சென்னை:சாம்சங் தொழிலாளர்கள் போராட்டத்தில் பங்கேற்ற616 தொழிலாளர்கள் நேற்று கைது செய்யப்பட்டனர். முன்னதாக நேற்று முன்தினம், போராட்டம் நடக்கும் இடத்தில் அமைக்கப்பட்டிருந்த பந்தல் இரவோடு இரவாக அகற்றப்பட்டது. மேலும், சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் மணிகண்டனை பணி செய்ய விடாமல் தடுத்ததாக, இரு தொழிலாளர்களை போலீசார் கைது செய்தனர்.காஞ்சிபுரம் மாவட்டம், சுங்குவார்சத்திரத்தில் சாம்சங் தொழிற்சாலை இயங்கி வருகிறது. அங்கு, பணிபுரியும் தொழிலாளர்களில் ஒரு பகுதியினர், சி.ஐ.டி.யு., தொழிற்சங்கத்தை அங்கீகாரம் செய்வது உள்ளிட்ட ஏழு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். உடன்பாடு ஏற்படவில்லை
இதை கைவிட, தொழிற்சாலை நிர்வாகம் மற்றும் அரசு தரப்பில் ஏழு கட்ட பேச்சு நடத்தியும் உடன்பாடு ஏற்படவில்லை.அமைச்சர்கள் அன்பரசன், ராஜா, கணேசன் அடங்கிய குழு, வேலைநிறுத்தப் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பாக, தலைமைச் செயலகத்தில் இரு தினங்களுக்கு முன், 10 மணி நேரம் பேச்சு நடந்தது. அதில், ஊதியத்தை 5,000 ரூபாய் உயர்த்துவது உள்ளிட்ட கோரிக்கைகளை, ஒரு பிரிவு ஊழியர்கள் ஏற்றனர். ஆனால், சி.ஐ.டி.யு., சங்கத்திற்கு அங்கீகாரம் வழங்கக் கோரியதை ஏற்க முடியாது என, சாம்சங் நிர்வாகம் தெரிவித்தது. இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு உள்ளதால், தீர்ப்பு வந்தவுடன் அதன்படி அரசு செயல்படும் என அமைச்சர்கள் உறுதி தெரிவித்தனர். இதை ஏற்காமல், சங்கத்திற்கு அங்கீகாரம் அளிக்கும் வரை போராட்டம் தொடரும் என, சாம்சங் நிறுவன சி.ஐ.டி.யு., தொழிற்சங்க தலைவர் முத்துகுமார் தெரிவித்தார். நேற்று முன்தினம், போராட்டத்திற்கு சாம்சங் தொழிலாளர்கள் வந்த வாகனம் கவிழ்ந்து, ஐந்துக்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். போலீசாரின் கெடுபிடியால் தான் விபத்து ஏற்பட்டதாகக் கூறி, அவர்களுடன் சில தொழிலாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது, பணியில் இருந்த உதவி ஆய்வாளர் மணிகண்டன், தொழிலாளர்களால் கீழே தள்ளி விடப்பட்டார். இதையடுத்து, அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டது.இந்நிலையில், தொழிலாளர்கள் பந்தல் அமைத்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்த இடம் தனியாருக்கு சொந்தமானது எனக் கூறி, பந்தலை நேற்று முன்தினம் இரவோடு இரவாக போலீசார் அகற்றினர்.மேலும், சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் மணிகண்டனை பணி செய்ய விடாமல் தடுத்து தாக்கியதாக, ராஜபூபதி, 27, ஆசிக் அகமது, 33, பாலாஜி, 32, சண்முகம், 27, மோகன்ராஜ், 30, ஆனந்தன், 31, சிவநேசன், 30, ஆகியோர் மீது வழக்கு பதிந்து, போலீசார் கைது செய்து, பின்னர் ஜாமினில் விடுவித்தனர். போலீசார் குவிப்பு
நேற்று காலை, பந்தல் அகற்றப்பட்ட அதே இடத்தில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். அங்கு, 200க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். நீண்ட நேர பேச்சுக்குப் பின், சி.ஐ.டி.யு., மாநில தலைவர் சவுந்தரராஜன், சாம்சங் சி.ஐ.டி.யு., தலைவர் முத்துகுமார் உட்பட 616 பேரை போலீசார் கைது செய்து, சுங்குவார்சத்திரத்தில் உள்ள இரு மண்டபங்களில் தங்க வைத்தனர்.போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்து தாக்கியதாக, எலன், 28, சூர்யபிரகாஷ், 26, இருவரை போலீசார் கைது செய்து, ஸ்ரீபெரும்புதுார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர். நேற்று காலை போராட்டத்தில், 600க்கும் மேற்பட்டசாம்சங் தொழிலாளர்கள் ஈடுபட்டனர். அப்போது தயாநிதி, 28, மணிமாறன், 25, ஆகிய இருவர் திடீரென மயக்கம் அடைந்தனர். சக தொழிலாளர்கள் அவர்களை மீட்டு, '108' ஆம்புலன்ஸ் வாயிலாக மருத்துவமனையில் சேர்த்தனர்.அடக்குமுறையால் ஒடுக்க முயல்வதா?தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சீர்கேடு குறித்து, நாள் விடாது சுட்டிக்காட்டி வருகிறேன். குற்றங்கள் செய்தவர்களை பிடிப்பதில் தி.மு.க., அரசு காட்டாத முனைப்பை, நியாயமான கோரிக்கைக்கு போராடும் சாம்சங் தொழிலாளர்களை ஒடுக்குவதில் காட்டுவது ஏன்?பழனிசாமிஅ.தி.மு.க., பொதுச்செயலர்.
ஆதரவு
தனியார் மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள தொழிலாளர்களை, தி.மு.க., கூட்டணி கட்சிகளான, வி.சி., தலைவர் திருமாவளவன், இந்திய கம்யூ., மாநில செயலர் முத்தரசன், மார்க்சிஸ்ட் மாநில செயலர் பாலகிருஷ்ணன், காங்கிரஸ் மூத்த தலைவர் தங்கபாலு சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.பாலகிருஷ்ணன்போராட்டத்தில் ஈடுபட்டு வருபவர்களிடம் பேச்சு நடத்தாமல், நிர்வாகத்தின் எடுபிடியாக இருப்பவர்களிடம் பேச்சு நடத்திஉள்ளது. தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டது, தொழிலாளர்களுக்கு விரோதமாக இருப்பது, ஆரோக்கியமானது அல்ல. விரைவில் முதல்வரை நேரில் சந்தித்து, தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும். முத்தரசன்தொழிலாளர்கள் தங்களை தற்காத்துக் கொள்ளவும், பாதுகாத்துக் கொள்ளவும் ஒரு அமைப்பு வேண்டும் என கூறுகின்றனர். சங்கம் தேவை என்பது இன்று, நேற்று உருவானது அல்ல; வெள்ளைக்காரர்கள் ஆட்சி செய்தபோது கூட சங்கம் வைக்கும் உரிமை உண்டு. திருமாவளவன்சங்கத்தை பதிவு செய்வதில் என்ன தயக்கம் இருக்கிறது. வரும் காலங்களில் சங்கம் பதிவு செய்யப்பட்டு, அதன் வாயிலாகவே பேச்சு நடத்த ஏற்பாடு செய்ய வேண்டும். சாம்சங் நிர்வாகத்திற்கு நாங்கள் எதிராக அல்ல; அவர்களின் அடக்குமுறை போக்கிற்கு எதிராக இருக்கிறோம். பன்னாட்டு நிறுவனத்தை எதிர்க்கவில்லை; தொழிலாளர்களை சுரண்டுவதை எதிர்க்கிறோம்.தங்கபாலுமுதல்வரை சந்திக்க நேரம் கேட்டுள்ளோம். அவரை சந்தித்து, பிரச்னைக்கு தீர்வு காண முடியும் என்ற நம்பிக்கை உள்ளது. தமிழகத்திற்கு நல்ல தொழில் முதலீடுகள் வர வேண்டும். வேலைவாய்ப்புகள் வேண்டும் என, முதல்வர் பல முயற்சி எடுத்து வருகிறார். எங்களுடைய முயற்சியும் வெற்றி பெறும்.
ஐகோர்ட்டில் அரசு தகவல்
'போராட்டத்தில் ஈடுபட்ட சாம்சங் நிறுவன தொழிலாளர்களை, சட்டவிரோதமாக காவலில் வைக்கவில்லை' என, சென்னை உயர் நீதிமன்றத்தில் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. சாம்சங் தொழிற்சங்க பொதுச்செயலர் எலன், ராஜபூபதி உள்ளிட்ட எட்டு பேரை, சட்டவிரோதமாக காவலில் வைத்திருப்பதாகவும், அவர்களை விடுவிக்கவும் கோரி, உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்டது.காஞ்சிபுரம் மாவட்ட சி.ஐ.டி.யு., செயலரான முத்துகுமார் தாக்கல் செய்த மனு:சாம்சங் நிறுவன தொழிலாளர்கள் தங்கள் குறைகளை தீர்க்கக் கோரி, அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தொழிலாளர்கள் சேர்ந்து சங்கம் அமைத்து, அதை பதிவு செய்யவும், சி.ஐ.டி.யு., தொழிற்சங்கத்தின் இணைப்பு பெறவும் விரும்புகின்றனர். சங்கத்தை பதிவு செய்ய விண்ணப்பித்தும், சம்பந்தப்பட்ட அதிகாரி நடவடிக்கை எடுக்கவில்லை.போராட்டத்தில் ஈடுபட்டவர்களை, இரவு நேரத்தில் வீட்டுக்கு சென்று சட்டவிரோதமாக கைது செய்துள்ளனர். ஏழு பேரை கைது செய்து, ஸ்ரீபெரும்புதுார் மாஜிஸ்திரேட் முன் ஆஜர்படுத்தினர். அவர்களை சொந்த ஜாமினில் மாஜிஸ்திரேட் விடுவித்தார். அதன்பின், போலீஸ் நிலையத்துக்கு வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்று, சட்டவிரோதமாக அடைத்து வைத்துள்ளனர். போராட்டத்தை ஒடுக்க, அதிகார துஷ்பிரயோகம் செய்கின்றனர்.சாம்சங் இந்தியா ஊழியர்கள் சங்கத்தின் பொதுச்செயலர் எலன், சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டுள்ளார். அவர் எங்கு இருக்கிறார் என தெரியவில்லை. எனவே, சட்டவிரோதமாக காவலில் வைத்திருப்பவர்களை, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி விடுவிக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.இம்மனு, நீதிபதிகள் பி.பி.பாலாஜி, ஜி.அருள்முருகன் அடங்கிய அமர்வில், நேற்று பிற்பகலில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில், வழக்கறிஞர்கள் என்.ஜி.ஆர்.பிரசாத், ஆர்.திருமூர்த்தி ஆஜராகினர். போலீஸ் தரப்பில், கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் தாமோதரன் ஆஜராகி, ''சட்டம் - ஒழுங்கு பிரச்னையால், கடந்த 8ம் தேதி வழக்குப்பதிவு செய்யப்பட்டது.''அதில், எலன் உள்ளிட்ட எட்டு பேர் கைது செய்யப்பட்டு, ஸ்ரீபெரும்புதுார் மாஜிஸ்திரேட் முன் ஆஜர்படுத்தப்பட்டனர். ''அவர்களை காவலில் வைக்க, மாஜிஸ்திரேட் மறுத்து விட்டார். அதனால், அவர்கள் விடுவிக்கப்பட்டனர். அவர்களை சட்டவிரோதமாக காவலில் வைக்கவில்லை,'' என்றார்.இதையடுத்து, 'மனுதாரர் தரப்பில் கூறியபடி சட்டவிரோத காவல் எதுவும் இல்லை என அரசு வழக்கறிஞர் கூறியிருப்பதால், இந்த வழக்கில் மேல் உத்தரவு தேவையில்லை. விசாரணை முடித்து வைக்கப்படுகிறது' என நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.வேறு மாநிலத்திற்கு சாம்சங் போகாது!
தொழிற்சங்க பதிவு வழக்கு: அடுத்த வாரம் விசாரணை
இதற்கிடையில், சாம்சங் இந்தியா தொழிலாளர் சங்கத்தை பதிவு செய்யக் கோரிய விண்ணப்பத்தின் மீது உடனடி நடவடிக்கை கோரி, உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனு, கடந்த வாரம் நீதிபதி மஞ்சுளா முன், விசாரணைக்கு வந்தது.அரசு தரப்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் ரவீந்திரன் ஆஜராகி, ''தங்கள் நிறுவன பெயரை பயன்படுத்தக் கூடாது என, தொழிலாளர் நல துணை ஆணையரிடம், சாம்சங் தரப்பில் ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து, அவர் இதுவரை முடிவெடுக்கவில்லை,'' என்றார்.இதையடுத்து, இரண்டு வாரங்களில் பதில் அளிக்கும்படி, தமிழக அரசு, தொழிற்சங்க பதிவாளர் மற்றும் தொழிலாளர் நல துணை ஆணையருக்கு, நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இந்த வழக்கு, அடுத்த வாரத்தில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.சாம்சங் வேறு மாநிலத்திற்கு செல்லவில்லை. முதலீட்டாளர்கள் விரும்பும் மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. தமிழகத்தில் நிறுவனங்கள் தொழில் துவங்க உகந்த சூழல் நிலவுகிறது. தங்கம் தென்னரசு நிதித்துறை அமைச்சர்
தொழிற்சங்க பதிவு வழக்கு: அடுத்த வாரம் விசாரணை
இதற்கிடையில், சாம்சங் இந்தியா தொழிலாளர் சங்கத்தை பதிவு செய்யக் கோரிய விண்ணப்பத்தின் மீது உடனடி நடவடிக்கை கோரி, உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனு, கடந்த வாரம் நீதிபதி மஞ்சுளா முன், விசாரணைக்கு வந்தது.அரசு தரப்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் ரவீந்திரன் ஆஜராகி, ''தங்கள் நிறுவன பெயரை பயன்படுத்தக் கூடாது என, தொழிலாளர் நல துணை ஆணையரிடம், சாம்சங் தரப்பில் ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து, அவர் இதுவரை முடிவெடுக்கவில்லை,'' என்றார்.இதையடுத்து, இரண்டு வாரங்களில் பதில் அளிக்கும்படி, தமிழக அரசு, தொழிற்சங்க பதிவாளர் மற்றும் தொழிலாளர் நல துணை ஆணையருக்கு, நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இந்த வழக்கு, அடுத்த வாரத்தில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நடவடிக்கை எடுப்பது இயல்பு'
இந்த விவகாரம் தொடர்பாக, சென்னையில் அமைச்சர் தங்கம் தென்னரசு அளித்த பேட்டி: சாம்சங் பிரச்னையில் தொழிலாளர்கள் நலன் முழுதுமாக காக்கப்பட வேண்டும். படித்த இளைஞர்களுக்கு, தொடர்ந்து சிறந்த வேலைவாய்ப்புகளை பெற வேண்டும் என்ற அக்கறையுடன் அரசு இப்பிரச்னையை அணுகியது. பேச்சின் பயனாக, தொழிலாளர்கள் கோரிக்கைகளை ஏற்க சாம்சங் நிறுவனம் முன்வந்துள்ளது. சி.ஐ.டி.யு., தங்கள் சங்க பதிவு தொடர்பாக போராட்டம் நடத்துகிறது. இந்த வழக்கு, நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. வழக்கு முடிவு அடிப்படையில், தொழிலாளர் நலத்துறை உரிய நடவடிக்கை எடுக்கும். இந்த விபரம், சி.ஐ.டி.யு.,க்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. தொழிலாளர்கள் நலன், வேலைவாய்ப்பை எதிர்நோக்கி உள்ள படித்த இளைஞர்களின் எதிர்கால நலன் கருதி, சி.ஐ.டி.யு., போராட்டத்தை கைவிட வேண்டும்.யாரும் சிறையில் அடைக்கப்படவில்லை. 'சாம்சங் இந்தியா தொழிலாளர் சங்கம்' என பதிவு செய்ய, சி.ஐ.டி.யு., சார்பில், ஜூலை 2ல் தொழிலாளர் நலத் துறையில் விண்ணப்பம் அளிக்கப்பட்டது. அதில், சில குறைபாடுகள் இருப்பது அறியப்பட்டது. ஆக., 20ல், சாம்சங் நிறுவனம் எதிர்ப்பு தெரிவித்தது. அம்மனு, சி.ஐ.டி.யு.,க்கு அனுப்பப்பட்டது. அவர்கள் பதில் அளித்தனர். அதற்கு சாம்சங் அக்., 1ல் பதில் அளித்தது. இதற்கிடையில், சி.ஐ.டி.யு., செப்., 30ல் நீதிமன்றம் சென்றது. நீதிமன்றம் எடுக்கும் முடிவை ஏற்பதாகக் கூறுகிறோம். சி.ஐ.டி.யு.,வுக்கும், அரசுக்கும் எந்த விரோதமும் இல்லை. அனுமதியின்றி போராட்டம் நடத்தப்பட்டால், எந்த அணுகுமுறையை மாவட்ட நிர்வாகம் பின்பற்றுமோ, அதுதான் பின்பற்றப்படுகிறது. அடக்குமுறை எதுவும் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.