விஜய் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்
சென்னை: கரூரில் நடந்த உயிர் இழப்புகள் சம்பவத்திற்கு பின், த.வெ.க., தலைவர் விஜய் வீடு முன், திடீர் போராட்டம் நடப்பதால், அவரது வீட்டிற்கு, தமிழக போலீஸ் மற்றும் சி.ஆர்.பி.எப்., வீரர்கள் உடன், கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. கரூரில் நேற்று முன்தினம் விஜய் நடத்திய மக்கள் சந்திப்பு கூட்ட நெரிசலில் சிக்கி, 40 பேர் பலியாகினர். இச்சம்பவத்திற்கு பின், சென்னை நீலாங்கரை கபாலீஸ்வரர் நகரில் உள்ள விஜய் வீடு முன், பல்வேறு தரப்பினர் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்தனர். நேற்று தமிழக மாணவர் அமைப்பினர் 20க்கும் மேற்பட்டோர், திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி, பெயர், முகவரி உள்ளிட்ட விபரங்களை எழுதி வாங்கிய பின் விடுவித்தனர். விஜய் வீட்டிற்கு ஏற்கனவே மத்திய அரசு, 'ஒய்' பிரிவு பாதுகாப்பு அளித்துள்ளது. இப்பிரிவில் உள்ள சி.ஆர்.பி.எப்., வீரர்கள் எட்டு பேர், சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நீலாங்கரை போலீசாரும் பாதுகாப்பு அளித்து வருகின்றனர். கரூர் உயிர் பலி சம்பவத்திற்கு பின், விஜய் வீட்டுக்கு கூடுதல்பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அந்த வகையில், மேலும் ஐந்து சி.ஆர்.பி.எப்., வீரர்கள் துப்பாக்கி ஏந்தியபடி, பாதுகாப்பு பணியில் ஈடு படுத்தப்பட்டு உள்ளனர். தமிழக காவல் துறையின் நீலாங்கரை உதவி கமிஷனர், இன்ஸ்பெக்டர் தலைமையில், 50 போலீசார் பாதுகாப்பு பணியில் உள்ளனர். இவர்கள் பல கட்ட சோதனைக்கு பின், விஜய் வீடு அருகே மக்கள் செல்ல அனுமதி அளித்து வருகின்றனர். ஐந்துக்கும் மேற்பட்ட இடங்களில் தடுப்புகள் அமைத்து, கார் உள்ளிட்ட வாகனங்களும் சோதனைக்கு உட்படுத்தப் படுகின்றன. இந்நிலையில், நேற்று மாலை டி.ஜி.பி., அலுவலகத்திற்கு வந்த இ-மெயிலில் விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து அவரது வீட்டில் வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் சோதனை நடத்தினர்.மேலும், விஜய் வீட்டுக்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.