உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அதிகாரிகளுக்கு ஏழரை ஆரம்பம்:சிறையில் தள்ள அதிரடி உத்தரவு

அதிகாரிகளுக்கு ஏழரை ஆரம்பம்:சிறையில் தள்ள அதிரடி உத்தரவு

மதுரை :தமிழகத்தில், கோர்ட் தீர்ப்பை மதிக்காத அதிகாரிகளுக்கு, ஏழரை ஆரம்பமாகி உள்ளது. ஏற்கனவே பல்வேறு அரசு துறை அலுவலர்களுக்கு, நீதிமன்றங்கள் கண்டனம் தெரிவித்த நிலையில், நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், திருநெல்வேலி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலருக்கு, ஒரு வாரம் சிறை தண்டனை மற்றும் 5,000 ரூபாய் அபராதம் விதித்து, உயர் நீதிமன்ற மதுரை அமர்வு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரியைச் சேர்ந்தவர் ஹெலின் ரோனிகா ஜேசுபெல். இவர், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:திசையன்விளை சமாரியா செயின்ட் ஜான்ஸ் மேல்நிலைப்பள்ளியில், தற்காலிக உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றி வந்தேன். இப்பள்ளியில், ஏற்கனவே பணியாற்றி வந்த ஆசிரியர், பணியிட மாற்றம் செய்யப்பட்டதால், காலியாக இருந்த அந்த பணியிடத்தில் நியமிக்கப்பட்டேன். என் நியமனத்தை அங்கீகரிக்க, பள்ளி நிர்வாகம், மாவட்டக் கல்வி அதிகாரிக்கு பரிந்துரை செய்தது.பல காரணங்களை கூறி, என்னை பணி நிரந்தரம் செய்ய, மாவட்டக் கல்வி அதிகாரி மறுத்துவிட்டார். என் நியமனத்தை அங்கீகரிக்கக்கோரி, உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தேன்.

அங்கீகரிக்கவில்லை

அதை விசாரித்த நீதிமன்றம், 2023ல் என் நியமனத்தை அங்கீகரிக்கவும், பணி நியமன தேதியிலிருந்து, அதற்குரிய பணப்பலன்களை வழங்கவும் உத்தரவிட்டது. ஆனால், இதுவரை என் நியமனத்தை அங்கீகரிக்கவில்லை.எனவே, நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாத, பள்ளிக்கல்வித்துறை செயலர், இயக்குநர், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஆகியோர் மீது, நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.இந்த மனு, நீதிபதி எல்.விக்டோரியா கவுரி முன் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி பிறப்பித்த உத்தரவு:கடந்த 2019ம் ஆண்டில் இருந்து ஒப்புதல் அளிக்க, நீதிமன்றம் உத்தரவிட்டதை நிறைவேற்றவில்லை. அதற்கு மாறாக, 2024 ஆக., 1 முதல் ஒப்புதல் அளித்ததாக, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார்; இது ஏற்புடையதல்ல.

அறிக்கை தாக்கல்

அவர், நீதிமன்றத்தில் ஆஜராக, நோட்டீஸ் பிறப்பித்தும் ஆஜராகவில்லை; நீதிமன்ற உத்தரவும் நிறைவேற்றப்படவில்லை. எனவே, திருநெல்வேலி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சின்னராசுக்கு, ஒரு வாரம் சாதாரண சிறை தண்டனை மற்றும் 5,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது. நீதிமன்ற உத்தரவை முறையாக நிறைவேற்றி, பிப்.26ல் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.இவ்வாறு, உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.சமீப காலமாக, உயர்நீதிமன்றங்கள் பிறப்பிக்கும் உத்தரவுகளை நிறைவேற்றாத, அதிகாரிகளின் செயல்களுக்கு, நீதிமன்றம் அவ்வப்போது அதிருப்தியையும், கண்டனத்தையும் தெரிவித்து வருகிறது. இந்நிலையில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், முதன்மைக் கல்வி அலுவலருக்கு தண்டனை விதிக்கப்பட்டிருப்பது, அரசு அதிகாரிகள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 17 )

..
பிப் 20, 2025 21:23

உயர் அதிகாரிகளுக்கு ஆணவம் அதிகம் இப்படி தண்டனை தந்தால்தான் பார்த்து அடுத்தவன் திருந்துவான்


தர்மராஜ் தங்கரத்தினம்
பிப் 20, 2025 20:01

திராவிட மாடல் அரசின் நிர்வாகத்தில் ஒரு விஷயம் கூட தவறோ, குழப்பமோ இல்லாமல் நடந்தேறுவது இல்லை .....


Kalyanaraman
பிப் 20, 2025 19:54

இந்த நீதிமன்ற அவமதிப்பு, தாமதம் போன்ற அவலங்களுக்கெல்லாம் காரணம் நம் சட்டங்களுக்கு முதுகெலும்பு இல்லை. பல வருடங்கள் வழக்குகள் விசாரணை என்ற பெயரில் இழுத்துக் கொண்டே போகும். கடும் தண்டனை இருந்தால் மட்டுமே குற்றங்கள் குறையும்.


rama adhavan
பிப் 20, 2025 19:53

ஒரு வாரம் சிறை : அப்போ வேலை காலி. எனவே இவரை காப்பாற்ற மேல் முறையீடு செய்வார்கள். இந்த விவகாரத்தில் அரசின் மெத்தனமும் கண்டிப்பாக இருக்கும். அதனையும் ஆராய்ந்து அவர்களுக்கும் தண்டனை தர வேண்டும்.


VIDHURAN
பிப் 20, 2025 16:45

இந்த விஷயத்தில் நீதிமன்ற அவமதிப்பிற்கு அரசியல் காரணங்கள் இருப்பதாக நான் நினைக்கவில்லை. அரசு அதிகாரிகளின் அறியாமையும் அவர்களது அலட்சியப்போக்கும் தான் காரணம் என்று நினைக்கிறேன். என்றாவது ஒருநாள் அரசிடம் சம்பளம் பெரும் நாம், பதில் கூறவேண்டும் என்ற பொறுப்பும் கடமை ஆற்றவேண்டும் என்ற எண்ணமும் இல்லாமலேயே பலர் பெரிய அரசு பதவிகளில் இருக்கிறார்கள். அவர்களுக்கு நீதிமன்றம் தான் துணை ஆனால் எத்தனை சாதாரண மக்களுக்கு உயர் நீதிமன்றம் வரை சென்று வழக்கு நடத்த முடியும்?


jss
பிப் 20, 2025 16:34

அதிகாரிக்கு சிறை தண்டனையா? அது ஆளும் கட்சிஅதிகாரிக்குமா? போய்யா போ! பகல் கனவு காணாதே. அப்புறம் நீதிபதியையே உள்ளே தள்ளி விடுவார்கள. ஜாக்கிரதை.


P.Sekaran
பிப் 20, 2025 10:26

இதற்கு வக்காளத்து வாங்க திராவிட மாடல் அரசு மேல் கோர்ட்டுக்கு செல்லுமே?


Malarvizhi
பிப் 20, 2025 09:51

பொதுவாக அரசியல்வாதிகள் சொல்வதைத்தான் அதிகாரிகள் கேட்பார்கள். ஏனென்றால், உடனடி பணியிட மாற்றம், பதவி உயர்வு நிறுத்திவைப்பு போன்ற நடவடிக்கைகளை பதவியில் உள்ள அரசியல்வாதிகளால்தான் உடனடியாக செய்ய முடியும் கோர்ட்டால் பல வருடங்கள் கழித்து, வாய்தா மேல் வாய்தா, தீர்ப்பு வழங்கி, தாமதமாகத்தான் செய்ய முடியும். எனவே கோர்ட் தீர்ப்பின்படி நடக்க அதிகாரிகள் தாமதமாகத்தான் செயல்படுவார்கள். இந்த விஷயத்தை நீதிமன்றங்கள் கடுமையாக அணுக கேட்டு கொள்கிறேன்.


V வைகுண்டேஸ்வரன்,Chennai
பிப் 20, 2025 07:02

பணி நீக்கம் செய்யப்பட வேண்டும்


Iniyan
பிப் 20, 2025 06:46

இதே மாதிரி விரிவாக, சரியான தீர்ப்பு சொல்லாத நீதிபதிகளும் சிறையில் தள்ள வேண்டும். இந்திய நீதி துறை புரையோடி போய் இருக்கிறது


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை