உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ராமர் கோவிலை காட்டி திசை திருப்பும் பா.ஜ., முதல்வர் ஸ்டாலின் பேச்சு

ராமர் கோவிலை காட்டி திசை திருப்பும் பா.ஜ., முதல்வர் ஸ்டாலின் பேச்சு

சென்னை:''லோக்சபா தேர்தலில், அ.தி.மு.க., - பா.ஜ., அனைத்து இடங்களிலும் தோற்கடிக்கப்பட வேண்டும். இண்டியா கூட்டணி வெற்றியில்தான், இந்தியாவின் எதிர்காலம் உள்ளது,'' என, முதல்வர் ஸ்டாலின் கூறினார்.சென்னை, அண்ணா நகரில் நடந்த, மொழிப்போர் தியாகிகளுக்கான வீரவணக்க நாள் பொதுக் கூட்டத்தில், முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:மத்தியில் பா.ஜ., ஆட்சிக்கு வந்ததில் இருந்து, தமிழை புறக்கணித்து, ஹிந்தி மொழியை திணிக்கிறது. நாமும் தொடர்ந்து எதிர்த்து வருகிறோம். வட மாநில மக்கள் பா.ஜ.,வுக்கு அதிகம் ஓட்டளிக்கின்றனர். ஆனால், ஹிந்தி பேசும் வட மாநில மக்களுக்கு, அக்கட்சி எதுவும் செய்யவில்லை. கொரோனாவை விட கொடியது பா.ஜ., அரசு. தற்போது ராமர் கோவிலை காண்பித்து, மக்களை திசை திருப்ப பார்க்கின்றனர். சமூக வலைதளங்களில், 'எங்களுக்கு படிப்புதான் தேவை' என, சிறுவன் ஹிந்தியில் பேசிய வீடியோ, சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.இந்த விழிப்பணர்வு ஏற்பட்டு விடக் கூடாது என, பா.ஜ., நினைக்கிறது. வரும் லோக்சபா தேர்தலில், வட மாநிலங்களிலும் பா.ஜ., வெற்றி பெற முடியாது.தி.மு.க., இளைஞர் அணி மாநாட்டில், 'ஹிந்துக்களின் உண்மையான எதிரி பா.ஜ., என்பதை அம்பலப்படுத்துவோம்' என, தீர்மானம் நிறைவேற்றி உள்ளோம். இதை எல்லாரும் உறுதிமொழியாக ஏற்க வேண்டும்.பா.ஜ., அரசின் தோல்விகளை பட்டியலிட்டால், 2014ல், 414 ரூபாயாக இருந்த சமையல் சிலிண்டர் விலை, தற்போது 918 ரூபாய். இப்படி அத்தியாவசியப் பொருட்கள் விலை ஏற்றத்தை, பட்டியலிட்டுக் கொண்டே போகலாம். இவ்வளவு நாள் பா.ஜ.,வுடன் இருந்து, அவர்களின் மக்கள் விரோத செயலுக்கு, ஆமாம் சாமி போட்டவர் அ.தி.மு.க.,வின் பழனிசாமி. தமிழகத்தின் உரிமைகள் அனைத்தையும், டில்லியில் அடகு வைத்தவர். பா.ஜ.,வுடன் சேர்ந்து சிறுபான்மை மக்களுக்கு செய்த துரோகத்தை மறைத்து, தற்போது நாடகம் போடுகிறார். ஆனால், சிறுபான்மை மக்கள், அவர் செய்த துரோகத்தை மறக்க மாட்டார்கள்.லோக்சபா தேர்தலில் அ.தி.மு.க., - பா.ஜ., அனைத்து இடங்களிலும் தோற்கடிக்கப்பட வேண்டும். இண்டியா கூட்டணி வெற்றியில்தான், இந்தியாவின் எதிர்காலம் உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை