நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் முன்னுதாரணமாக இருக்க வேண்டும்: அமைச்சர்களுக்கு வெங்கையா அறிவுரை
சென்னை : “நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில், அமைச்சர்கள், எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள் முன்னுதாரணமாக இருக்க வேண்டும்,” என, முன்னாள் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு பேசினார்.வி.ஐ.டி., பல்கலை மாணிக்க விழா மற்றும் ராஜம்மாள் கோவிந்தசாமி டவர், சரோஜினி நாயுடு மாணவியர் விடுதி துவக்க விழா, வேலுாரில் நேற்று நடந்தது. பல்கலை வேந்தர் ஜி.விஸ்வநாதன் தலைமை வகித்தார். நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் முன்னிலை வகித்தார். விதைத்து வருகிறார்
சிறப்பு விருந்தினராக பங்கேற்ற வெங்கையா நாயுடு பேசியதாவது: வி.ஐ.டி., பல்கலை வேந்தர் விஸ்வநாதன் நான்கு தலைமுறையை கண்டவர். இளைய தலைமுறையினருக்கு கல்வியோடு, தன்னம்பிக்கையையும் விதைத்து வருகிறார். அவரின் ஒழுக்கம், அர்ப்பணிப்பு, கடின உழைப்பு ஆகியவையே பல்கலையின் வளர்ச்சிக்கு காரணம்.அவர், 1984ல், பொறியியல் கல்லுாரியை துவக்கினார். கடின உழைப்பின் காரணமாக, 2001ல், பல்கலையாக மாற்றினார். 180 மாணவர்களுடன் துவங்கிய கல்லுாரியில், தற்போது ஒரு லட்சம் பேர் படிக்கின்றனர்.விஸ்வநாதனின் அயராத முயற்சியால், போபால் வரை விரிவடைந்துள்ளது. டில்லியிலும் அவர் பல்கலையை துவக்க வேண்டும்.இந்தியாவில், 27 சதவீதம் பேருக்கு உயர் கல்வி கிடைக்கிறது. உலக நாடுகளில் வசிப்போர் இந்தியாவை அங்கீகரிக்கின்றனர். நவீன தொழில்நுட்பம் வாயிலாக கல்வி போதிக்கப்படுகிறது. ஆனால், நம் நாட்டில், 18 சவீதம் பேர் வறுமை கோட்டுக்கு கீழ் வாழ்கின்றனர். அவர்களுக்கு அடிப்படை கல்வி, மருத்துவம் கிடைப்பதில் இடைவெளிகள் உள்ளன. அதனால், கல்வி, மருத்துவத்தை இலவசமாக வழங்க வேண்டும். வேளாண் துறைக்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். ஏனெனில் நாட்டில், 56 சவீதம் பேர் வேளாண் துறையை சார்ந்து வாழ்கின்றனர். அதனால், இத்துறையில் உள்ள சிக்கல்களை, மத்திய, மாநில அரசுகள் தீர்க்க வேண்டும். வசதிகள் கிடைக்கும்
எல்லாவற்றையும் அரசே செய்து விடும் என்ற தவறான எண்ணம் மக்களிடம் உள்ளது. அரசோடு இணைந்து, தனியார் துறையும் செயல்பட்டால் தான், மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் கிடைக்கும். தனியார் நிறுவனங்கள், கல்வி, சுகாதாரத்தில் அதிக கவனம் செலுத்தி, கிராம மக்களுக்கு கிடைக்க உதவி செய்ய வேண்டும்.நாட்டில் நீர்நிலை ஆக்கிரமிப்புகள் அதிகரித்து வருகின்றன. நீர்நிலைகளை பாதுகாத்தால் தான் சுகாதாரமான குடிநீர் கிடைக்கும். நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில், அமைச்சர்கள், எம்.பி., மற்றும் எம்.எல்.ஏ.,க்கள் முன்னுதாரணமாக இருக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.பல்கலை வேந்தர் விஸ்வநாதன் பேசுகையில், “உலகளவில் கல்விக்காக செலவழிப்பதில் இந்தியா, 155வது இடத்தில் உள்ளது. பொருளாதாரத்தில் ஐந்தாவது இடத்துக்கு முன்னேறினாலும், தனி நபர் வருமானத்தில், 136வது இடத்தில் உள்ளது. இதனால் வளர்ச்சி சிலரிடம் மட்டுமே குவிகிறது. மத்திய, மாநில அரசுகள் கல்விக்கு கூடுதலாக செலவழிக்க வேண்டும். அப்போது தான் நாடு வளரும்; ஏழ்மை குறையும்,” என்றார்.விழாவில், ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி செல்வராஜ், ஓய்வுபெற்ற ஐ.பி.எஸ்., அதிகாரி ராஜேந்திரன், தி.மு.க., - எம்.பி., கதிர்ஆனந்த் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.