உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ரவுடி பன்னீர்செல்வம் எரித்துக்கொலை பழி தீர்த்ததாக பாம் சரவணன் வாக்குமூலம்

ரவுடி பன்னீர்செல்வம் எரித்துக்கொலை பழி தீர்த்ததாக பாம் சரவணன் வாக்குமூலம்

சென்னை:'என் அண்ணனை கொன்ற ரவுடி பன்னீர்செல்வத்தை கடத்தி, கொலை செய்து எரித்தேன்' என, கைதான ரவுடி 'பாம்' சரவணன் வாக்குமூலம் அளித்துள்ளார்.சென்னை, புளியந்தோப்பு வெங்கடேசபுரத்தைச் சேர்ந்த ரவுடி சரவணன், வெடிகுண்டுகள் வீசுவதில் கெட்டிக்காரர். ஆறு கொலைகள், ஆள் கடத்தல் உட்பட 26க்கும் மேற்பட்ட வழக்குகள் இவர் மீது உள்ளன.சென்னை பெரம்பூரில் கொல்லப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சி தமிழக தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங்கின் வலது கரமாக செயல்பட்டு வந்தார். ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பழி தீர்க்கும் நோக்கத்தில், ரவுடிகள் சம்பவம் செந்தில் உள்ளிட்டோரை தீர்த்துக்கட்ட திட்டமிட்டு வந்துள்ளார்.ஆந்திர மாநிலம், வரதபாளையத்தில் பதுங்கி இருந்த சரவணனை, சென்னை மாநகர ரவுடிகள் ஒழிப்பு பிரிவு போலீசார், நேற்று முன்தினம் கைது செய்தனர். அவரை சென்னைக்கு அழைத்து வந்தபோது, புளியந்தோப்பு பகுதியில் போலீசாரின் பிடியில் இருந்து தப்பிக்க முயன்றுள்ளார்.இதனால், சரவணனின் காலில் துப்பாக்கியால் சுட்டுள்ளனர். காயம் அடைந்த அவர், ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் கைதிகளுக்கான வார்டில் சேர்க்கப்பட்டு உள்ளார்.போலீசாரிடம் சரவணன் அளித்துள்ள வாக்குமூலம்:என் அண்ணன் தென்னரசு, பகுஜன் சமாஜ் கட்சியின் வட சென்னை மாவட்டச் செயலராக இருந்தார். 2015ல், சென்னை அருகே, தாமரைப்பாக்கம் கூட்டு ரோடு பகுதியில், என் அண்ணனை குடும்பத்தார் கண் முன், ரவுடிகள் ஆற்காடு சுரேஷ், பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் கொலை செய்தனர்.இக்கொலையில் ஈடுபட்ட அனைவரையும் கொலை செய்ய திட்டம் தீட்டி செயல்பட்டு வந்தேன். ஏற்கனவே, போலீசாரிடம் இருந்து தப்பிக்க முயன்றதால், என் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதனால், என்னால் வேகமாக ஓட முடியவில்லை.கடந்த, 2018ல், என் அண்ணன் தென்னரசுவை கொன்ற, சென்னை கோயம்பேடு பகுதியைச் சேர்ந்த ரவுடி பன்னீர்செல்வத்தை, என் கூட்டாளிகள் வீரா, அப்பு மற்றும் வழக்கறிஞர் ராஜேஷ் ஆகியோருடன் சேர்ந்து கடத்தினோம். கோயம்பேடு காவல் நிலையத்தில், 'பன்னீர்செல்வத்தை காணவில்லை' என, வழக்குப் பதிவு செய்துள்ளனர். அவரை கொலை செய்து, உடலை எரித்து விட்டோம்.தற்போது, என் கூட்டாளிகள் வீரா, அப்பு, ராஜேஷ் ஆகியோரும் உயிருடன் இல்லை. என் உயிருக்கு, ரவுடி நாகேந்திரனின் ஆட்களும், சம்பவம் செந்தில், ஆற்காடு சுரேஷ் மற்றும் அவரின் கூட்டாளிகளும் குறி வைத்து செயல்பட்டு வந்தனர். இதனால், ஆந்திராவுக்கு தப்பி விட்டேன்.அவ்வப்போது சென்னைக்கு வந்து செல்வேன். கடந்த, 2023ல், சென்னை பட்டினப்பாக்கத்தில், ஆற்காடு சுரேஷ் கொல்லப்பட்டார். இதற்கு பழி வாங்கும் நோக்கில், ஆம்ஸ்ட்ராங் கொல்லப்பட்டது எனக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இக்கொலையில் ஈடுபட்ட ஆற்காடு சுரேஷ் தம்பி பொன்னை பாலு உள்ளிட்டோரை தீர்த்துக்கட்ட காத்திருந்தேன்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.இந்நிலையில், பாம் சரவணனின் மனைவியான வழக்கறிஞர் மகாலட்சுமி, சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு, தன் கணவருக்கு சிகிச்சை அளிக்க கோரி மனு அளித்துள்ளார். அதில், 'என் கணவர் கைது குறித்து, அதிகாரிகள் முறைப்படி எனக்கு தகவல் தெரிவிக்கவில்லை. அவருக்கு உடல் ரீதியாக பல பாதிப்புகள் உள்ளன. என் கணவருக்கு தகுந்த சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்ய வேண்டும்' என, கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Ramesh Sargam
ஜன 17, 2025 13:09

குற்றத்தை குற்றம் செய்தவனே ஒப்புக்கொண்டாலும், அவனுக்கு அவ்வளவு சீக்கிரம் தண்டனை கிடைக்காது. ஆனால் ஜாமீன் உடனே கிடைத்துவிடும். இப்படித்தான் நமது நாட்டில் குற்றவாளிகள் தண்டனை பெறாமல், ஜாமீன் வாங்கிக்கொண்டு சுதந்திரமாக சுற்றித்திரிகிறார்கள்.... மேலும் பல குற்றங்களை புரிய. வெட்கம். வேதனை.


baala
ஜன 17, 2025 09:39

அதெப்படி ரௌடிகள் மனைவிகள் எல்லோருமே வக்கீல்கள் ஆக


நிக்கோல்தாம்சன்
ஜன 17, 2025 06:51

இப்படியும் ஒரு பொண்டாட்டியா என்பது தான் ட்விஸ்ட்


பிரேம்ஜி
ஜன 17, 2025 10:44

லக்கி மேன்!


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை