகாரிகள் இருவர், அரசு தரப்பு சாட்சிகளாக அழைக்கப்படுவர். உதாரணமாக, 'குரூப் -1' பதவி நிலை அதிகாரியை கைது செய்யும் திட்டமிட்டிருந்தால், அதே பதவி நிலையில் இருக்கும் அதிகாரிகள் இருவரை, வேறு துறைகளில் இருந்து அழைப்பர். கைது செய்யப்படப்போகும் நபர் சாதாரண ஊழியராக இருப்பின், அதற்கு நிகரான பணி நிலையில் இருக்கும் ஊழியரை அழைப்பர்.அரசு தரப்பு சாட்சிகளாக செயல்படுமாறு, இவர்களை நேரடியாக தொடர்பு கொண்டு, லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் அழைக்க மாட்டார்கள். அழைக்கப்படும் சாட்சிகள், எந்த துறையில் பணியாற்றுகிறார்களோ, அந்த துறையின் தலைமை பொறுப்பில் உள்ள அதிகாரிக்கு கடிதம் அளிப்பர். அவர்தான், சாட்சியை தேர்வு செய்து அனுப்பி வைப்பார். இரு சாட்சிகள், வெவ்வேறு துறையை சார்ந்தவர்களாகவும் இருக்கக்கூடும். இங்கே ஒரு விஷயத்தை கவனிக்க வேண்டும். எந்த துறையில் பணியாற்றும் அதிகாரியை, லஞ்ச வழக்கில் கைது செய்ய திட்டமிட்டிருக்கிறார்களோ, அந்த துறையில் இருந்து, அரசு தரப்பு சாட்சிகளை அழைக்கமாட்டார்கள். அவ்வாறு அழைத்தால், கைது நடவடிக்கை திட்டம் கசிந்து தோல்வியடைந்துவிடும் வாய்ப்புள்ளது.ஒத்திகை: லஞ்ச ஒழிப்பு அலுவலகத்துக்கு வருகை தரும் இரு அரசு தரப்பு சாட்சிகளிடம், புகார்தாரரை லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அறிமுகம் செய்து வைப்பர். அப்போதுதான், எந்த துறையில் பணியாற்றும் அதிகாரியை கைது செய்ய, தாம் சாட்சிகளாக அழைக்கப்பட்டிருக்கிறோம் என்பதே, அந்த சாட்சிகளுக்கு தெரியும். அதன்பின், லஞ்ச அதிகாரியை கைது செய்வது தொடர்பான ஒத்திகை, லஞ்ச ஒழிப்பு அலுவலகத்தில் நடத்தப்படும். லஞ்ச அதிகாரியை கைது செய்யும் நடவடிக்கையை மேற்கொள்ளும்போது, புகார்தாரரும், அரசு தரப்பு சாட்சிகளும் எவ்வாறு ஒத்துழைக்க வேண்டும் என, காட்சி அமைப்புடன் கூடிய செயல் விளக்கம் அளிக்கப்படும். லஞ்ச ஒழிப்பு போலீசாரில் ஒருவர், லஞ்சம் கேட்ட அதிகாரியாக நடிப்பார். அரசு தரப்பு சாட்சிகள் தயார் நிலையில் இருப்பர். கைது செய்யப்போகும், போலீஸ் அதிகாரிகளும் இந்த ஒத்திகையில் நடிப்பர். ஒத்திகை வெற்றிகரமாக முடிந்ததும், அடுத்ததாக, உண்மையான கைது நடவடிக்கைகள் துவங்கும். லஞ்ச பணம் தயாராகும்: அதிகாரிக்கு தரப்பட வேண்டிய லஞ்சப்பணம் தயாராகும். இத்தொகையை, புகார்தாரரே கொண்டுவர வேண்டும். ரூபாய் நோட்டுகளில் இடம்பெற்றிருக்கும் 'சீரியல் எண்கள்' குறிப்பெடுக்கப்படும். அதன்பின், அவற்றின் மீது பினாப்தலின் எனும் ரசாயனம் தடவப்படும்.நேரம் குறிக்கப்படும்: புகார்தாரர், தன்னிடம் லஞ்சம் கேட்ட அதிகாரியை தொடர்பு கொண்டு, 'நான் உங்களை சந்திக்க எப்போது வரலாம்' என, கேட்டு, நேரம் குறிப்பார். லஞ்ச பணத்தை வாங்கி பையில் போடும் ஆவலில், அந்த அதிகாரியும் ஓர் நேரத்தை சொல்வார். ஆம், அந்த நேரமே, அவர் அந்த அலுவலகத்தில் கடைசியாக பணியாற்றப்போகும், கைதாகப்போகும் நேரம் என்பதை அவர் அறிந்திருக்க மாட்டார். காசு தான் கண்களை மறைக்கிறதே! இப்போது, புகார்தாரர், அதிகாரியை சந்திக்கப்போவது உறுதியாகிவிட்டது. லஞ்ச ஒழிப்பு போலீசார், ரசாயன பவுடர் தடவிய ரூபாய் நோட்டுகளை, புகார்தாரரின் சட்டை பாக்கெட்டில் வைத்து அனுப்பி வைப்பர். சாட்சி உடன் செல்வார்: அரசு தரப்பு சாட்சிகளில் ஒருவர், புகார்தாரருடன் செல்வார். மற்றொரு சாட்சி, லஞ்ச ஒழிப்பு போலீசாருடன் செல்வார். லஞ்ச பணத்தை எடுத்துச் செல்லும் புகார்தாரர், தப்பித்தவறிக்கூட ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை தொடமாட்டார்; தொடவும் கூடாது. குறிப்பிட்ட அரசு அலுவலகத்துக்குச்சென்று, தன்னிடமுள்ள லஞ்சப் பணத்தை அதிகாரியிடம் அளிப்பார். ஒருவேளை அந்த அதிகாரி உஷாராக இருந்து, 'உங்களுடன் வந்திருப்பது யார்' எனக் கேட்டால், 'இவரா சார், என் சித்தப்பாமாமா...' என, ஏதாவது ஒரு உறவுமுறையை கூறி நம்ப வைப்பார்.கைமாறியதும் சிக்னல்: புகார்தாரர் அதிகாரிக்கு லஞ்சம் கொடுப்பதை, உடன் வந்த அரசு தரப்பு சாட்சி நேரில் காண்பார். அதன்பின் இருவரும் வெளியே வருவர். தனக்கு ஏற்கனவே அறிவுறுத்தியபடி, புகார்தாரர் வெளியே வந்ததும், சாதாரண உடையில், சாமானியரைப் போன்று சற்று தொலைவில் மறைந்து நின்றிருக்கும் லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு 'சிக்னல்' தருவார். (தலைமுடியை மூன்று முறை தன்னிடம் உள்ள சீப்பால் வாருவார் அல்லது கைக்குட்டையை பாக்கெட்டில் இருந்து எடுத்து முகத்தை துடைப்பார் அல்லது, தனக்கு அளிக்கப்பட்ட வேறு ஏதாவது சமிக்ஞையை காண்பிப்பார்).அதிரடியாக கைது: 'இதற்காகத்தானே இத்தனை நாட்களாய் காத்திருந்தோம்' என்பதைப் போன்று, அவர்கள் அதிரடியாக உள்ளே புகுந்து லஞ்ச அதிகாரியை கைது செய்வர்.
குடும்பம் கெட்டுப்போகும்!: குடியாட்சி என்பது, 'மக்கள் எல்லோரும் இந்நாட்டு மன்னர்கள்' என்ற அடிப்படையில் அமைந்திருக்க வேண்டும். ஆனால், சாதாரண மக்களுக்கு அரசின் பலவிதமான சேவைகளும், நலத்திட்ட உதவிகளும் சரியான முறையில் தானாகவே சென்று சேர்கின்றனவா என்பது மிகப்பெரும் கேள்வி.லஞ்சம் இரு வகைப்படும். சட்டத்துக்கு உட்பட்டு செய்யவேண்டிய செயலை செய்வதற்காக லஞ்சம் கேட்பது; இரண்டாவது, சட்டத்துக்கு புறம்பான செயல்களைச் செய்ய லஞ்சம் கேட்பது; இவை இரண்டுமே அறத்துக்கு புறம்பானது. லஞ்சம் தராமலேயே தனி மனிதன், யார் துணையுமின்றி தனக்கு உரிய சேவைகளை அரசாங்கத்திடம் இருந்து பெற வேண்டும். அதற்கான, வழிவகைகளை செய்யவேண்டியது அரசின் கடமை.ஊழலின் அடிப்படையில் உலக நாடுகளை வரிசைப்படுத்தும் 'டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல்' என்ற அமைப்பு, கடந்த 2014ம் ஆண்டுக்கான ஆய்வில், நமது நாட்டை, 85 வது (மொத்தம் 175 நாடுகள்) இடத்தில் தர வரிசைப்படுத்தியுள்ளது. இதில், முதல் மூன்று இடங்களை பிடித்துள்ள நாடுகள் டென்மார்க், நியூசிலாந்து, பின்லாந்து.கடைசி மூன்று இடங்களை பிடித்துள்ள நாடுகள் சூடான், வடகொரியா, சோமாலியா. நமது நாடு இரண்டுக்கும் இடைப்பட்ட நிலையில் உள்ளது. ஊழலை குறைத்து, நமது தேசத்தை, தரவரிசை பட்டியலில் மேலே கொண்டு செல்லவேண்டியது நம் கடமை.அறன்ஈனும் இன்பமும் ஈனும் திறன்அறிந்து தீதின்றி வந்த பொருள்.பொருளைச் சேர்க்கும் வழியை அறிந்து, அறவழியில் நின்று, சிறுகச்சிறுக தேடிச்சேர்த்த செல்வம், ஒருவனுக்கு அறத்தை கொடுக்கும். அதன்வழியாக இன்பத்தையும் கொடுக்கும் என்கிறார் திருவள்ளுவர். அதற்கு மாறாக, தீய வழியில் பொருள் ஈட்டினால் என்ன நடக்கும் என்பதை, பொய்யாமொழி புலவர் தெளிவுபட கூறி எச்சரிக்கின்றார்.நடுவுஇன்றி நன்பொருள் வெஃகின் குடிபொன்றிக் குற்றமும் ஆங்கே தரும்.நடு நிலையில் இல்லாமல், பிறருக்குரிய நல்ல பொருளை ஒருவன் வஞ்சித்து கவர்ந்து கொள்ள விரும்பினால், அவனது குடும்பம் கெட்டுப்போய்விடும். அவனுக்கு அழிவை தரக்கூடிய குற்றங்களும் வந்து சேரும். வள்ளுவர் வாய்மொழி பொய்த்ததில்லை. நல்ல வழியில் பொருள் சேர்த்தால் இன்பம் வரும் என்ற வள்ளுவர், தீய வழியில் பொருள் சேர்த்தால், தான் கெடுவது மட்டுமின்றி, தனது குடும்பமும் கெட்டுப்போய்விடும் என உணர்த்துகிறார்; இதை, லஞ்சம் வாங்குவோர் உணரவேண்டும். -சி. ராஜேந்திரன் ஐ.ஆர்.எஸ்., முதன்மை ஆணையர், சுங்கம் மற்றும் கலால்வரித்துறை, விசாகபட்டினம், ஆந்திரா.
'மாப்பிள்ளை'க்கு புது பேன்ட், சர்ட்லஞ்சம் வாங்கி கையும் களவுமாக பிடிபட்ட அதிகாரி, 'என்ன செய்வது' எனத்தெரியாமல் வெலவெலத்துப் போய் வியர்த்துக்கொட்ட நிற்பார். அவரை சூழ்ந்து நிற்கும் லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் சட்டை, பேன்ட் பாக்கெட்களை சோதனையிட்டு லஞ்ச பணத்தை பறிமுதல் செய்வர். அவரது கை விரல்களை, தண்ணீரில் நனைக்கச் செய்வர். அவரது விரல்களில் படிந்திருக்கும் பினாப்தலின் ரசாயனம் தண்ணீரில் கரைந்து தன் இயல்பை காட்டும்; கை விரல்கள் இளஞ்சிவப்பு நிறத்துக்கு மாறும்.இது, ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை, இவர் தனது கையால் வாங்கியதை உறுதிப்படுத்தும். அடுத்ததாக, பேன்ட் அல்லது சட்டை பாக்கெட்களை சோதனையிடுவர். வாங்கிய பணத்தை அந்த அதிகாரி அங்குதான் போட்டு வைத்திருப்பார். பணத்தை கைப்பற்றியதும், ஆடையை கழற்றுமாறு கூறி, அதனை பெற்று, பாக்கெட் பகுதியை மட்டும் தண்ணீரில் நனைப்பர். ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டு வைக்கப்பட்ட அந்த 'பாக்கெட் பகுதி'யும் நிறம்மாறும். அந்த ஆடையும் கைப்பற்றப்படும்.இதற்கான நடவடிக்கையை துவக்கும்முன்பே, பெரியதும் அல்லாது, சிறியதும் அல்லாது, 'மீடியம் சைஸ்'சிலான 'பேன்ட், சட்டை'யை, லஞ்ச ஒழிப்பு போலீசார், புதிதாக, 'அரசு செலவில்' வாங்கிச் சென்றிருப்பர். ஆடைகளை கைப்பற்றும்போது, அவருக்கு மாற்று ஆடை தர வேண்டுமே! ஒரு வேளை, லஞ்சப் பணத்தை அந்த அதிகாரி அலுவலக, மேஜை 'டிராயரில்' வைத்திருந்தாலும் கைது செய்யப்படுவார்.சில நேரங்களில், அதிகாரிகள் நேரடியாக லஞ்சம் வாங்காமல் ஏஜென்ட்கள் மூலமாகவும், தனக்கு கீழ் பணியாற்றும் ஊழியர்கள் மூலமாகவும் பெறக்கூடும். அவ்வாறு பெற்றாலும், ஏஜென்ட் அல்லது ஊழியர் அளிக்கும் வாக்குமூலத்தை கொண்டு, அந்த அதிகாரி மீது நடவடிக்கை மேற்கொள்ள சட்டத்தில் இடமுண்டு.இங்கு ஒரு விஷயத்தை நாம் கூர்ந்து கவனிக்க வேண்டும். அதிகாரிக்கு தரப்படவேண்டிய லஞ்ச பணத்தை தயார் செய்வது புகார்தாரரின் பொறுப்பாகும். அதிகாரிக்கு திட்டமிட்டபடி லஞ்சம் தரப்பட்டு, அதை அவர் வாங்கியதால் கைதாகி சிறையில் அடைக்கப்படுகிறார் என, வைத்துக்கொள்வோம். இங்கு, இரு விதமான கேள்விகள் எழும்; அவை1. லஞ்சமாக தரப்பட்ட பணம் திரும்ப கிடைக்குமா?௨. அரசு அலுவலகத்தில் அளித்த கோரிக்கை மனு மீது நடவடிக்கை எடுக்கப்படுமா?புகார்தாரர் கவலைப்படத் தேவையில்லை. லஞ்ச அதிகாரி கைது நடவடிக்கையின்போது, அவருக்கு வழங்கப்பட்ட லஞ்ச பணம் கட்டாயம் புகார்தாரருக்கு திரும்பக் கிடைத்துவிடும். வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டதும், பணத்தை திரும்ப வழங்குவதற்கான நடவடிக்கையை லஞ்ச ஒழிப்பு போலீசார் மேற்கொள்வர். வழக்கு விசாரணையை கோர்ட்டில் வெற்றிகரமாக நடத்திச் செல்ல புகார்தாரர், போலீசாருக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டியது கடமை. அதே போன்று, புகார்தாரர், என்ன கோரிக்கைக்காக, முன்னர் அரசு அலுவலகத்தில் மனு அளித்திருந்தாரோ, அந்த கோரிக்கை மீதும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
சொத்து பறிமுதல்: லஞ்ச வழக்கில் ஒரு அதிகாரி அல்லது ஊழியர் கைது செய்யப்பட்டதும், அவரது அலுவலகம், வீடு, உறவினர் வீடு, நண்பர்கள் வீடு மற்றும் அவர் பணம், சொத்து பத்திரங்கள், நகைகள், பதுக்கி வைத்திருக்கலாம் என சந்தேகப்படும்படியான இடங்களில், லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்துவது வழக்கம். வருமானத்துக்கும் அதிகமாக லஞ்ச பணத்தில் நகை, சொத்துக்களை வாங்கிக் குவித்துள்ளாரா, என்பதை உறுதி செய்யவே இது போன்ற சோதனை நடத்தப்படுகிறது.வங்கியில் பாதுகாப்பு பெட்டக வசதியை பெற்று வைத்திருந்தாலும், 'லாக்கரை' திறந்து சோதனை நடக்கும். இவ்வாறான சோதனைகளில் சொத்துப் பத்திரங்கள், முதலீட்டு பத்திரங்கள், நகைகள் பறிமுதல் செய்யப்படலாம். வங்கிக்கணக்குகள் முடக்கப்படும். அதுமட்டுமின்றி அவர் வருமானத்துக்கும் அதிகமாக, சொத்து சேர்த்தால், அந்த குற்றத்துக்கென தனியாக, 'வருமானத்துக்கும் அதிகமான சொத்து சேர்ப்பு வழக்கு' பதிவு செய்யப்படும். லஞ்சம் வாங்கியது தொடர்பான வழக்கு தனியாகவும், வருமானத்துக்கு பொருந்தாத அளவில் சொத்து குவித்த வழக்கு தனியாகவும் நடக்கும்; குற்றம் நிரூபிக்கப்பட்டால், இரு வேறு வழக்குகளில், இருவிதமான தண்டனைகளை அனுபவிக்க நேரிடும்.
'சொத்து குவிப்பு' கணக்கிடப்படுவது எப்படி?: அரசு அதிகாரி ஒருவரின் மாத வருமானம் தோராயமாக 70 ஆயிரம் ரூபாய் என, வைத்துக்கொள்வோம். இதை, 12 மாதத்துக்கு கணக்கிட்டால், 8 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய்; இதுவே, இவரது ஆண்டு வருமானம். இவருக்கு மனைவி, கல்லூரிகளில் படிக்கும் இரு பிள்ளைகள், வயதான தாய், தந்தை இருப்பதாக கொள்வோம்.மாதம் தோறும் குடும்பம் நடத்துவதற்கான செலவு, பிள்ளைகளின் படிப்புக்கான செலவு, தாய் - தந்தைக்கான மருத்துவச் செலவு, வீடு- வாகன கடன் அடைப்பு உள்ளிட்ட அத்தியாவசிய செலவுகள் 50 ஆயிரம் ரூபாய் ஆவதாக கணக்கிட்டால், ஆண்டுக்கான மொத்தச் செலவு 6 லட்சம் ரூபாய். இதை, மொத்த வருமானம் 8 லட்சத்து 40 ஆயிரத்தில் இருந்து கழித்தால், 2 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் மீதமிருக்கும்; இதுவே, இவரது சேமிப்புத் தொகை. இதற்கு, சற்று ஏறத்தாழ சேமிப்பாக இருக்கலாம்.ஆனால் அதிகப்படியாக, அதாவது, 30 லட்சம் ரூபாய் வரை இருப்பதாக வைத்துக்கொண்டால், 2 லட்சத்து 40 ஆயிரம் போக, மீதமிருக்கும் பணம், நகை, சொத்துக்கள் சட்டவிரோதமாக சேர்க்கப்பட்டவை. அதாவது, அந்த அதிகாரி தனது பதவியை பயன்படுத்தி லஞ்சம், ஊழல் மூலமாக திரட்டப்பட்டவை. இந்த கணக்கீட்டின்படியே சொத்து குவிப்பு வழக்கு பதிவு செய்யப்படுகிறது. ஒருவேளை, அதிகாரியின் மனைவி, திருமணமாகாத மகன் அல்லது மகள், வேலைக்குச் செல்பவராகவோ, அல்லது தொழில் செய்பவராகவோ இருப்பின், அவர்களது வருமானமும் மேற்கண்டவாறே கணக்கிடப்படும்.
நீதித்துறையில் தனிப்பிரிவு!: நீதித்துறையில் பணியாற்றும் கடைநிலை ஊழியர் முதல் மாவட்ட நீதிபதி வரையிலானோருக்கு எதிரான லஞ்ச முறைகேடு புகார்களை விசாரிக்க, சென்னை உயர்நீதிமன்ற பதிவாளரின் கீழ் ஊழல் தடுப்பு பிரிவு செயல்படுகிறது.'நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு உள்ளிட்ட சட்டப்படி வழங்க வேண்டிய ஆவணங்களின் நகல்களை வழங்கிட, நீதித்துறை அலுவலர்கள் லஞ்சம் கேட்கின்றனர் நீதிமன்ற பொறுப்பில் உள்ள வழக்கில் சம்பந்தப்பட்ட சொத்துக்களை திரும்ப ஒப்படைக்க ஊழியர்கள் பணம் கேட்கின்றனர்' என்பது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளுடன் கூடிய புகார் மனுக்கள், உயர் நீதிமன்றத்துக்கு, பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் அனுப்பப்படுவது உண்டு.அவ்வாறு தபாலில் வரும் புகார் மனுக்களில் பெயர், அனுப்புனர் முகவரியுடன் கூடிய மனுக்கள் கவனத்தில் கொள்ளப்பட்டு, உரிய விசாரணை நடத்துவதற்காக உயர்நீதிமன்ற பதிவாளரின் நடவடிக்கைக்காக பரிந்துரைக்கப்படும். பதிவாளரே நேரடி விசாரணை நடத்தலாம் அல்லது தனக்கு கீழ் செயல்படும், ஊழல் தடுப்பு பிரிவு போலீஸ் அதிகாரிகளை கொண்டு விசாரணை நடத்தலாம். புகாரில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்பட்டால், குற்றத்தின் தன்மைக்கு ஏற்ப தண்டனை வழங்குவது பற்றி, உயர்நீதிமன்றம் முடிவு செய்யும்.
வெளிப்படையான நிர்வாகம் தேவை': லஞ்சம் வாங்கும் பழக்கம், அரசு சார்ந்த பணியாளர்களிடம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மத்திய புலனாய்வுத்துறை மற்றும் மாநில லஞ்ச ஒழிப்புத்துறை (ஈஙஅஇ), போன்ற துறைகளின் நடவடிக்கைகளை தாண்டியும், லஞ்சம் வாங்கும் சூழல், அரசு சார்ந்த பணியாளர்களிடம் பரவலாக காணப்படுகிறது. இதற்கான காரணங்கள் பல இருப்பினும், அவற்றில் இரு காரணங்கள் முக்கியமானவை.*'அரசு சார்ந்த ஊழியர்களால், தமக்கு செய்து தரப்படவேண்டிய காரியத்தை, லஞ்சம் கொடுத்தாவது நிறைவேற்றிக் கொள்வதில் தவறில்லை' என்ற, பொதுமக்களில் பலரது மனநிலை...* தனக்கு கீழ் பணியாற்றும் அரசு சார்ந்த பணியாளர்கள், அவர்தம் கடமையைச் செய்ய லஞ்சம் வாங்குகிறார்கள் என தெரிந்திருந்தும், அவர்களை கண்டித்து, மேலதிகாரிகள் நல்வழிப்படுத்துவது கிடையாது. திருந்தாதவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுப்பதும் இல்லை. இது, தவறிழைக்கும் அரசு சார்ந்த பணியாளர்களை, ஊக்கப்படுத்துவதாக அமைகிறது.பொதுமக்கள் அளிக்கும், லஞ்சப் புகார்களின் மீது உரிய குற்றவியல் நடவடிக்கைகளை எடுப்பதால் மட்டும், இக்கொடுஞ்செயல், இந்நாட்டில் ஏற்படுத்தி வரும் தீமையை அடியோடு ஒழித்துவிட முடியாது. அதற்கு, வெளிப்படைத் தன்மை கொண்ட நிர்வாகமும் தேவை. அரசு இயந்திரத்தை கண்காணித்து நிர்வகித்து வரும் அலுவலர்கள், லஞ்சமற்ற நிர்வாகத்தை வழங்குவேன் என, மன உறுதியுடன் செயலாற்ற வேண்டும். லஞ்சம் வாங்குவதைப் போல், லஞ்சம் கொடுப்பதும் மாபாதகச் செயல் என்பதை உணர வேண்டும். இவ்வாறான உணர்வை கொண்ட நல்ல உள்ளங்கள் ஒன்றுபட்டால், 'லஞ்சமற்ற பாரதம்' என்பது வெறும் கனவல்ல; நாளைய நிஜம்.- பெ. கண்ணப்பன் ஐ.பி.எஸ்., தமிழக காவல்துறை (ஓய்வு)யாரிடம் எப்படி தொடர்பு கொள்வது:மாநில ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு அலுவலகத்தின் முகவரி, தொலைபேசி எண்கள்:இயக்குனர், மாநில ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு, என்.சி.பி.,௨௧-௨௮, பி.எஸ்., குமாரசாமி ராஜா சாலை, ராஜா அண்ணாமலை புரம், சென்னை - 600 028அலுவலகம்: 044- - 2461 2561 பேக்ஸ்: 044 - 2461 6070கட்டுப்பாட்டு அறை: 044 - 24615929 / 24615949********************கோவை: காவல்துறை துணைக் கண்காணிப்பாளர், மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு, எண். 4 ராமசாமி நகர் முதல் தெரு, கவுண்டம்பாளையம், கோவை - 641 030. தொலைபேசி: 0422 - 244 9550; துணைக் கண்காணிப்பாளர் மொபைல்: 94450 48882***************திருப்பூர்: காவல்துறை துணைக் கண்காணிப்பாளர், மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு, எண்: 40, இரண்டாவது வீதி, 40 அடி ரோடு, ஆஷர் நகர், (எஸ்.ஏ.பி., தியேட்டர் பின்புறம்) அவிநாசி ரோடு, திருப்பூர் - 641 603. தொலைபேசி எண் : 0421 -- 2482 816; துணைக் கண்காணிப்பாளர் மொபைல்: 94450 48880***************நீலகிரி: காவல்துறை துணைக் கண்காணிப்பாளர், மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு, மதுவானா சந்திப்பு, கோத்தகிரி ரோடு, ஊட்டி, நீலகிரி - 643 001. தொலைபேசி: 0423- - 244 3962********************தமிழகம், புதுச்சேரிக்கான சி.பி.ஐ., அலுவலக முகவரி: இணை இயக்குனர், மத்திய புலனாய்வுத் துறை (CBI), 3வது தளம், ஈ.வி.கே., சம்பத் பில்டிங், கல்லுாரி சாலை, சென்னை - 600 006. போன்: 044- - 28232756, 28272358; மொபைல் போன்: 09444 446240; இ-மெயில் முகவரி: cbi.gov.in**********ஊழல் தடுப்பு பிரிவு, மத்திய புலனாய்வுத் துறை (CBI), 3-ம் தளம், சாஸ்திரி பவன், நெ.,26 ஹாடோவ்ஸ் சாலை, நுங்கம்பாக்கம், சென்னை - 6. போன்: 044- - 28273186; 28270992; cbi.gov.in; 09445674567
37 minutes ago
38 minutes ago
43 minutes ago
44 minutes ago